Enable Javscript for better performance
மத அரசியல்-51: சாக்தம்- Dinamani

சுடச்சுட

  

  மத அரசியல்-51: சாக்தம்

  By C.P.சரவணன்  |   Published on : 28th January 2019 03:31 PM  |   அ+அ அ-   |    |  

  saktham

   

  சாக்தம் (Saktham)

  சக்தி வழிபாட்டை முதன்மையாகக் கொண்ட சமயம். சக்தி மட்டுமே தெய்வம் என்பதிலும் தீவிரமான கருத்து கொண்டது சாக்தம். இச்சமயத்தை சார்ந்தவர்கள் சக்தியை தாயாக வழிபடுவதோடு, தங்களை சக்தி தாசர்கள் என்றும் அழைத்துக் கொள்கின்றனர். சிகப்பு நிற ஆடைதரித்து, பெரிய அளவில் குங்குமம் அணிந்த தோற்றத்தில் அம்மனை வழிபடுகின்றனர். அனைத்து உலகத்தையும் படைத்து, காத்து, தன்னுள் ஒடுக்குபவள் சக்தியே என்பது இவர்கள் அடிப்படை நம்பிக்கை. தாய் வணக்கம், தாய்த் தெய்வ வழிபாட்டின் நீட்சியே சாக்தம் என்பர்.

   

  தாய் வணக்கம்

  மக்களின் முற்பருவத்தில் தாயே அதிகாரமுடையவளாயிருந்தாள். ஆட்சி அவள் கையில் இருந்தது. தந்தைக்கு பிள்ளைகளிடத்தில் உரிமை உண்டாகவில்லை. சொத்து பெண்களுக்கே உடையதாயிருந்தது. அக்காலத்தில் மக்கள் தாயைக் கடவுளாக வழிபட்டனர். உலகில் முதல் தோன்றி நடைபெற்றது. தாய்வணக்கம் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் எல்லோரும் ஒத்துக் கொள்கின்றனர்.

   

  தாய்க்கடவுள் (Mothe Goddess)

  தமிழ்நாட்டுத் தொல் காலத்தில் இடம்பெற்றுள்ள காடுகிழாள், கொற்றவை ஆகியோர் தாய்வழிச் சமூகப் பெண்தெய்வங்களே. இந்திய மக்கள் தாய்க்கடவுளைச் சிங்கவாகன முடையவளாகவும், ஒரு கையில் தண்டையும் இன்னொரு கையில் கேடகத்தையும் வைத்திருப்பவளாகவும் கொண்டு வழிபடுகின்றனர். எகிப்திய மக்கள் வழிபட்ட தாய்க் கடவுள் சிங்க ஊர்தியின் மேல் நிற்பதாகும். இதனை ஒத்தனவே சின்ன ஆசியா, சிரிய முதலிய நாடுகளில் வழிபடப்பட்ட தாய்க் கடவுளரின் வடிவங்களுமாகும். சின்ன ஆசியாவிலே கிதைதி என்னும் இடத்திலே கிடைத்த பழைய நாணயம் ஒன்றில், ஒரு பக்கத்தே இரு இடபங்கள் தாங்கும் கட்டிலின் மீது தந்தைக் கடவுளும், இரு சிங்கங்கள் தாங்கும் கட்டிலின்மீது தாய்க்கடவுள் வழிபாட்டுக்குரிய இவ்வடிவம். இந்திய நாட்டினின்றே சென்றிருத்தல் வேண்டுமெனக் கருதப்படுகின்றது. இவ்வுலக நாகரிகம் இந்திய நாட்டினின்றே மற்றத் திசைகளுக்குப் பரந்திருத்தல் வேண்டுமென ஜி.ஆர். ஹன்டர் (G.R.Hunter) ஹெரஸ் பாதிரியர், ரைஸ் டேவிட்ஸ் சில்டி முதலிய பல மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள். இந்த மரபிலேயே பராசக்தியும் வழிபாட்டுக்குரியவளாகிறாள். மகாலட்சுமி, மாகாளி, மகாசரஸ்வதி ஆகிய மூவரும் பராசக்தியின் மூன்று உருவங்களாகக் கொள்ளப்படுகின்றனர்.

