தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தஸ் ஸ்பேக் ரமணா: இதுதான் வேதம்! - முக்தா சீனிவாசன்

என் சிந்தனைகளை அடிக்கடித் தூண்டுவது 'தஸ் ஸ்பேக் ரமணா' என்கிற நூல் தான். ரமணரின் தத்துவ விளக்கங்கள் முழுவதும் அதில் தெளிவாகச் சொல்லப்படுகின்றன.

News image

தஸ் ஸ்பேக் ரமணா / முக்தா சீனிவாசன்

Updated On :5 மார்ச் 2021, 1:30 am

நான் ஒரு புத்தகப் பைத்தியம். எனது சொந்த வாசகசாலையில் மொத்தம் 3,000 புத்தகங்கள் உள்ளன. அவற்றில் நான் படித்து முடித்தவை 2,000 மட்டுமே. அவற்றிற்கு நம்பர் போட்டுக் கண்ணாடி பீரோவில் வரிசையாக அடுக்கி வைத்துள்ளேன். நான் காசு கொடுத்துத்தான் புத்தகம் வாங்குவேன். படித்த புத்தகத்தை கடனாகக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால் அது திரும்ப வராது.

இன்னும் படிக்க வேண்டிய புத்தகங்கள் கைவசம் 1,000 உள்ளன. கண் மூடும் முன் இவற்றைப் படித்து முடித்து விட வேண்டும் என்பது என் அவா. அது நிறைவேறுமா? தெரியாது.

இதுவரை 5,000 புத்தகங்களாவது படித்திருக்க வேண்டிய நான், சுமார் 2,000 புத்தகங்கள்தான் படித்திருக்கிறேன் என்பது எனது குறை. என்ன செய்வது? சில சமயம் மனம் ஏதாவது பிரச்னையில் மூழ்கிவிடும்போது படிப்பது தடைப்பட்டு விடுகிறது.

நான் படித்த புத்தகங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் என்ன என்பது என்னிடம் எழுப்பப்பட்டுள்ள கடினமான கேள்வி. ஒரு டஜன் புத்தகங்களாவது என்னைப் பெரிதும் கவர்ந்தவை. அவற்றில் எதை நீக்குவது? எதைச் சொல்வது? இருப்பினும்…

என் சிந்தனைகளை அடிக்கடித் தூண்டுவது (Thus Spake Ramana) என்கிற நூல் தான். ரமணரின் தத்துவ விளக்கங்கள் முழுவதும் அதில் தெளிவாகச் சொல்லப்படுகின்றன. அதை அடிப்படையாகக் கொண்டு நானே ஆய்வு செய்து சில முடிவுகளைக் கண்டேன். அதையே என் வாழ்க்கைத் தத்துவமாகக் கருதுகிறேன்.

நான் யார்?

ரமணர் எனக்கு பாதையிட்டு வெளிச்சம் காட்டுகிறார். அந்த நூலில் சதா நீ வெளி உலகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறாய். அதன் ஒவ்வொரு அசைவிலும் உன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறாய். அதில் இரண்டறக் கலந்துவிடுகிறாய். அதை விடுத்து உன்னையே நீ பார்த்துக் கொள். கண்ணை மூடிக் கொள். உன் கருத்தை உன் உள் செலுத்து. நீ யார் என்பதை அலசி அலசித் தேடு.

நீ என்பது உன் உடம்பல்ல. அது சோறு உனக்குக் கொடுத்த உருவம். நீ என்பது உன் எண்ணங்கள் அல்ல. உன் படிப்பு, அனுபவம், கேள்வி, ஞானம் ஆகியவை உன் மூளையை நிரப்பியுள்ள கருத்துக் கோவைகள். அவை சரியும் தவறும் கலந்த அபிப்ராய மூட்டைகள். அவை நீ அல்ல.

பின்பு நான் யார்?

ஒரு எறும்பு போல – யானை போல – மான் போல – மயில் போல – ஹிட்லர் போல – ரமணர் போல – கழுகு போல – கருடன் போல… இது எல்லாமே நீதான்.

நீர், நிலம், நெருப்பு, காற்று, வானம் என ஐந்து பூதங்களின் சேர்க்கையால் தோன்றுவது சக்தி. அந்த சக்தி எறும்பின் கருவில் (ஆண் – பெண் உறவால்) நுழையும்போது அது எறும்பாகப் பிறக்கிறது. உன் தாயின் வயிற்றில் நுழையும்போது நீ பிறக்கிறாய். உலகமே சக்தி மயம். தோற்றம் – வளர்ச்சி – தேக்கம் – மறைவு (மரணம்) ஆகியவை சுழற்சி. ரமணர் இந்த நூலில் ’நான் யார் என்பதை அறிந்து கொள்’ என்கிறாரே அதன் பொருள் இதுதான். சகல ஜீவராசிகளாக மனிதம் முதல் மிருகம் வரை – பறப்பவை முதல் நீந்துபவை வரை – படரும் செடி முதல் வளரும் மரம் வரை – அந்தப் பரம சக்தியின் சிறுசிறு திவலைகள், துண்டங்கள், வெவ்வேறு உருவில் காட்சி தரும் ஒரே அடிப்படைப் பொருள். அதாவது சக்தி.

அந்த நூலை நன்கு உணர்ந்து தன்னைக் கண்டு கொள்கிறவன் விடுதலை பெறுகிறான். அந்த உணர்வு உன் ஆசைகளின் ஹிமாலயத் தேவைகளின் பொய்மையை உனக்குக் காட்டுகிறது. பல்வேறு பந்தங்களின் மாயத்தனம் உனக்கு உள்ளங்கை நெல்லிக் கனியாகக் கண்ணுக்குப் படுகிறது. உன் ஆத்மாவுக்கும் உலகளாவிய பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பு உன்னால் உணரப்படுகிறது. நீ நீயாக மட்டும் இல்லாமல் வையம் ஆகிவிடுகிறாய். வையத்தின் ஒரு சிறு துண்டாகிய நீதான் வையத்தையே உருவாக்குகிறாய். உன்னைப் பற்றி நீ உணர்ந்திருப்பதன் மாயையிலிருந்து நீங்கி பரம்பொருளின் பகுதியாகிப் போகிறாய். வாழ்க்கையின் ஒரே நோக்கம் அன்பு மட்டும்தான். நேசம் மட்டும்தான். பரோபகாரம் மட்டும் தான். பிறர் நலன் பேணுதல் ஒன்றுதான். அதனால் அனைவரையும் நேசி. அனைத்தையும் நேசி. அளவு கடந்து நேசித்துக்கொண்டே இரு. வாழ்க்கையின் காரணம், காரியம் எல்லாமே அதுதான்.

நான் யார் என்பதை உணர என்னைத் தூண்டிய ‘தஸ் ஸ்பேக் ரமணா’ என்ற புத்தகம் எங்கோ ஒரு படுபாதாளத்தில் தன் ஞானமில்லாது உழன்று கொண்டிருந்த என்னை விழிக்கச் செய்தது. நான் என்ன செய்கிறேன்? என்ன செய்ய வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாகவே அமைந்துள்ளது.

அந்தப் புத்தகத்தை மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும். ஒவ்வொரு தடையும் அதைப் படிக்கும் போதும் நான் தெளிவடைகிறேன். தெளிவைத் தெரியவைக்கும் தெள்ளிய நூல் ‘தஸ் ஸ்பேக் ரமணா’. அதுதான் எனக்குப் பிடித்த புத்தகம். புத்தகமா… இல்லை… வேதம்.

               (தினமணி கதிரில் 17.06.2001 அன்று வெளியானது)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.