1000 ஆண்டு பழமையான அரூர் ஆஞ்சனேயர் கோயில்: புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை!
ஆரூர் ஆஞ்சனேயர் கோயிலை மீட்க நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக..

அரூர் ஆஞ்சனேயர் கோயில் - DPS
அரூரில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான மேற்கு நோக்கி காட்சி தரும் ஆஞ்சனேயர் கோயிலைப் புனரமைக்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
"அரி" என்றால் விஷ்ணு. "அரியூர்" என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்டு, பின்னர் "அரூர்" என மருவிய இந்த பூமி, ஆயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமையும் ஆன்மிக வளமும் கொண்ட திருத்தலமாக விளங்குகிறது.
விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்களைத் தன்னகத்தே கொண்டது அரூர். இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மேற்கு நோக்கிய ஆஞ்சனேயர் கோயில் தற்போது பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.

மேற்கு நோக்கிய அபூர்வ ஆஞ்சனேயர்
இந்து ஆகம விதிகளின்படியும் வரலாற்றுச் சான்றுகளின்படியும், மேற்கு பார்த்த ஆஞ்சனேயர் கோயில்கள் மிகவும் அபூர்வமானவையாக கருதப்படுகின்றன.
இறை சரணாகதி
இத்தலத்தின் மூலவர் விஷ்ணு / நரசிம்மர் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார். அவரை வணங்கும் விதமாக அனுமன் மேற்கு நோக்கி ஆகம முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.
வியாசராஜர் பங்களிப்பு
சுமார் 15, 16 - ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகர பேரரசின் ராஜகுரு ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், எதிர்மறை ஆற்றல்களைத் தடுக்க நாட்டின் எல்லைகளில் சுமார் 732 இடங்களில் மேற்கு நோக்கிய வீராஞ்சநேயர் விக்ரகங்களைப் பிரதிஷ்டை செய்தார். இவரது ஆஞ்சனேய விக்ரகங்களின் வால் தலைக்கு மேல் உயர்ந்து நுனியில் மணி இருப்பது சிறப்பு.

சனி தோஷ நிவர்த்தி
மேற்கு திசை, சனி பகவானுடன் தொடர்புடையது. சனி தோஷம், எதிரி தொல்லை, தடைப்படும் காரியங்கள் விலக மேற்கு நோக்கிய அனுமன் வழிபாடு சிறந்தது என்பது ஐதீகம்.
பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை
அபூர்வமான மேற்கு நோக்கிய ஆஞ்சேனேயர் கோயிலை மீண்டும் புனரமைத்து, பக்தர்கள் வழிபடும் வகையில் சீரமைக்க வேண்டும் என அரூர் வாழ் மக்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1000 ஆண்டு பெருமை மிக்க அரூரின் ஆன்மிக அடையாளம் இது. இதனை உடனே மீட்டெடுத்தால் பக்தர்கள் பயனடைவார்கள். சுற்றுலாத் தலமாகவும் மாறும்.
எனவே, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையும், தருமபுரி மாவட்ட நிர்வாகமும் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்தைப் புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





