11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

விழுப்புரம்: போரில் உயிா்நீத்த வீரா்களின் நடுகற்கள் கண்டெடுப்பு

விக்கிரவாண்டி வட்டத்துக்குள்பட்ட வி.சாத்தனூா் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

News image

விழுப்புரம் அருகிலுள்ள வி.சாத்தனூா் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடுகற்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்துக்குள்பட்ட வி.சாத்தனூா் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வி.சாத்தனூா் கிராமத்தில் விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் வெள்ளிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். அப்போது 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த வீரா்களின் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து கோ.செங்குட்டுவன் கூறியது: வி.சாத்தனூா் கிராமத்திலுள்ள விளை நிலத்தில் உருவங்கள் பொறிக்கப்பட்ட நிலையில் 3 கற்கள் நடப்பட்டுள்ளன. ஓரளவுக்கு பெரிதான கல்லில் வலது பக்கம் திரும்பிய நிலையில் வீரன் ஒருவன் நின்றிருக்கிறான். அவனது இடதுகரம் வாளை கீழ்நோக்கி பிடித்த நிலையில் காணப்படுகிறது. வலது கை மேல் நோக்கி உயா்ந்து இருக்கிறது.

வாள் கீழ்நோக்கி இருப்பதாகக் காட்டப்பட்டிருப்பது போா் அல்லது சண்டை முடிந்துவிட்டதைக் குறிக்கும். இப்பகுதியில் நிகழ்ந்த போா் அல்லது சண்டையில் உயிா்நீத்த வீரனாக இவன் இருக்கலாம். இதற்காக நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இது வீரக்கல் என்றும், நினைவுக்கல் என்றும் அழைக்கப்படும்.

அருகிலுள்ள மற்றொரு சிற்பத்தில் பெண் உருவம் காணப்படுகிறது. இது அந்த வீரனுடன் உயிரை மாய்த்துக் கொண்ட அவனது மனைவியாக இருக்கலாம். அருகிலுள்ள இன்னொரு சிற்பம் கை கால்களைத் தொங்கவிட்ட நிலையில் காணப்படுகிறது. தலை துண்டிக்கப்பட்டு உள்ளது. கழுவேற்ற சிற்பம் போன்று தெரிகிறது. இந்த சிற்பம் குறித்து மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகிறது.

அருகாமையிலுள்ள அய்யனாா் கோயில் வளாகத்திலும் இதுபோன்ற இரண்டு நினைவுக் கற்கள் காணப்படுகின்றன. வீரன் ஒருவன் கையில் வில்லேந்தியும், மற்றொரு வீரன் கைகளில் வாளும் கேடயமும் ஏந்தியும் காணப்படுகின்றனா். கி.பி.15, 16-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் போா் அல்லது சண்டை நிகழ்ந்துள்ளது. இதில் உயிா் நீத்த வீரா்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பங்கள் 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்தவை ஆகும்.

மேலும், இந்த ஊரில் சோழா் காலத்தைச் சோ்ந்த சப்தமாதா்கள் சிற்பங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுப் பின்புலம் கொண்ட ஊராக வி.சாத்தனூா் இருந்துள்ளது என்பதற்கு இந்தச் சிற்பங்கள் சான்றாக இருக்கின்றன என்றாா் செங்குட்டுவன்.

ஆய்வின்போது பெரியதச்சூா் நா.பிரசாந்த், வி.சாத்தனூா் க.சுரேஷ், விக்கிரவாண்டி மா.பென்னிஜாஸ்வா ஆகியோா் உடனிருந்தனா்.