தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

'வழி வழி பாரதி': ஒளவைக்குப் பிடித்தது…! -ஒளவை நடராசன்

சங்க இலக்கியம் தொடங்கி இன்று வரை வந்த கவிதைகளின் சாறாக ‘வழி வழி பாரதி’ என்ற கட்டுரை முதலில் நிற்கிறது.

News image

'வழிவழி பாரதி' / ஒளவை நடராசன்

Updated On :15 மார்ச் 2021, 1:30 am

அப்போது நான் ராமலிங்கர் பணி மன்றத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அருட்செல்வர் நா.மகாலிங்கம் தலைமையில் ராமலிங்கர் பணி மன்றம் அப்போது ஆற்றிவந்த பணிகளையெல்லாம் நினைத்துப் பார்த்தால், ஒரு அரசால் கூடச் சமயம், கலை, இசை, பண்பாடு முதலிய துறைகள் ஒன்றுக்குப் பத்தாக ஓங்கி வளர்வதற்கு அவ்வளவு பணிகளை நிறைவேற்ற முடியுமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் நானே மொழி, கலை – பண்பாட்டுத் துறைக்கு அரசுச் செயலாளராகப் பணியாற்றியிருக்கிறேன். எனக்கு இளமையில் இருந்தே எந்த நோக்கமும் இல்லாமல் எதையாவது படித்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற அடங்காத ஆவல். அது ஒன்று கூடத் தணியவில்லை. மாறாக நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எதை மறந்தாலும் ’நூல் பல கல்’ என்ற முதுமொழியை நான் மறந்ததே இல்லை. காலையில் நான் எதைப் படித்தாலும் மாலையில் அதைப் பத்து பேருக்காவது எடுத்துச் சொல்லவில்லையென்றால் என் தலை வெடித்துவிடும்..

நான் ஒருமுறை மருத்துவமனையில் சேர்ந்திருந்தேன். அப்பொழுது என்னைப் பார்க்க வந்த நண்பர்கள், ‘’அப்பா சீரியசாக இருக்கிறாராமே…’’ என்று என் மகன் அருளைக் கேட்டார்களாம். ‘’ அவராவது சீரியசாவது… உள்ளே போய்ப் பாருங்கள். சீரியஸாக, வந்த பத்திரிகைகள் பற்றிய பட்டி மண்டபமல்லவா அங்கே நடக்கிறது’’ என்று கூறினானானாம்.

இராமலிங்கர் பணிமன்றத்தில் பணியாற்றத் தொடங்கினேன் அல்லவா? அப்போது எனக்கு ஒரு வேலை வேண்டும் என்று வீட்டிற்கு வந்தார் ஓர் இளைஞர். அவர் முருக சரணன். இன்று நாடறிந்த கவிஞர். திருவருட்பா உரையாளராகத் திகழ்கிறார். ஒருநாள் விடியற்காலையில் அவர் வந்து பார்த்தபோது என் கட்டிலைச் சுற்றிச் சுற்றிப் பத்துப் பதினைந்து புத்தகங்கள். அட்டைகள் கழன்றும் சில தாள்கள் மடிந்தும் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன. ‘’பொறுத்துக்கொள்ளுங்கள் தம்பி. புத்தகங்கள் இப்படிச் சிதறிக் கிடந்தால்தான் எனக்குப் பிடிக்கும், நான் வரிசையாக அடுக்கி வைக்க முயலுவதுமில்லை’’ என்று சொல்லிக்கொண்டே, ‘’உங்களுக்குத் தமிழ் எவ்வளவு தெரியும்?’’ என்று கேட்டேன். வெடுக்கென்று அவர் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ‘’எனக்குத் தமிழ் கொஞ்சம் தெரியும். ஒளவையார் பாடலும் தெரியும். கைப்பிடிகள் கழன்றும், வாள்முனைகள் மழுங்கியும், கேடயங்கள் குலைந்தும் அங்குமிங்குமாக வேல்களும் வில், அம்புகளும், சிதறிக்கிடப்பதுதானே வெற்றி மன்னர்களின் படைவீட்டுக்கு அழகு என்று ஒளவை பாடியிருக்கிறாரே… அதனால்தான் கலைந்திருப்பது உங்களுக்குப் பிடித்திருக்கிறது’’ என்றார். கேட்கவா வேண்டும். மறுநாளே அவர் வேலையில் சேர்ந்தார்.

இது நடந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் என் ஆயுதச் சாலையில் அதே கதைதான். என்னுடைய பொழுது போக்கு என்ன தெரியுமா? என் அறையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுப்பது… பாதி படிப்பது… மறந்துபோய் அதை எங்கேயாவது வைப்பது… பிறகு நாள் முழுவதும் அதைத் தேடுவது. இதில் நான் அடைகிற மகிழ்ச்சிக்கு ஈடே இல்லை. அப்படி மூன்று முறை படித்துவிட்டுத் தொலைத்துவிட்டப் பிறகு என் காரிலேயே இப்போது வைத்துக் கொண்டிருக்கும் புத்தகம்தான் ’வழிவழி பாரதி’. இந்த நூலுக்குப் பெருமிதமான சிறப்புகள் பல உண்டு. எழுதப்பட்ட பொருள் எவரையும் கவர்வது. பரந்துபட்டது. பாரதியாரைப் பற்றியது. ஈடிணையில்லாதது. எழுதியவர் என் இனிய நண்பர் இலக்கியக் கடல், இருமொழிவாணர் சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன். பாரதியை உணர்ந்து, நமக்கு உணர்த்துவதற்கு உரிய தகுதிகள் யாவும் குறைவறப் பெற்றவர்.

மரபு நிலை திரியா மாண்புடைய பாரதியார் உலகச் சான்றோர் வழி வழி வந்த மூதறிஞர் என்பதைப் புலப்படுத்தவே 14 தலைப்புகளில் இந்த நூல் எழுந்துள்ளது. சங்க இலக்கியம் தொடங்கி இன்று வரை வந்த கவிதைகளின் சாறாக ‘வழி வழி பாரதி’ என்ற கட்டுரை முதலில் நிற்கிறது. ‘பாரதி உலகம்’, ‘பாரதி தமிழ்’ கட்டுரைகளில் பாரதியார் பாடல்களின் வாழ்வும் நிகழ்வும் ஒளிவீச்சாய் சுடர் விடுகிறது. பாரதியும் ஷெல்லியும், புஷ்கினும், ரூமியும் என்று விரிந்த வானில் நாம் மிதந்து மகிழ்கிறோம். புஷ்கினாலோ, பாரதியாலோ ரஸக்குறைவாக எழுத முடியாது. மீதூரும் அன்பே புஷ்கினைப் புஷ்கினாகவும், பாரதியை பாரதியாகவும் ஆக்கின. பாரதி அன்பர்களுக்கு வாய்த்த பெருவிருந்து ‘வழி வழி பாரதி’. இந்நூல் எப்போதும் என் முன்னாலேயே வைக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.