  தாய் தெய்வமான கொற்றவையை வழிபடுவது தமிழர்களுக்கு புதியதானது அல்ல. சரித்திர பூர்வமாக கூறவேண்டும் என்றால், சிந்து சமவெளி நாகரீக காலம் தொட்டே பெண் தெய்வ வழிபாடு தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாகும். தொல்காப்பியம் மற்றும் பல சங்க இலக்கியங்களில் சக்தி வழிபாடு மிக சிறப்பாக சுட்டிக் காட்டப்படுகிறது. இந்த சக்தி வழிபாட்டோடு தாந்த்ரீகம் என்பது சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற காப்பியங்கள் உருவான காலத்தில் இணைந்ததாக அறிய முடிகிறது. 

  சித்தர்களின் தலைவர் என்று அழைக்கப்படும் திருமூலர் எழுதிய திருமந்திரத்தில், சைவ நெறியே பெருவாரியாக பேசப்பட்டாலும் திருமந்திரம் நான்காம் தந்திரத்தில் தாந்த்ரீக நெறி மிக விரிவாக அலசி ஆராயப்பட்டு எளிய மக்களும் புரிந்து கொள்ளுகிற வகையில் கூறப்படுகிறது. பரம்பொருளாகிய அம்மை அப்பனும் ஒருவரை விட்டு இன்னொருவர் அகலாது இருப்பதை சுட்டிக்காட்டி சிவம் என்பது படைப்பு காப்பு மறைப்பு அழிப்பு அருளல் என்ற ஐந்தொழிலை செய்வதாகவும் சக்தி என்பது இந்த ஐந்தொழில் செய்ய சிவனுக்கு சக்தியைக் கொடுப்பதாகவும் இருக்கிறது என்று காட்டப்படுகிறது. அதாவது, இயங்காமல் இருந்தால் அதன் பெயர் சிவம். இயக்கத்திற்கு வந்தால் அது தான் சக்தி என்பது திருமந்திர தத்துவமாகும். 

  விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின் 
  விளங்கிடு மெல்லிய லானது வாகும். 
  விளங்கிடு மெய்ந்நின்ற ஞானப் பொருளை
  விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே 

  என்று திருமூலர் திருமந்திரத்தில் ஆயிரத்து முன்னூற்று அறுபதாவது பாடலில் கூறுகிறார். அதாவது, பராசக்தி என்ற அம்மையை உயர்ந்த மெய்ப்பொருள் என்பது இதன் மையப் பொருளாகும். ஒளிமயமாக விளங்குகின்ற மெல்லிய இயல்புள்ள சக்தியே பரமசக்தியாக ஞானப் பொருளாக திகழ்கிறார் என்று அழகான கவிதையில் திருமூலர் பாடுகிறார். அதுமட்டுமல்ல, 

  தானே வெளியென எங்கும் நிறைந்தவள் 
  தானே பரம வெளியது வானவள் 
  தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
  தானே அனைத்துள அண்ட சகலமே 

  என்கிறார். பொதுவாக சிவனையோ திருமாலையோ குறிப்பிடும் போதுதான் நோக்கும் இடமெல்லாம் நிறைந்த நிர்மலப் பொருள் என்று ஞானிகள் கூறுவார்கள். அத்தகைய பரப்பிரம்ம நிர்மலப் பொருளே, தானே எங்கும் நிறைந்து தானே சகலத்தையும் படைத்து தானே சகலத்துக்கும் கொடுத்து தானே சகலத்தையும் சம்ஹாரம் செய்வதாகக் கூறுவார்கள். இங்கே திருமூலர் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலையும், அதாவது பிரம்மனாகவும் சிவனாகவும் விஷ்ணுவாகவும் இருப்பவள் அன்னை ஆதிபராசக்தியே என்ற புதிய கருத்தை முன்வைக்கிறார். அது மட்டுமல்ல அன்னை பராசக்தி, தானே முளைத்த சுயம்பு என்று கூறி அவளே உலகத்தின் மூல காரணம் என்கிறாள். 

  தனக்கு மேலே தன்னை படைத்ததாக தன்னை ஆட்சி செய்வதாக யாரும் இல்லாதவள் ஆதி பராசக்தி. அதனால் அவள் தத்துவ நாயகி என்றும் அறியப்படுகிறாள். தேவருக்கும் மூவருக்கும் யாவருக்கும் எங்கும் என்றும் தலைவியாகத் திகழ்பவள் அன்னை. அத்தகைய அன்னைக்கு தற்பரை என்ற சிறப்புப் பெயர் சூட்டி அவளை அனாதியானவள் என்று நமக்கு திருமூலர் காட்டுகிறார். 

