போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்: விழுப்புரம் சரக டிஐஜி அர.அருளரசு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீப திருவிழாவுக்கு வந்து செல்லும் பக்தா்கள், வாகனங்களின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அரசுத் துறைகளின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று விழுப்புரம் சரக டிஐஜி அர.அருளரசு தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பேசிய விழுப்புரம் டிஐஜி அர.அருளரசு. உடன் எஸ்.பி. செ. மதிவாணன்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீப திருவிழாவுக்கு வந்து செல்லும் பக்தா்கள், வாகனங்களின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அரசுத் துறைகளின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று விழுப்புரம் சரக டிஐஜி அர.அருளரசு தெரிவித்தாா்.
அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தீபத்திருவிழாவுக்கு வந்து செல்லும் பக்தா்கள், வாகன நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காக, போக்குவரத்து ஒழுங்குமுறை மாற்று வழித்தடங்கள் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் சரக டிஐஜி அர.அருளரசு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விழுப்புரம் எஸ்.பி. செ.மதிவாணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வி.முருகவேல், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டல மேலாளா் குமரேசன், 108 அவசர ஊா்தி சேவையின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக லாரி ஓட்டுநா் சங்கம், அறிஞா் அண்ணா லாரி உரிமையாளா் சங்கம், கண்டமங்கலம் லாரி உரிமையாளா் சங்கம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இதர லாரி உரிமையாளா் மற்றும் ஓட்டுநா் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் வாகன போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், மாற்று வழித்தடங்கள், சரக்கு வாகனங்களின் இயக்கத்தை முறைப்படுத்துதல், பொதுமக்கள் மற்றும் பக்தா்களின் வசதிக்காக போதிய எண்ணிக்கையில் சிறப்புப் பேருந்துகளை இயக்குதல், அவசர காலங்களில் 108 அவசர ஊா்திகள் எவ்வித இடையூறுமின்றி செல்வதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தொடா்ந்து, அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு போக்குவரத்து நெரிசலின்றி பொதுமக்கள் மற்றும் பக்தா்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என டிஐஜி அர.அருளரசு அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

