ஜோதிடத்தில் குரு பகவான் சுபக் கிரகங்களின் தலைவராகக் கருதப்படுகிறார். அவர் இருக்கும் இடம் வளமும், வளர்ச்சியும், சுபிக்ஷமும் பெறும் என்பது வேத ஜோதிடத்தின் தீர்க்கமான உண்மையாகும்.
சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக விளங்கும் குரு, ஆன்மிகத்திலும், வாழ்வியலிலும், மங்கள சக்தியின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறார். நம் இல்லங்களில் காணப்படும் சில பொருள்கள் குருவின் காரகத் தன்மைகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றன.
முழு மஞ்சள், தங்கக்கட்டி, மட்டைத் தேங்காய், முழு எலுமிச்சை போன்றவை அவற்றில் முக்கியமானவை. குறிப்பாக எலுமிச்சை, ஒரு சாதாரண பழமாக அல்ல; அது உயிரோட்டமும், தெய்வீக அதிர்வும் கொண்ட ஒரு மங்களக் கனியாகக் கருதப்படுகிறது.
இன்றும் எலுமிச்சை பழத்தைக் குங்குமம் தடவி வீடு மற்றும் அலுவலகங்களில் வைப்பார்கள். பழமையான ஆகமங்களிலும், சித்தர்களின் மறைமுறைகளிலும், எலுமிச்சைக்குத் தனி இடம் வழங்கப்பட்டுள்ளது. உக்கிர சக்தி தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை சமர்ப்பிப்பதும், எலுமிச்சை தீபம் ஏற்றுவதும் வழக்கமாகக் கொண்டுள்dளனர்.
ராஜ கனி
ஆன்மிக ரீதியாக எலுமிச்சை "ராஜ கனி" என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்தப் பழம் செடியிலிருந்து பறித்த பிறகும் நீண்ட நாள்கள் உயிரோட்டத்துடன் இருக்கும் தன்மை கொண்டது. முழுமையாக, களங்கமின்றி இருக்கும் எலுமிச்சை சுப குருவின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதே சமயம் அழுகிய, குத்தப்பட்ட எலுமிச்சை அசுப அதிர்வுகளைக் குறிக்கும் என்பது ஜோதிட சூட்சுமம். முற்காலங்களில் மக்கள் தங்கள் இல்லங்களில் விளைந்த கனிகளை இறைவனுக்குப் படைத்து, பின்னர் அதனைப் பிரசாதமாகப் பகிர்ந்து கொண்டனர். அதில் எலுமிச்சைக்கு முக்கிய இடமுண்டு. எலுமிச்சை பழங்களைக் கோயிலில் உள்ள தெய்வத்திற்குச் சமர்ப்பித்து, பின்பு அவர்கள் பிரசாதமாகக் கொடுக்கும் எலுமிச்சை கனியை வீட்டிற்குக் கொண்டு வருவார்கள். பின்பு குடும்பத்தினருடன் பழச்சாறாகப் பகிர்ந்து அருந்துவார்கள். அது வீட்டின் எதிரிகளை அழித்து சுப நிகழ்ச்சிகளை ஏற்படுத்த வழிகாட்டும் என்பது நம்பிக்கை. இன்றளவும் பலர் திருஷ்டி நீக்க எலுமிச்சையைப் பயன்படுத்துகின்றனர். எலுமிச்சை பழத்தில் கற்பூரம் ஏற்றிச் சுற்றி உடைப்பது தீய அதிர்வுகளை அகற்றும் பரிகாரமாக நம்பப்படுகிறது. ஹோமம் மற்றும் ஆன்மிக வழிபாடுகளிலும் எலுமிச்சைக்கு முக்கிய இடம் உண்டு.
சித்தர்களின் புனித பழம்
சித்தர்கள் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்த ஞானிகள் எலுமிச்சையைத் தெய்வீக அதிர்வுகளைத் தாங்கி நிற்கும் புனிதப் பழமாகக் கருதினர். தியானம் செய்யும் இடங்களில் எலுமிச்சையை வைத்திருக்கச் சொல்வதற்குக் காரணம், அது சுற்றுப்புற எதிர்மறை அதிர்வுகளைச் சமநிலைப்படுத்தி மன அமைதியை அதிகரிக்கும் என்ற ஆன்மிக நம்பிக்கையே ஆகும். மேலும், நவக்கிரக சக்திகளை ஈர்க்கும் இயற்கை சாதனமாகவும் எலுமிச்சை கருதப்படுகிறது. இதனால் ஆன்மிக சிந்தனை தெளிவடைந்து, தெய்வீக உணர்வை அதிகரிக்கும். சிலருக்கு அடிக்கடி வாகன விபத்து அல்லது எதிர்பாராத தடைகள் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் சுவாமி சன்னதியில் பூஜை செய்யப்பட்ட ஐந்து எலுமிச்சைகளை வாங்கி, ஒரு பழத்தைத் திருஷ்டி நீக்கச் சுற்றி எறிந்து, மற்ற நான்கினை வாகனத்தின் நான்கு சக்கரங்களின் கீழ் வைத்து, பின்பு பயணத்தைத் தொடங்குவார்கள். இது ஒரு சாத்வீக பலியாகக் கருதப்படுகிறது. செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்களின் தீவிர தாக்கங்களைக் குறைக்கவும் எலுமிச்சை பயன்படுகிறது என்று ஜோதிட கூற்று. குறிப்பாக உக்கிர தெய்வங்களின் வேலில் எலுமிச்சை குத்தி சமர்ப்பிப்பது, எதிரி பயம், மரண பயம் மற்றும் துர்சக்தி தாக்கங்களைக் குறைக்கும் பரிகாரமாகக் கருதப்படுகிறது.