  சொற்களை எடுத்து வர்ணனை செய்யும் மனதிற்கும் அப்பாற்பட்டவள். மனதைக் கடந்தும் மனதை அடக்கியும் நிற்பவள் அவள். அதனால் தான் அவள் மனோன்மணியாகிறாள். அவளின் கட்டளையை நிறைவேற்ற பேய்ப்படையும் ஊழிப்படையும் கூளிப்படையும் கொண்டிருக்கிறாள். இவை அனைத்திற்கும் மேலாக, சிவ கணங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டவள் என்று சக்தியின் வலிமையை நமக்குக் காட்டுகிறார். 

  சக்தி தேவி முக்திதரும் தேவியாகவும் இருக்கிறாள். அவள் நினைத்தால் கர்மவினையை காற்றினில் கரைத்து விடுவாள். அவள் அருள் இல்லாமல் யோக சமாதியை எந்த ஞானியும் அடைய முடியாது என்று கூறும் திருமூலர், அத்தகைய சக்தி ஸ்தூல வடிவமாக எந்திரத்தில் குடிகொண்டு இருப்பதாகக் கூறி ஒரு சக்கர விளக்கத்தை தத்துவ விளக்கமாக நமக்குத் தருகிறார். 

   

  சாக்த மதப்பிரிவுகள்

  சாக்த மதத்திலும் இருபிரிவு உண்டு. ஒன்று வாமாசாரார்கள், மற்றொன்று தட்சிணசாரர்கள்.  சைவ தந்திரம் (தட்சணாசார தந்திரம்), அசைவ தந்திரம் (வாமாசார தந்திரம்) என்று இரண்டு பிரிவுகள் இருந்தன. இன்றைக்கும் இருக்கின்றன. உயிர் பலி கொடுத்து காளிபோன்ற தெய்வங்களுக்கு படையல் போட்டு காரியத்தை வாமாசாரர்கள் (அசைவ வழி) சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதைபோல் எலுமிச்சை கனியை பலி கொடுத்து அதே காளிக்கு படையல் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக இரண்டு விதத்திலும் பலன் கிடைத்திருக்கிறது.

  அப்படியானால் இரண்டு வழியுமே சரியானது தானே என்று முடிவு செய்துவிடாதீர்கள். இரண்டு வழிமுறையும் அவரவருக்கு சரி என்று பட்டது அதனால் அதை அவரவர் விருப்பப்படி செய்தார்கள். இவ்வாறு செய்தால் தனக்கு தேவியின் அருள் கிடைக்கும் என்று நம்பினார்கள். கூடவே தெய்வபக்தி எனும் அன்பு இருசாரரிடமும் இருந்தது . அது ஒன்று தான் இருசாரருமே வெற்றி பெற காரணமானது . அன்றி சைவமோ, அசைவமோ அல்ல என்பதே உண்மை.

  வாமாசாரர்கள் கௌலிகள் என்று அழைக்கப்படுகின்றனர். வேதங்களை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. தங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப விதிகளை உருவாக்கிக் கொண்டு செயல்படுகிறார்கள். தட்சிணாசாரர்களை ஸ்ரீ வித்யோபாசகர்கள் என்றும் வைதிகர்கள் என்றும் அழைக்கின்றனர். இவர்கள் வேதத்தை முழுமையாக பின்பற்றுகிறார்கள் சந்தியாவந்தனம், மூதாதையர்களுக்கு கிரியை செலுத்துதல் வேள்விகள் போன்றவற்றைப் பின்பற்றுகிறார்கள்.

   

  தாய் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சி

  சக்தியை வழிபடுவதுதான் சாக்தம் என்பதற்கும், சாக்தம் என்பதன் கீழ் கொண்டுவரப் பட்டிருக்கும் பெண்ணின் அகப்புற உலகின் தெய்விக ஆக்கத்திற்கும் நெடும் வித்யாசம் இருக்கிறது. சக்தி, சிவனின் மனைவி. சக்தி வழிபாடு ஒரு விதத்தில் சைவத்தினுள் அடக்கம் என்பது போன்ற புரிந்துகொள்ளல்கள் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் வைத்து நோக்கும் பொழுது சரியெனத் தோன்றலாம். ஆனால் சாக்தத்தின் பல புரிகளை ஒப்பிட்டு நோக்கும் போது பெண் என்ற மெய்மையின் வழி பரம்பொருளைப் பற்றிய தரிசனம் சக்தி, சிவன், விஷ்ணுவின் யோக மாயா, சாமுண்டீ, பவானி என்று பல விதங்களில் தன்னை உரைபொருளாய் ஆக்கிக்கொள்கிறது என்பதுதான் நமக்குப் புரிய வருவது. இத்தகைய ஒரு யதார்த்தமான பார்வை இவ்வளவு அழுத்தமாக, படிப்புக்கு இலக்காகி இருப்பதும் வழிபாட்டின் உணர்ச்சிகளுக்கு வடிவமாகியிருப்பதும் பெரும் வியப்பே.

