தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

'புதுமைப்பித்தன் படைப்புகள்':எப்போதும் புதுமைப்பித்தனுடன்…! -எஸ்.வி.சேகர்

'புதுமைப்பித்தன் படைப்புகள்' ஐந்திணைப் பதிப்பக வெளியீடு. 1987-ம் ஆண்டு வெளியான இந்தச் சிறுகதைத் தொகுப்பில் 96 சிறுகதைகள் உள்ளன.

News image

'புதுமைப்பித்தன் படைப்புகள்' / எஸ்.வி.சேகர்

Updated On :19 மார்ச் 2021, 12:30 pm

’என்னை யாராலும் ஏமாற்ற முடியாது’ என்று சொல்வதைத்தான் யாருமே விரும்புவார்கள். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் என்னை யாராலும் ஏமாற்ற முடியும் என்பதை மட்டும் பெருமையோடு ஒப்புக்கொள்கிறேன்.

’சேகர், இந்தா ஒரு புத்தகம் இருக்கு. படி’ என்று எதை நீட்டினாலும் புத்தகமா என்று பார்க்காமலேயே கையில் வாங்கிக் கொள்வேன். ஆமாம். புத்தகம்னா எனக்கு அவ்வளவு உயிர். இன்றுவரை எனக்கு உள்ள நட்பு புத்தகம் படிப்பதுதான்.

நான் எத்தனையோ ஆயிரம் மேடை நாடகங்களில் நடித்திருக்கிறேன். திரைப்படங்களில், சின்னத்திரைத் தொடர்களில் நடித்திருக்கிறேன். எனது வளர்ச்சியில் இன்று வரையிலும், இனிமேலும் நான் படித்த புத்தகங்களுக்குப் பங்கு உண்டு.

யார் எழுதுகிறார்கள் என்று பார்க்க மாட்டேன். என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை மட்டுமே பார்ப்பேன். பெரிய எழுத்தாளன், சின்ன எழுத்தாளர் என்று பாகுபடுத்திப் பார்க்கும் பழக்கம் என்னிடம் இல்லை.

பிரபலம் ஆகாத புதிய எழுத்தாளர் எழுதிய ஒரு நாவலை வைத்து சீரியஸாகப் படித்துக் கொண்டிருந்தேன். என் நண்பர்கள், இதில் என்ன சிறப்பு இருக்கிறது? இதைப் போய்ப் படித்துக் கொண்டிருக்கிறீர்களே? எவ்வளவோ புகழ் பெற்ற நாவல்கள் இருக்கின்றனவே, அவற்றைப் படிக்கலாமே? என்று கேட்டார்கள். ஆனால் அந்தப் புது எழுத்தாளன் நாவலில் என் தேடுதலைப் பற்றி அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த 200 பக்க நாவலில் இரண்டு வரிகளில் நான் தேடியது கிடைத்துவிட்டது. அவரும் ஒரு சிந்தனாவாதிதானே.

அவர் எழுதிய இரண்டு வரிகளைப் புகழ் பெற்ற ஆசிரியர்களால் எழுத முடியாது. அதுதான் பிரசவம். அவரவர் பிரசவம். அந்தந்த ஆசிரியருக்கு ஒரு எழுத்துப் பிரசவ வேதனை இருக்கிறது.

நான் படிக்கும் தினசரி, வார, மாதப் பத்திரிகைக்காக மாதம் 1,800 ரூபாய் பில் கட்டுகிறேன். ஒன்றுவிடாது படித்து வருகிறேன். இந்தப் படிப்பு இன்றைக்கு உலகம் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிப் புரிந்து கொள்ள உதவுகிறது. நான் படித்த செய்திகள், சம்பவங்கள் அன்றைய தினமே எனது நாடகத்தில் வெளிப்படும். சுண்டல் சுற்றி வந்த கையகலத் தாளைக்கூட விடமாட்டேன். உதாரணமாக, ஒரு நாள் அப்படிச் சுண்டல் சாப்பிட்ட துண்டு பேப்பரில் ஒரு துணுக்கு இருந்தது. தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரத்து நூற்றுப் பத்து முறை போராடி மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் மின்சாரத்தைக் கண்டுபிடித்தார் என்று அந்தத் துணுக்கில் இருந்தது. இரவே அதை என் நாடகத்தில் புகுத்தினேன். கொஞ்சம் மாற்றம் செய்துகொண்டேன்.

