வாசிப்பு சுகமானது என்று யார் சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிஅவில்லை. சில சமயங்களில் சுகமானது; பல சமயங்களில் சமனப்படுத்த முடியாத மன அலைக்கழிப்பை வேண்டுவது. இது எல்லாம் சேர்ந்த கலவையைச் சுகமானது என்று ஒருமைப்படுத்த முடியாதில்லையா?
ஒவ்வொரு புத்தக வாசிப்பின்போதும் இதில் ஏதோ ஒன்று எனக்கு நிகழ்கிறது. அந்தப் பிடியின் இறுகலில் இருந்து தப்பிக்க நான் என்னவெல்லாமோ ஆகி, துவண்டு, உயிர்த்து சகஜப்பட வேண்டியுள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன்பு என் தெருவின் மத்தியில் ஈசிசேர் போட்டு வண்ணதாசன் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். சுகமான வாசிப்புதான் அது. பூ, செடி, குல்மொஹருக்கு இருக்கிற தாவரத் திமிர்… இதெல்லாம் சுகமானதுதான். ஆனால் ‘மிச்சம்’ என்றொரு சிறுகதை. படிக்கிறபோதே என்னால் கட்டுப்படுத்த முடியாத மன அலைக்கழிப்பு. மீள முயற்சிக்கிறேன். முடியவில்லை. வீடு, வீட்டில் உறங்கும் அம்மா, அப்பா, அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் புத்தகங்கள் எதுவும் ஞாபகமற்றுப் போய் நான், தெரு, துணையாய்ச் சில நட்சத்திரங்கள், மிச்சமாகிப்போன அந்த பஸ் ஸ்டாண்ட் பையன், மலைப் பிரதேசப் பனியில் நனையக் கை நீட்டும் அந்த விலைமாது. தெருவை அடைத்துக் கட்டப்பட்ட கூண்டில் புறாக்களின் சப்தம். தாங்க முடியவில்லை என்னால்…. என் மீது கவிந்திருக்கும் கை உதற, என் சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் டீ குடிக்கிறேன். அர்த்த ராத்திரியில் அங்கிருக்கும் மனிதர்களை வெறிக்கிறேன். கதம்பப் பூ மணக்க எதிர்ப்படும் பெண்கள் அவளை நினைவுபடுத்துகிறார்கள். எங்கும் தப்பிக்க முடியாமல் என் ஈஸிச்சேரிலேயே சாய்கிறேன். இதை எதிர்கொண்டு வெற்றிகொள்ள மீண்டும் அதே கதையை படிக்கிறேன். இந்த நீண்ட போராட்டம் அடங்கி அமைதி பெறும்போது விடிந்திருந்தது. வாசிப்பு சுகமானதில்லை. ஆனால் வாசிக்காத நாள்களில் ஏற்படும் மரண வெறுமை சகித்துக் கொள்ள முடியாதது.
சமீபத்தில் மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தனின் ‘மய்யழிக் கரையோரம்’ நான் மேற்சொன்ன பல்வேறு மனநிலைகளுக்கும் என்னைக் கொண்டு போன முக்கியமான நாவல். அதில் தாசன், சந்திராவின் காதல், அவர்களின் தனிமைச் சந்திப்பு, கை பிணைப்புடன் கூடிய உரையாடல்கள், குல்மொஹரின் தாவரத் திமிருக்கு ஒப்பான சுகமான பகுதிகள், பிரெஞ்சுக்காரர்களின் மாஹி என்ற அந்த அழகிய பிரதேச ஆக்கிரமிப்பு. அவர்களின் சொகுசான வாழ்வு. அதைப் பார்த்த அந்தப் பகுதி மக்களின் ஆழ்ந்த பெருமூச்சு இதெல்லாம் அந்தப் பெயரிட முடியாத, நான் மீள முடியாத என் மீதான ஆக்கிரமிப்புகள், தாசன் தலைமையில் நூறு, இருநூறு பேரே கொண்ட ஒரு லட்சியக் குழு, பிரெஞ்சுக்காரர்கள் பிடியிலிருந்த அந்த நகரத்துப் பல்வேறு கட்டடங்களைத் தன்வயப்படுத்தி, இந்தியக் கொடியேற்றி, தங்கள் வெற்றியை அறிவிக்கிறார்கள். ஆனால் அது புரட்சிதானா என்று அவர்களாலேயே நம்ப முடியாத அளவிற்கு எளிமையானதாக இருக்கிறது. இறுதியாக அவர்களது ஆக்கிரமிப்பு மூப்பன் துரையின் பங்களா. ‘’இந்த மாபெரும் மாளிகையின் உச்சியிலும் இந்தியக் கொடி அசைய ஆரம்பித்தால் மாஹி நம் வசம்’’, மூப்பன் துரையின் வார்த்தையில் ’கும்பல்’ தடுத்து நிறுத்தப்பட்டு, பேச்சுவார்த்தைக்கு தாசனும், அவன் நண்பனும் அழைக்கப்படுகிறார்கள். மாளிகைக்குள் நுழையும் போதே அதன் அகங்காரம் இவர்களை அச்சுறுத்துகிறது. விசாலமான மேல் மாடியில் மூப்பன் துரை ஒரு பைனாகுலர் வழியே ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தபடி…. நீண்ட மெளனத்தின் இடைவெளியில் நிமிடங்கள் உதிர்கின்றன.
இவர்கள் பக்கம் திரும்பாமலேயே துரை கேட்கிறான், ‘’உங்களுக்கு என்னதான் வேண்டும்?’’
’’சுதந்திரம்’’.
அவன் இப்போதும் திரும்பவில்லை. கடலின் தொலைதூரப் புள்ளிகளின் தேடுதல்களிலேயே தன்னைக் கூர்மைப் படுத்துகிறான். ஏதோ ஒரு வெற்றி விநாடியில் அவன் உடல் முழுக்க புது ரத்தம் பாய இப்போது திரும்பிச் சொல்கிறான். ‘’அதோ பாருங்க… உங்க கூட்டாளிங்க வர்றாங்க.’’
கலவரப்பட்டு தாசனும் அவன் ஸ்நேகிதனும் திரும்ப, வரிசை வரிசையாய்ப் போர்க்கப்பல்கள். இருவரின் கைப்பிணைப்பில் ஒருவர் பதற்றத்தின் உச்சம் இன்னொருவருக்குப் பரவுகிறது. ‘’நாம்ப எல்லாத்தையும் சரியா கணிச்சோம், மூப்பன் துரைகிட்ட ஒரு ஒயர்லெஸ் கருவி இருக்கிறதைத் தவிர.’’
நான் மட்டுமல்ல, மன அலைக்கழிப்பில் திக்குமுக்காடாத வாசிப்பாளன் யார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை, பாளை. தொகுதிகளின் அதிமுக வேட்பாளா்கள் நாளை மனுதாக்கல்
நெல்லையில் இளைஞா் கல்லால் அடித்துக் கொலை: நண்பா் கைது

சாமிதோப்பு பகுதியில் என். தளவாய்சுந்தரம் பிரசாரம்

தூத்துக்குடியில் தமிழக முதல்வா் வாகனத்தை மறித்து சோதனை
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