  சாக்தத்தின் தொடக்கத்தை பண்டைய இனக்குழுப் பாடல்களிலும், நம்பிக்கைப் பயிலல்களிலும் தேடலாம்; பௌத்தம், சமணம் இவை தம் நிலை பெருத்துப் பின் பிறழ்ந்து, சூழ்நிலைப் பண்பாட்டு அம்சங்களை உள்வாங்கி, உளவியல், யோகம் முதலியவற்றை உள்பெய்து விரிவாக்கிய தாந்திரிக வழிபாட்டுத் தடங்களிலும் தேடலாம்.

  சக்தி வழிபாடு காஷ்மீரத்தில் சஷிரா பவானியும், மகாராட்டிரத்தில் துளஜா பவானியும், குஜராத்தில் அம்பாஜியும் உத்திரப்பிரதேசத்தில் விந்தியாவாசினியும், வங்களாத்தில் காளியும், அசாமில் காமரூபியும், மைசூரில் சாமுண்டீஸ்வரியும், கேரளத்தில் பகவதியும், காஞ்சியில் காமாட்சியும், மதுரையில் மீனாட்சியும், தில்லையில் சிவகாமியும், திருவாரூரில் கமலாம்பிகையும், திருவானைக்காவில் அகிலாண்டேசுவரியும், திவண்ணாமலையில் உண்ணாமுலையம்மையும், திருக்கடவூரில் அபிராமியும் பெருஞ் சிறப்புடன் வழிப்படுகின்றனர். காசி விசாலாட்சியும் தென் கோடியில் கன்னியாகுமரியம்மனும் அம்பிகை வழிபாட்டிலே ஒருமைப்பாட்டின் நிலைக்களங்களாக விளங்குவதைக் காணலாம்.

   

  சாக்தம் மிகச் சத்தியமான வழி

  இப்போது சாக்த மதம் வங்காளத்தில் உயிர் கொண்டு வலிமை பெற்று நிற்கிறது. மற்ற இடங்களில் பொதுஜனங்கள் எங்கும் சக்தியை மிகுந்த கொண்டாட்டத்துடன் வணங்கி வருகிறார்களாயினும், தனியாகச் சாக்தம் என்ற கொள்கை இல்லை. பூர்வீக ஹிந்து ராஜாக்கள் காலத்தில் சாக்த மதம் மிகவும் உயர்வு பெற்றிருந்தது.ஹூணர்களை எல்லாம் துரத்தி, மஹா கீர்த்தியுடன் விளங்கி, தனது பெயரைத் தழுவி ஒரு சகாப்தக் கணக்கு வரும்படி செய்த விக்கிரமாதித்ய ராஜா மஹாகாளியை உபாஸனை செய்தவன். "அவன் காலத்தில் தோன்றி, பாரத தேசத்திற்கும், பூமண்டலத்திற்கும் தலைமைக் கவியாக விளங்கும் காளிதாஸன்சக்தி ஆராதனத்தை மேற்கொண்டவன். சிவாஜி மஹாராஜாவுக்குப் பவானியே தெய்வம்.

  தென்னாட்டிலே இப்போதும் சிலர் சக்தியுபாஸனை என்று தனிமையாகச் செய்து வருகிறார்கள். இவர்கள் புராதன க்ஷத்திரிய வழக்கத்திலிருந்த மது மாமிசங்களை அந்தத் தெய்வத்துக்கு அவசியமான நைவேத்தியம் என்ற தப்பெண்ணத்தால் தாமும் வழக்கப்படுத்திக் கொண்டு, ஜாதியாரின் பழிப்புக்கு அஞ்சி ரஹஸ்யமாகப் பூஜை செய்து வருகிறார்கள். எனவே, சில இடங்களில்,"சாக்தன்" என்றால் "ரஹஸ்யமாகக் குடிப்பவன்" என்ற அர்த்தம் உண்டாய்விட்டது.

