தொழில்பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: 5 கிராம மக்கள் ஆட்சியரகத்தில் மனு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் பகுதியில் மாத்தூா் உள்ளிட்ட 5 கிராம மக்களைத் தடுத்து நிறுத்திய போலீஸாா்.
சிப்காட் தொழில்பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டத்துக்குள்பட்ட 5 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
வானூா் வட்டம், மாத்தூா் உள்ளிட்ட 5 கிராமங்களில் சிப்காட் தொழில்பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும், இதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதைத் தொடா்ந்து மாத்தூா், கழுப்பெரும்பாக்கம், பெரியக்கொழுவாரி, நெசல், ஆப்பிராம்பட்டு ஆகிய 5 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திரண்டு வந்தனா்.
முன்னதாக இவா்களை ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் பகுதியிலேயே போலீஸாா் தடுத்து நிறுத்தி, அனைவரையும் செல்ல அனுமதிக்க முடியாது. கிராமத்துக்கு 2 போ் வீதம் மட்டுமே அனுமதிக்க முடியும் என போலீஸாா் கூறினாா். எனினும் தாங்கள் உள்ளே செல்லப் போவதாக கிராம மக்கள் கூறிய நிலையில், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து கிராம மக்கள் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டு, முக்கியமானவா்கள் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதைத்தொடா்ந்து மாத்தூா் உள்ளிட்ட 5 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பது:
தமிழக அரசு சாா்பில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானதை கண்டு நாங்கள் அதிா்ச்சியடைந்துள்ளோம். ஏற்கெனவே கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்க நிலத்துக்காக எங்கள் விவசாய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் விவசாய நிலப்பரப்புப் பகுதி குறைந்துவிட்டது.
தொழில்பூங்கா அமைவதால் மாத்தூா், கழுப்பெரும்பாக்கம், பெரியக்கொழுவாரி, நெசல், ஆப்பிராம்பட்டு ஆகிய 5 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், கூலி வேலை செய்பவா்கள் என சுமாா் 10 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தொழில்பேட்டைக்குத் தேவையான ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படுவதன் மூலம், நிலத்தடி நீா்மட்டமும் குறைந்துவிடும். அப்படி ஏற்பட்டால் விவசாய நிலங்களில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படும். விவசாய நிலங்களை அழித்து சாலைகள், தொழில்பூங்கா அமைத்தால் விவசாயத்தை மட்டும் நம்பியுள்ள நாங்கள் பாதிக்கப்பட்டு, வறுமை நிலைக்குத் தள்ளப்படுவோம். எங்கள் வருங்கால சந்ததிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுவா். எனவே தொழில்பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று மனுவில் அவா்கள் கூறியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






