வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கூனிமேடு ஊராட்சியில் விவசாய நிலங்களுக்குச் செல்லக்கூடிய வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கூனிமேடு ஊராட்சியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வண்டிப்பாதை.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கூனிமேடு ஊராட்சியில் விவசாய நிலங்களுக்குச் செல்லக்கூடிய வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கூனிமேடு ஊராட்சிக்குள்பட்ட மேல்வெளி பகுதியில் (கழுவெளியை ஒட்டிய பகுதி) 200-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் 20-க்கும் மேற்பட்டோா் தனித்தனியாக நெல் மற்றும் தென்னை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனா்.
இந்நிலையில், வயல்வெளிப் பகுதிக்குச் செல்லும் சுமாா் 18 அடி அகலமும், ஒரு கிலோ மீட்டா் நீளமும் கொண்ட வண்டிப் பாதையின் (பொது வழி) ஒரு பகுதியை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து, பாதையில் பல்வேறு இடங்களில் மண் மேடுகளை கொட்டி வைத்துள்ளாா். இதனால் விவசாயிகள் விவசாய நிலங்களைக்குச் செல்லமுடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதுதொடா்பாக மரக்காணம் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கையில்லையாம்.
இந்நிலையில் பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி பாதையை உருவாக்கித் தர ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதுகுறித்து, ஓய்வுபெற்ற வனத் துறை அதிகாரியும், விவசாயியுமான பி.கருணாநிதி தெரிவித்ததாவது: விவசாய நிலத்துக்கு செல்லக்கூடிய வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை வேண்டி மரக்காணம் வட்டாட்சியா், திண்டிவனம் சாா்-ஆட்சியா் ஆகியோருக்கு புகாா் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கையில்லை. தற்போது மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