  சாக்த வழிபாட்டில் மிகவும் அதிர்வு மிக்க மந்திரங்கள் உள்ளன. வெகு நிச்சயம் இந்த மந்திரங்கள் சொல்லச் சொல்ல மிக உயர்ந்த நிலையை அடையமுடியும். நல்லவைகள் பலவும் கண்டிப்பாக நடக்கும். சாக்தம் கடுமையான வழி. இது கத்திமேல் நடப்பதைப்போன்றது.மிகச்  சத்தியமான வழி. நெல்முனையளவும் சத்தியம்  பிறழாமல் நடப்பவரால், அளவு  கடந்த பொறுமையும், நம்பிக்கையும் உடையவர்களால் தான் இந்த வழியை பின்பற்ற முடியும். நாம் ஜெயிக்க முடியும். மந்திர ஜபம் நமக்கு ஜெயத்தைக் கொடுக்கும் என்று முழு மனதாய் அதனிடம் சரணடைந்தவர்களால் மட்டுமே அதனைப் பின்பற்றமுடியும்.

  சத்தியம்  குறைந்த  இந்த  நாட்களில், பொறுமை  குறைந்த  இந்த  நாளில் சாக்தத்தை உபயோகப்படுத்துவோர் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. இதனை தவறாக கையாண்டு கிழிந்துபோனவர்கள் பலரைப் பார்த்து சாக்தவழியே தவறென்று  பலரும்  உதறிவிட்டார்கள்.

   

  51 சக்தி பீடங்களும் - அவை அமைந்த இடங்களும்

  தேவி பாகவதம் என்ற நூல், அம்பாளுக்கு 108 சக்தி பீடங்கள் இருப்பதாக தெரிவிக்கிறது. ஆனால் தந்திர சூடாமணி என்ற நூலில் 51 சக்தி பீடங்கள் என்று தெளிவாக இருக்கின்றன. இந்த நூலை பின்பற்றியே பெரும்பாலான சக்தி பீடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சக்தி பீடங்களையும், அவை அமைந்த இடங்களையும் வரிசையாகப் பார்க்கலாம்.

