6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

என் மகனுக்கு 23 வயதாகிறது. கப்பல் சம்பந்தப்பட்ட பொறியியல் படிப்பை படித்திருக்கிறார். வெளிநாடு சென்று பொருளீட்டும் வாய்ப்புண்டா? பலரும் பலமான ஜாதகம் என்று கூறுகிறார்கள். ராகு தசைக்குள் வாழ்க்கையில் முன்னேற்றம் வருமா? சொந்த வீடு, திருமண பாக்கியம் எப்போது கிட்டும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?  - வாசகர், கரூர்

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுய சாரத்தில்

Published On :


உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுய சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான கடக ராசியை அடைகிறார். ஒரு கிரகம் ராசியில் எந்த அளவுக்கு பலம் பெற்றுள்ளாரோ அதே அளவுக்கோ அல்லது ஒரு படி மேலேயோ நவாம்சத்தில் பலம் பெற்றிருந்தால் முழுமையான பலம் பெறுகிறார் என்று புரிந்த கொள்ள வேண்டும். மேலும் சந்திரபகவான் சர ராசி, நீர் ராசிக்கு அதிபதியாகி பாக்கிய ஸ்தானமான சர ராசியில் அமர்ந்திருப்பதால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை இணைக்கும் பயணங்களை செய்ய நேரிடும் என்று கூற வேண்டும். மேலும் எந்த ஒரு கிரகமும் தன் நட்சத்திரத்தில் அதாவது, சுய சாரத்தில் இருந்தால் அந்த கிரகம் தன் சுய நிலைமையை இழக்காமல் பலம் பெறும் அமைப்பு என்றும் கூற வேண்டும். 
லக்னம் மற்றும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். 

ஆறாமதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது விபரீத ராஜயோகமாகும். விபரீத ராஜ யோகத்தால் அந்த தசா புக்தி காலங்களில் திடீரென்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் எதிர்பாராத இடத்திலிருந்து  கிடைக்கும். மற்றபடி லக்னாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் குறை என்று பெரிதாக எதுவும் ஏற்படாது. தனம் வாக்கு குடும்பமாகிய இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை  அடைகிறார்.
சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். 

ரிஷப  லக்னத்திற்கு ஒரு கேந்திர ராசிக்கு அதிபதியான செவ்வாய்பகவான் மற்றொரு கேந்திர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. அதோடு, அவர் தன் ஆட்சி வீடான விருச்சிக ராசியையும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டையும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டையும் பார்வை செய்வது சிறப்பு. 

எந்த கிரகமும் தன் ஆட்சி உச்ச வீடுகளைப் பார்வை செய்தால் அந்த வீட்டிற்கு பலமுண்டாகும் என்பது ஜோதிட விதி. அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். குருபகவான் ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். இதனால் வாழ்க்கையில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் என்றும் கூறலாம். மேலும் செய்யும் காரியங்கள்அனைத்தும் சிறிய அளவு முயற்சியிலேயே வெற்றி பெறும் என்றும் கூறலாம். 

விருச்சிக ராசியும் மீன ராசியும் நீர் ராசியாக  ஆவதால் கடல் சம்பந்தப்பட்ட துறைகளில் சுலபமாக வெற்றி கிடைக்கும் என்று கூற வேண்டும். குருபகவான் காப்பீடு துறைக்கும் காரணமாவதால் கடல் வணிகம் சம்பந்தப்பட்ட காப்பீட்டுத் துறைகளிலும் வருமானம் கிடைக்கும். குருபகவான் ஏழாம் பார்வையாக லக்னத்தைப் பார்வை செய்வதால் அவரின் புகழ், கௌரவம், அந்தஸ்து, மிடுக்கான தோற்றம் ஆகியவைகள் உண்டாகும். சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற நிலைமை உண்டாகும் . குருபகவான் ஒன்பதாம் பார்வையாக கடக ராசியை அதாவது, தைரிய ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் இயல்பாகவே சுறுசுறுப்புடனும் தைரியத்துடனும் காரியமாற்றும் ஆற்றல் உண்டாகும். மேலும் செய்யும் செயல்களில் வேகத்துடன் விவேகமும் இருக்கும். தர்மகர்மாதிபதியான அதாவது ஒன்பது, பத்தாம் வீட்டிற்கு அதிபதியான சனிபகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் மூலதிரிகோண  ராசியில் ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். ராகுபகவான் ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். ஆறாம் வீட்டில் ராகுபகவான் இருப்பது அஷ்டலட்சுமி யோகமாகும். கேதுபகவான் அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். 
ஒருவருக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீடும்; தர்ம ஸ்தானமான பத்தாம் வீடும் வலுத்திருந்தால் அந்த ஜாதகருக்கு வாழ்க்கை சராசரிக்கும் சற்று கூடுதலாகவே சிறப்பாகச் செல்லும். அவருக்கு பாக்கிய ஸ்தானமும் தொழில் ஸ்தானமும் சிறப்பாக உள்ளது. மேலும் பாக்கிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதி அமர்ந்திருப்பதும் தொழில் ஸ்தானத்தில் தர்மகர்மாதிபதி அமர்ந்திருப்பதும் உன்னதமான அமைப்பாகும். பொதுவாக, வெளிநாடு செல்வதற்கு ஏழு மற்றும் பன்னிரண்டாம் வீடுகள் பலம் பெற்றிருக்க வேண்டும். வெளிநாட்டில் நிலையாக வாழ்வதற்கு லக்னமும் பலம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, லக்னம் மற்றும் ஏழாம் வீடுகளில் குரு, புதன், ராகு பகவான்கள் இருந்தோ அல்லது அந்த வீடுகளைப் பார்வை செய்தோ இருக்க வேண்டும். ஒன்பது மற்றும் பன்னிரண்டாம் வீட்டுக்கதிபதிகள் பரிவர்த்தனை பெற்றோ அல்லது பார்வை செய்தோ இருப்பது சிறப்பு. குறிப்பாக, சர ராசிகளும் (மேஷம், கடகம், துலாம், மகர ராசிகள்) நீர் ராசிகளும் (கடகம், விருச்சிகம், மீனம்)  வலுப்பெற்றிருக்க வேண்டும். அவருக்கு தற்சமயம், பயணக்கிரகமான ராகுபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. ராகுபகவான் ஆறாம் வீட்டில் சர ராசியில் சுயசாரத்தில் உள்ளார். ஒன்பதாமதிபதியும் பன்னிரண்டாமதிபதியும் சமசப்தமாகப் பார்வை செய்து கொள்கிறார்கள். குருபகவான் சப்தம கேந்திரத்தில் அமர்ந்து இரண்டு நீர் ராசிகளைப் பார்வை செய்கிறார்.  இன்னும் மூன்றாண்டுகள் ராகுமஹா தசை நடப்பதும் சிறப்பாகும். 
"சனிவத் ராகு' என்ற ஜோதிட விதியின் அடிப்படையில் சனிபகவான் செய்வதை ராகுபகவான் செய்வார் என்கிற வழக்கிற்கேற்ப அவருக்கு உடனடியாக படிப்பிற்கேற்ற வேலை கிடைத்து
விடும். வெளிநாடு சென்று பொருளீட்டும் அதிர்ஷட வாய்ப்புகளும் தேடிவரும். தொடரும் குரு மஹா தசையும் சிறப்பாக அமையும். இன்னும் ஐந்தாண்டுகள் கழித்து சொந்த வீடு கட்டுவார். அதே காலகட்டத்தில் படித்த நல்ல வேலையில் உள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.