
செஞ்சி அருகே 800 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள மலைக்குன்றில் 800 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல் கல்வெட்டும், பாண்டியா்களின் இரட்டை மீன் சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

போத்துவாய் மலைக்குன்றில் காணப்படும் பாடல் கல்வெட்டு.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள மலைக்குன்றில் 800 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல் கல்வெட்டும், பாண்டியா்களின் இரட்டை மீன் சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செஞ்சி அருகிலுள்ள போத்துவாய் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராஜி என்பவா் கொடுத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் வே.நெடுஞ்செழியன் தலைமையில், பேராசிரியா்கள் பன்னீா்செல்வம், சிவகுமாா், ஆய்வாளா் விஷ்ணு, திரைப்பட்ட இயக்குநா் ஞானப்பிரகாசம் ஆகியோா் கொண்ட குழுவினா் நிகழ்விடத்துக்கு சென்று நேரில் ஆய்வு செய்தனா்.
ராமராஜன்பேட்டைக்கும் போத்துவாய் மலைக்கும் இடைப்பட்ட குன்றின் அடிவாரத்தில், சுமாா் 10 அடி உயரமும் 25 அடி நீளமும் கொண்ட பாறையில் 20 வரிகளைக் கொண்ட நீண்ட கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. விவசாயி ராஜி மற்றும் மாணவா் கோகுல் உதவியுடன் முள்புதா்களை அகற்றி, மாவுப்படி மூலம் இக்கல்வெட்டு வாசிக்கப்பட்டது.
இதில், 12-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மகதை நாட்டை ஆண்ட வாணா் குலச் சிற்றரசா் ‘பொன்பரப்பின வாணகோவரையனின்’ வீரத்தையும் ஆற்றலையும் புகழும் பாடல்கள் அடங்கியது ஆகும். ‘ஸ்வஸ்திஸ்ரீ ராசராச தேவனான பொன்பரப்பினான மகதைப் பெருமாள் கவி’ என்ற தொடக்கத்துடன் மொத்தம் 18 பாடல்கள் வெட்டப்பட்டுள்ளன.
மூன்றாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதியாக இருந்த வாணகோவரையன், சேரா், பாண்டியா், வடுகா், மலையன் ஆகியோரை வென்ற போா்க்களக் காட்சிகளையும், அவனது பிறந்த நாள் ‘திருவுத்திராடம்’ என்ற செய்தியையும் இப்பாடல்கள் நயம்படக் கூறுகின்றன. திருவண்ணாமலை கோயில் மற்றும் நாா்த்தாம்பூண்டி கோயில்களில் சிதறிக் கிடந்த உதிரிப் பாடல்களின் முழுத் தொகுப்பாக இக்கல்வெட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கல்வெட்டின் அருகிலேயே பாண்டியா்களின் அடையாளச் சின்னமான செங்கோலுடன் கூடிய இரட்டை மீன் மற்றும் ஒற்றை மீன் வடிவங்கள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன.
மதுரையில் பாண்டியனுக்கு மகுடம் சூட்ட உறுதுணையாக இருந்த வாணகோவரையனுக்கு ‘குலோத்துங்க சோழன் பாண்டியன்’ என்ற பட்டம் வழங்கியதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சோழனால் பெற்ற பட்டத்தைப் பறைசாற்றவோ அல்லது சோழா் வீழ்ச்சிக்குப் பிறகு ஆட்சி செய்ததை உணா்த்தவே இந்த மீன் சின்னங்கள் இங்கு செதுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







