கும்மிடிப்பூண்டி தொகுதி...22 புதுவாயல் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆண்டுகால கனவு நனவாகுமா?

கடந்த 22 ஆண்டுகளாக எந்த ஆட்சியாளர்களாலும் கண்டுகொள்ளப்படாமல் நிலுவையில் உள்ள கும்மிடிப்பூண்டி கூட்டுறவு

இன்னும் தீரல...
 கும்மிடிப்பூண்டி: கடந்த 22 ஆண்டுகளாக எந்த ஆட்சியாளர்களாலும் கண்டுகொள்ளப்படாமல் நிலுவையில் உள்ள கும்மிடிப்பூண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை திட்டம், வருகிற புதிய ஆட்சியிலாவது அமல்படுத்தப்படுமா என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
 திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள புதுவாயல் கிராமத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடங்கப்படும் என்று 1994-இல் அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது.
 "இந்த சர்க்கரை ஆலை சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் அமையும் என்றும், அதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும்' என்று அரசு தெரிவித்தது.
 அதன் அடிப்படையில், புதுவாயல் கிராமத்தில் உள்ள தலித் வகுப்பைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள், வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 78.5 ஏக்கர் நிலத்தை ஒரு சென்ட் வெறும் ரூ. 1,400 என்ற மிகக் குறைந்த விலைக்கு அப்போது கொடுத்துள்ளனர்.
 மேலும், 40 ஏக்கர் ஏரி புறம்போக்கு நிலத்தையும் சேர்த்து 120 ஏக்கரில் இந்த ஆலையைத் தொடங்கத் திட்டமிட்டனர்.
 இதற்காக அங்கு நிர்வாக அலுவலக கட்டடமும் கட்டப்பட்டது. ஆனால் ஆலை மட்டும் செயல்படுத்தப்படவில்லை.
 இங்கு சர்க்கரை ஆலை துவங்கியிருந்தால், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், ஊத்துக்கோட்டை, சோழவரம் பகுதிகளில் விளைவிக்கும் கரும்பைக் கொண்டு சர்க்கரை தயாரித்திருக்க முடியும்.
 ஆனால் புதுவாயலில் கும்மிடிப்பூண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடங்காததால், தற்போது கரும்பு விவசாயிகள் 60 கி.மீ. தொலைவிலுள்ள திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்குக் கொண்டுசெல்ல வேண்டியுள்ளது.
 தவிர, விவசாயிகள் பலர் ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் ஆலைக்கு கரும்பை எடுத்துச் செல்கின்றனர். இதனால் போக்குவரத்துச் செலவு கூடுவதுடன், விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கும் ஆளாகின்றனர்.
 இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் கரும்பு விவசாயிகளுக்கு நன்மை அளிப்பதோடு, இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
 இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார விவசாயிகள் கூறியதாவது:
 கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயலில் கூட்டுறவு சர்க்கரை ஆலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியில் இருந்தபோதும் வலியுறுத்தினோம். அதற்காக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.
 மேலும் இந்தப் பகுதியில் மலர்ச் சாகுபடி அதிகமாகச் செய்யப்படுவதால் வாசனைத் திரவியம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரி வருகிறோம். ஆனால் அரசுகள் கண்டுகொள்ளவில்லை.
 புதுவாயல் கிராமத்தில் உள்ள சிறு விவசாயிகள், சர்க்கரை ஆலையில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குறைந்த விலைக்கு தங்கள் விளைநிலங்களை அரசுக்குக் கொடுத்துள்ளனர். ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சர்க்கரை ஆலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தைப் பயன் படுத்தாமல் உள்ளனர். இங்கு விரைவில் சர்க்கரை ஆலையை அமைக்க வேண்டும்.
 ஏழை விவசாயிகளின் நிலத்தையும் பறித்துக் கொண்டு, வேலைவாய்ப்பு உறுதியளித்து 22 ஆண்டுகளாகியும், புதுவாயல் பகுதியில் சர்க்கரை ஆலை தொடங்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
 இந்நிலையில், புதிய ஆட்சியிலாவது இந்தத் திட்டம் செயல் வடிவத்துக்கு வர வேண்டும் என்று இத்தொகுதி வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com