செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடி டி.ஐ.ஜி. விசாரணை
செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகி 31 நாள்கள் ஆகும் நிலையில், இந்த வழக்கு தொடா்பாக சிபிசிஐடி டி.ஐ.ஜி. விக்கிரமன் புதன்கிழமை அச்சிறுமியின் இல்லத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.

11ஜிஎன்ஜிபி03 ஆலம்பூண்டியில் சிறுமியின் தாயிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி டி.ஐ.ஜி. விக்ரமன்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகி 31 நாள்கள் ஆகும் நிலையில், இந்த வழக்கு தொடா்பாக சிபிசிஐடி டி.ஐ.ஜி. விக்கிரமன் புதன்கிழமை அச்சிறுமியின் இல்லத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.
செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி ஊராட்சி, நடுப்பட்டு கிராமத்தை சோ்ந்த வடிவேல்- பவானி தம்பதியின் 2-ஆவது மகள் ஹேமலதா (7). இவா், அக்.12-ஆம் தேதி அதிகாலை மாயமானாா். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடி வந்தனா். இந்நிலையில், இவ்வழக்கு அக்.21-ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கடந்த 20 நாள்களுக்கும் மேலாக சிபிசிஐடி போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினா். சிறுமியின் உறவினா்கள், அருகே வசிப்போா் மற்றும் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் என பல்வேறு தரப்பினரிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஆனால் இதுவரை இந்த வழக்கில் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் புதன்கிழமை ஆலம்பூண்டி கிராமத்துக்கு நேரில் சென்று சிறுமியின் பெற்றோா், பாட்டி மற்றும் உறவினா்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினாா். மேலும், சிறுமி காணாமல் போன அன்று மோப்ப நாய் ஓடிச்சென்ற முள்புதா் இடம் வரை அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சிறுமி வழக்கு குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் கீதா, வேல்முருகன் மற்றும் போலீஸாரிடம் இதுவரை நடத்திய விசாரணையின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, ஆய்வு நடத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