  1.    கொல்லூர் மூகாம்பிகை (அர்த்தநாரி பீடம்), கர்நாடகா.
  2.    காஞ்சி காமாட்சி (காமகோடி பீடம்), தமிழ்நாடு.
  3.    மதுரை மீனாட்சி (மந்திரிணி பீடம்), தமிழ்நாடு.
  4.    காசி விசாலாட்சி (மணிகர்ணிகா பீடம்), உத்தரபிரதேசம்.
  5.    மகாகாளம் சங்கரி (மகோத்பலா பீடம்), மத்திய பிரதேசம்.
  6.    ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி (சேது பீடம்), தமிழ்நாடு.
  7.    திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி (ஞானபீடம்), தமிழ்நாடு.
  8.    திருவண்ணாமலை அபீதகுஜாம்பாள் (அருணை பீடம்), தமிழ்நாடு.
  9.    திருவாரூர் கமலாம்பாள் (கமலை பீடம்), தமிழ்நாடு.
  10.    கன்னியாகுமரி பகவதி (குமரி பீடம்), தமிழ்நாடு.
  11.    உஜ்ஜையினி மகாகாளி (ருத்ராணி பீடம்), மத்திய பிரதேசம்.
  12.    கும்பகோணம் மங்களாம்பிகை (விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு.
  13.    ஜம்மு வைஷ்ணவி (வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்.
  14.    விந்தியாசலம் நந்தாதேவி (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்.
  15.    ஸ்ரீசைலம் பிரம்மராம்பாள் (சைல பீடம்), ஆந்திரா.
  16.    ருத்ரகோடி மார்க்கதாயினி (ருத்ரசக்தி பீடம்), இமாசலப்பிரதேசம்.
  17.    காளகஸ்தி ஞானாம்பிகை (ஞான பீடம்), ஆந்திரா.
  18.    கவுகாத்தி காமாக்யா (காமகிரி பீடம்) அசாம்.
  19.    ஸ்ரீநகர் சம்புநாதேஸ்வரி (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்.
  20.    திருக்கடையூர் அபிராமி (கால பீடம்), தமிழ்நாடு.
  21.    கொடுங்கலூர் பகவதி (மகாசக்தி பீடம்), கேரளா.
  22.    கோலாப்பூர் மகாலட்சுமி (கரவீரபீடம்) மகாராஷ்டிரா.
  23.    குருஷேத்திரம் ஸ்தாணுபிரியை (உபதேச பீடம்) அரியானா.
  24.    திருவாலங்காடு மகாகாளி (காளி பீடம்) தமிழ்நாடு.
  25.    கொல்கத்தா பிரதான காளி (உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்.
  26.    பூரி பைரவி (பைரவி பீடம்) ஒடிசா.
  27.    திராட்சவரமா மாணிக்காம்பாள் (மாணிக்க பீடம்) ஆந்திரா.
  28.    துவாரகை பத்ரகாளி (சக்தி பீடம்) குஜராத்.
  29.    திருக்குற்றாலம் பராசக்தி (பராசக்தி பீடம்), தமிழ்நாடு.
  30.    அஸ்தினாபுரம் முக்திநாயகி (ஜெயந்தி பீடம்) அரியானா.
  31.    குளித்தலை லலிதா (சாயா பீடம்) தமிழ்நாடு.
  32.    புஷ்கரம் காயத்ரி (காயத்ரி பீடம்) ராஜஸ்தான்.
  33.    சோமநாதம் சந்திரபாகா (பிரபாஸா பீடம்) குஜராத்.
  34.    பாசநாசம் உலகநாயகி (விமலை பீடம்), தமிழ்நாடு.
  35.    திருநெல்வேலி காந்திமதி (காந்தி பீடம்), தமிழ்நாடு.
  36.    திருவெண்காடு பிரம்மவித்யா (பிரணவ பீடம்), தமிழ்நாடு.
  37.    திருவையாறு தர்மசம்வர்த்தினி (தர்ம பீடம்), தமிழ்நாடு.
  38.    திருவொற்றியூர் திரிபுரசுந்தரி (இஷீபீடம்), தமிழ்நாடு.
  39.    தேவிபட்டினம் மகிஷமர்த்தினி (வீரசக்தி பீடம்), தமிழ்நாடு.
  40.    நாகுலம் நாகுலேஸ்வரி (உட்டியாணபீடம்) இமாசலப்பிரதேசம்.
  41.    ஜலாந்திரம் திரிபுரமாலினி (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்.
  42.    திரியம்பகம் திரியம்பகதேவி (திரிகோணபீடம்) மகாராஷ்டிரா.
  43.    மைசூர் சாமுண்டீஸ்வரி (சம்பப்பிரத பீடம்) கர்நாடகா.
  44.    பிரயாகை ஸ்ரீலலிதா (பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்.
  45.    சிம்லா நீலாம்பிகை (சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்.
  46.    துளஜாபுரம் பவானி (உத்பலா பீடம்) மகாராஷ்டிரா.
  47.    பசுபதி காட்மாண்ட் பவானி (சக்தி பீடம்) நேபாளம்.
  48.    கயை மந்த்ரிணி (திரிவேணி பீடம்) பீகார்.
  49.    கோகர்ணம் பத்ரகர்ணி (கர்ண பீடம்) கர்நாடகா.
  50.    ஹஜ்பூர் விரஜை ஸ்தம்பேஸ்வரி (விரஜா பீடம்) உ.பி.
  51.    மானசரோவர் தாட்சாயிணி (தியாக பீடம்) திபெத்.

  காளி வழிபாடு என்பது வெகுகாலமாகவே உள்ளது. பழங்காலத்தில் மிருகபலி மட்டுமல்லாமல் நரபலியும் அம்மன் வழிபாட்டில் இருந்து வந்தது. ஆனால் ஆதிசங்கரர் காலத்திற்கு பின்னர் பலியிடுதல் என்பது மறைந்து போனது. தேவியை அன்புள்ளம் கொண்டவளாக விளக்கி ஸ்ரீ சக்கரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடும் முறையை இவர் வகுத்துக் கொடுத்தார். இப்போது இதுவே பெரும்பாலும் நடைமுறையில் இருந்து வருகிறது. தேவிதான் முழுமையான பராசக்தி என்றும், இவரே பிரம்மா, விஷ்ணு, சிவன், ஆகிய மூவரையும் படைத்தார் என்று சொல்கிறது தேவி பாகவதம். மட்டுமல்லாமல் தன்னுடைய ஸத்வ, ரஜஸ், தமஸ் அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூவரையும் படைத்தார் என்றும் கூறுகிறது. அத்துடன் நின்றுவிட்டால் முத்தொழில் செய்யும் மூன்று கடவுளர்களுக்கும் உதவியாக இருந்து, அவர்களின் தொழிலைச் செம்மையாகக் செய்வதற்காக மூன்று தேவியரையும் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். படைப்பு தொழில்புரியும் பிரம்மாவிற்கு சரஸ்வதியையும், காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கு லட்சுமியையும், அழிக்கும் தொழிலை செய்யும் சிவனுக்கு பார்வதியையும் இப்படித்தான் மணமுடித்துக் கொடுத்தாள் பராசக்தி அன்னை என்பது புராணம்.

