உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், கும்ப ராசி, சதயம் நட்சத்திரம். லக்னாதிபதி, சுகாதிபதி குருபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் ஆறு, பதினொன்றாமதிபதியான சுக்கிர பகவானுடன் பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாய் பகவானின் சாரத்தில் அமர்ந்திருக்கிறார்.
செவ்வாய் பகவான் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்றமர்ந்திருக்கிறார். செவ்வாய் பகவான் சந்திர கேந்திரத்தில் இருப்பதால், சந்திர மங்கள யோகம் உண்டாகிறது.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை லக்னத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை தைரிய ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சந்திர (குரு சந்திர யோகம்) பகவானின் மீதும் படிகிறது.
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருப்பதும் சிறப்பு.
தற்சமயம் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சனி பகவானின் தசையில் புத பகவானின் புக்தி நடப்பதால், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள், படித்த நல்ல வேலையிலுள்ள களத்திர ஸ்தானத்திற்கு சம தோஷம் பெற்றுள்ள பெண் தென்கிழக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் நடக்கும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.