‘மின்சாரத்தைக் கண்டுபிடிச்சதும் தாள முடியாத உற்சாகத்தில் தனது மனைவியை எழுப்பிச் சொன்னாராம். அதற்கு அவர் மனைவி, ’சரி… அணைச்சுட்டுப் படு’ என்று சொன்னாளாம்’ என்று இரட்டை அர்த்தத்தில் சேர்த்தேன். அரங்கில் பயங்கரக் கைத்தட்டல்.

‘பத்தாயிரம் ஜோக்குகள்’ என்ற  ஆங்கில நூலிலிருந்து எனது நாடகத்துக்கான ஜோக்குகளை உருவாக்குகிறேன். அதற்கு உதவியது எனது படிக்கும் பழக்கம்தானே.

நாம் படித்த புத்தகங்கள் என்னில் அடங்காதவை. அவற்றில் மூன்று முக்கிய நூல்கள் மட்டும் எனக்குள் ஈடு செய்ய முடியாத இடம் பெற்றவை.

  1. அரவிந்தர் எழுதிய ’அன்னையின் பொன் மொழிகள்’
  2. ஜகக்குரு சங்கராசாரிய சுவாமிகள் எழுதிய ’அருள் ஆசி’
  3. ’புதுமைப்பித்தன் படைப்புகள்’ (சிறுகதைத் தொகுப்பு)

'புதுமைப்பித்தன் படைப்புகள்' ஐந்திணைப் பதிப்பக வெளியீடு. 1987-ம் ஆண்டு வெளியான இந்தச் சிறுகதைத் தொகுப்பில் 96 சிறுகதைகள் உள்ளன. இவரது ஒவ்வொரு சிறுகதையும் ஒரு வகைச் சுவை. சிறுகதைகள் ஜன்னல் மாதிரி. ஜன்னல் வழியாகத் தெருவில், எதிர், பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறதென்று பார்க்கலாம். புதுமைப்பித்தன் கதைகளைப் படிக்குபோது அப்படி ஒரு உணர்வை அனுபவிக்க முடிகிறது. அவரது சிறுகதைகளில் மூன்று சிறுகதைகள் அதிகம் என்னைக் கவர்ந்தவை. ‘செவ்வாய் தோஷம்’, ‘விநாயகர் சதுர்த்தி’, ’நன்மை பயக்குமெனின்’ கதையில் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை வெகு நேர்த்தியாகக் காட்டியிருக்கிறார்.

அவரது ஒவ்வொரு கதையிலும் ஆழமான பெரிய விஷயம் கலந்திருக்கும். அவரது தொகுப்பு நூலை எப்போதும் என் பார்வையில் வைத்திருப்பேன். மீண்டும் மீண்டும் படிப்பேன். எப்போதும் ஒரு புதுக்கருத்து கிடைக்கும்.

டி.வி. பார்க்க கேபிள் கனெக்‌ஷன் வேண்டும். ரேடியோ கேட்க கரண்ட் வேண்டும். கையில் புத்தகம் இருந்தால் பகலில் சூரிய வெளிச்சத்திலும் இரவில் மெழுகுவர்த்தி ஒளியிலும் கூடப் படித்துக்கொண்டே இருக்கலாம். படிக்கப் படிக்கத்தான் சுற்றுப்புறம் இருண்டால்கூட உள்ளே ஒரு வெளிச்சம் வந்து கொண்டே இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.