   

  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்

  சக்தி வழிபாட்டை இன்றும் பெரும் அளவில் கடைபிடிப்பவர்கள் இவர்கள். இக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறைக்கு பெண்கள் செல்லவும், வழிபடுகின்றனர். பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் கூட இங்குள்ள கருவறைக்கு சென்று வழிபடுகின்றனர். இக்கோயிலுக்கு என ஆதிபராசக்தி சித்தர் பீட அமைப்புகள் பரவலாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் மூலம் இக்கோயிலின் வழிமுறைகளும், வழிபாட்டு முறைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த அமைப்பினைச் சார்ந்தோர் சக்திமாலை அணிந்து, விரதமிருந்து செந்நிற ஆடையை உடுத்தி ஆதிபராசக்தியை வழிபடுகின்றனர். இந்த அமைப்பினைக் கொண்டு குழு வழிபாடும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகின்றன.

   

  சாக்த ஆகமங்கள்

  மற்ற மத பிரிவுகளை விட சாக்த மதத்தில் எண்ணிக்கையில் அடங்காத ஆகமங்கள் அதாவது தந்திரங்கள் உண்டு. அதனாலேயே காலப்போக்கில் சாக்தத்தை தாந்த்ரீகம் என்று கூறி மக்கள் அழைக்கலானார்கள். தாந்த்ரீகம் என்றால், மந்திரம் எந்திரம் தந்திரம் என்று நிறைய தனித்தனி பிரிவுகள் உண்டு. அது அதற்கான பூஜை விதிகளும் உண்டு. சாதாரணமான மக்களை எளிதில் கவர்ந்து இழுக்கக் கூடிய ஈர்ப்பு சக்தி தாந்த்ரீகத்திற்கு இயற்கையாலுமே உண்டு.

  சாக்த சமயத்தை விளக்கும் ஆகம நூல்கள் தந்திரம் என்று அழைக்கப்படுகிறது.தேவியோடு கூடிய சிவபெருமானை வழிபடுவது சைவம் சிவபெருமானோடு கூடிய நிலையிலுள்ள அம்பிகையை வழிபடும் மார்க்கம் சாக்தம். ஒரு வழிபாடு வலமிருந்து இடமாகவும், மற்றொன்று இடமிருந்து வலமாகவும் காணப்படுகிறது. அம்பிகையை அங்கீகாரம் செய்யாது வணங்கப்படும் சிவவழிபாடும், சிவபெருமானை அங்கீகரிக்காது நிகழ்த்தப்படும் அம்பிகை வழிபாடும் எவ்விதப் பயனையும் நல்காது என்பது சைவம் மற்றும் சாக்தத்தின் உயரிய தத்துவம்.

   

  சாக்த தந்திரங்கள்

  தந்திரங்கள் மொத்தம் 500 உள்ளதாக கூறுவர். அதில் சாக்த தந்திரங்கள் 64,சமய தந்திரங்கள் 5, கலப்பு தந்திரங்கள் 8,என மொத்தமாக 77 உள்ளன என கூறுவர். இவற்றுள் முக்கியமானவை என கீழ்கண்டவற்றைக் குறிப்பிடலாம். முதலில் வைதீகர்கள் ஏற்காத சாக்த ஆகம தந்திரங்கள் சில….

  1) மஹா மய சம்பார தந்திரம்
  2) யோகினி சம்பார தந்திரம்
  3) சந்திரஞான தந்திரம்
  4) மாலினி தந்திரம்
  5) வீணா தந்திரம்
  6) தோடாலா தந்திரம்

  சமய தந்திரங்கள் 7:-

  1 சந்திரகலா தந்திரம்
  2 ஜ்ஞானார்னவ தந்திரம்
  3 கூலேஸ்வரி தந்திரம்
  4 ப்ரஹஸ்பதி தந்திரம்
  5 புனேஸ்வரி தந்திரம்
  6 துர்வாச தந்திரம்
  7 தக்ஷிணாமூர்த்தி தந்திரம்