எதிர்மறை சக்தி நீக்கும்
அறிவியல் ரீதியாக பார்க்கும் போது எலுமிச்சையின் மணமும் அதன் அமிலத் தன்மையும், முக்கியமாக அந்த புளிப்பு தன்மை உடல் மற்றும் மனதிற்குப் புத்துணர்ச்சி அளிக்கின்றன. இயற்கையான கிருமிநாசினியாக விளங்கும் இது, சுத்திகரிப்பு சக்தி கொண்டதாகவும் பார்க்கப்படுகிறது. மஞ்சள் கலந்து எலுமிச்சை நீரை வீட்டில் தெளிப்பது வாஸ்து மற்றும் எதிர்மறை சக்தி நீக்கப் பரிகாரமாகப் பலர் கடைப்பிடித்து வருகின்றனர். எலுமிச்சையின் சக்தியை அறியாமல் அதைத் தவறான செயலுக்குப் பயன்படுத்தக்கூடாது. ஊசியால் குத்தப்பட்ட எலுமிச்சை அதன் உயிரோட்ட சக்தியை இழக்கிறது. அதனைக் கடவுளுக்குச் சாற்றுவது நல்லது அல்ல. முடிந்தவரை எலுமிச்சை மாலைகளைக் குத்தாமல், வேறுவழியில் மாலையாகச் சமர்ப்பிப்பதே சிறந்த முறையாகக் கருதப்படுகிறது.
கழுத்த்தில் அணியக்கூடாது
உக்கிர தெய்வங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட எலுமிச்சை மாலைகளை மனிதர்கள் தங்கள் கழுத்தில் அணியக்கூடாது. ஜோதிட சாஸ்திரத்தில் கோட்சார குருவின் பயணம் மிக முக்கியம், குறிப்பாக, குரு லக்ன சாரத்தை குரு தொடும் காலமும், அல்லது குருவின் பார்வை விழும் நேரமும் வாழ்க்கையில் மறைந்திருக்கும் நோயின் தீவிரம் மற்றும் பல உண்மைகளை வெளிக்கொணரும் சக்தி கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த காலத்தில் நன்மை–தீமைகளைத் தெளிவாக உணரும் அறிவு அதிகரித்து, அசுப சக்திகள் மற்றும் மறைமுக எதிரிகளின் செயல்பாடுகள் வெளிப்பட ஆரம்பிக்கும். அதேபோல், குருவின் தெய்வீக அம்சமாகக் கருதப்படும் எலுமிச்சை பிரசாதம் ஆன்மீக மற்றும் ஜோதிட பரிகாரங்களில் முக்கிய இடம் பெறுகிறது.
மங்களக் கனி
வீட்டில் எலுமிச்சை பிரசாதத்தை வைத்திருப்பது துர்சக்திகளை நீக்கி, எதிர்மறை அதிர்வுகளை அகற்றி, வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். மேலும், உண்மையான நண்பர் யார், மறைமுக எதிரி யார் என்பதை உணர்த்தும் ஆன்மிக அதிர்வையும் இது ஏற்படுத்தும் என்று பலர் நம்புகின்றனர். இயற்கையை மதிப்பவன் இறைவனை நிச்சயம் உணர்வான் என்பதற்கு சிறிய அதிசயங்களில் ஒன்றாக எலுமிச்சை விளங்குகிறது. ஒரு சாதாரண பழமாகத் தோன்றும் எலுமிச்சை, ஆன்மிகம் கூறும் வகையில் தெய்வீக அதிர்வுகளைத் தாங்கி நிற்கும் மங்களக் கனியாகக் கருதப்படுகிறது.
ஜோதிட சூட்சுமம்
ஜோதிடத்தில், குரு பகவானுக்கு உகந்த உணவான எலுமிச்சை சாதத்தை, தானமாக வழங்கினால் ராகு-கேது தோஷம், கண் திருஷ்டி, தொழில் தடைகள் போன்றவை நீங்கி குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது ஜோதிட சூட்சும விதி. வீட்டில் எலுமிச்சை மரம் வளர்ப்பது தெய்வீக அதிர்வுகளை அதிகரிக்கும் என்பதும் ஆன்மிக கூற்று.
vaideeshwra2013@gmail.com
தொலைபேசி - 8939115647
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











