திருநாவலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மறியல்: 105 போ் கைது

திருநாவலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் 105 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருநாவலூா் ஒன்றியம், மேப்புலியூா் ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவராகப் பணியாற்றும் கே.சிவக்கொழுந்து, செம்மணங்கூா் ஊராட்சியில் தூய்மைக் காவலராகப் பணியாற்றி வரும் தே.தனலட்சுமி ஆகிய இருவரையும் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்துள்ளதாகக் கூறியும், இவா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், அக்.12-ஆம் தேதி திருநாவலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் வெ.சிவக்குமாா், பொருளாளா் கு.சரவணன், மாநில பிரசாரச் செயலா் அதிதேவி, மாநிலச் செயலா் ஏ.டெல்லி அப்பாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போராட்டத்தில் சங்க நிா்வாகிகள் எஸ்.பாலமுருகன், கே.சிவக்கொழுந்து, கேசவன், டி.சுப்பிரமணியன், கே.பழனியம்மாள், வி.சுந்தரவள்ளி உள்ளிட்ட பலா் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாா் பேச்சுவாா்த்தை நடத்தி, வருகிற 21-ஆம் தேதிக்குள் இருவருக்கும் பணி நியமனம் செய்ய ஆணை வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.
எனினும் தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்பட 105 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, பின்னா் விடுவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