  தவிர

  1) பிரம்மி தந்திரம்.
  2) மஹேஸ்வரி தந்திரம்
  3) கெளமாரி தந்திரம்
  4) வைஷ்ணவி தந்திரம்
  5) வராஹி தந்திரம்
  6) இந்திராணி தந்திரம்
  7) சாமுண்டா தந்திரம்
  8) சிவ தூதி தந்திரம்
  9)பூதடாமர தந்திரம்
  10)மகா நிர்வாண தந்திரம்.
  11)குலர்ணவ தந்திரம்.
  12) குலசாரம்.
  13) பிரபஞ்சசாரம்.
  14) தந்திரசாரம்.
  15)குப்ஜிக தந்திரம்.
  16) நில ஆகமம்.
  17) காயத்ரி தந்திரம்.
  18) யோகினி தந்திரம்.
  19) மகா மாயா தந்திரம்.
  20) தேவிபாத தந்திரம்
  21)ருத்ர யாமளம்
  22) பிரம்ம யாமளை,
  23) விஷ்ணு யாமளம்.
  24) லக்ஷ்மி யாமளம்
  25) உமா யாமளம்
  26) ஸ்கந்த யாமளம்

  போன்றவைகள் சில…..

  இப்போது நம் சித்தர்கள் எழுதிய தந்திரங்களோடு தொடர்புடையவைகள் சில:-
  தக்ஷிணாமூர்த்தி தந்திரம், புவனேஸ்வரி தந்திரம், தேவி பாத தந்திரம், போன்ற பல சமஸ்கிரத தந்திர நூல்கள் நம் சித்தர் நூல்களான தக்ஷிணாமூர்த்தி ஞானம், புவனை கலை ஞானம், பூஜா விதி & மணோன்மணி பூஜா விதி போன் பல சித்தர்களின் தந்திர நூல்களுடன் தொடர்புடையது.

  யோக மார்க்கத்தில், குண்டலினி, சக்தியார் விளங்கும் அம்பிகை மூலாதாரச் சக்கரம் தொடங்கி, மேல் நோக்கிய பயணத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் சகஸ்ரார சக்கரம் சென்று அடையும் பெரு நிலையை சிவசக்தி ஐக்கியம் என்று குறிக்கப்படுகிறது. தற்போது வங்காளத்தில் மட்டுமே சாக்த மதம் வலிமையுடன் திகழ்ந்து வருகிறது. சக்தி வழிபாடு இந்துக்களிடையே அதிகம் காணப்படுகிறது என்றபோதிலும் சாக்தம் என்ற தனிக் கொள்கை யாரிடமும் இல்லை என்பதே உண்மை. மன்னர்கள் காலத்தில் சாக்த மதம் ரொம்பவும் உயர்வுடன் காணப்பட்டது. மன்னர் விக்ரமாதித்யன் மகா காளி தேவியை உபாசனை செய்தவராக அறியப்படுகிறார்.

  மாவீரன் சிவாஜி மன்னருக்கு பவானி தேவிதான் முக்கிய தெய்வம் சாக்த மதத்தில் அதீத நம்பிக்கை அவருக்கு. மகாகவி காளிதாசர் சக்தி வழிபாட்டில் தீவிரம் காட்டியவர். தென்னகத்தில் தற்போதும் சக்தி உபாசனையை சிலர் கடைப்பிடிக்கின்றனர். மது, மாமிசம், போன்றவற்றை படைத்து இன்னும் பண்டைய வழக்கத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

  சாக்த மதத்தினர் அன்னை பராசக்தியை உலக தாயாக கருதுகிறார்கள். அத்தோடு அறிவுக்கு எட்டாத புலனுக்கு அகப்படாத சில வழிமுறைகளையும் போதிக்கிறார்கள். அந்த வழிமுறைகள் மந்திரம் சார்ந்ததாகவும், ஞானம் முக்தி, போன்றவற்றை தருவதாகவும் உள்ளன. இன்று சக்தி வழிபாடானது சிவ வழிபாட்டோடு கலந்து விட்டதனால் தந்திர ஆகமங்களுக்கும், சைவ ஆகமங்களுக்கும் தனித்தனியான வேற்றுமைகளை யாரும் கூறுவதில்லை.

  References:
  பாரதியார் கட்டுரைகள்
  https://www.dinamani.com/tholliyalmani/thaai-deivangal

   

  தொடரும்...

  C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai