தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

'இறுதிச் சடங்கு': தோழரே… நீங்க…! -சுப்ரஜா

பிரான்ஸ் நாட்டிலிருந்து சுகன், ஷோபா சக்தி தொகுத்த ’சனதரும போதினி’ – சின்னக் கதையாடல்கள். மலையாளத்தில் எம்.சுகுமாரன் எழுதிப் பிரபலமாகித் தமிழில் சிவன் மொழிபெயர்த்த ’இறுதிச் சடங்கு’

News image

சுப்ரஜா

Updated On :30 மார்ச் 2021, 12:23 pm

படிப்பது என்பது ஒரு கலை. எனில் படிக்க வைப்பதும் ஒரு கலைதான். திருமதி ஷெல்லி எழுதி ஜோதி நிலையம் அ.கி.ஜெயராமன் மொழிபெயர்த்த ’ராமனின் கதை’  என்கிற சிறுவர் நூல்தான் எனக்குத் தெரிந்து படிக்கக் கிடைத்த முதல் நூல்.

நேற்று வெளியான லா.ச.ராமாமிருதம் எழுதிய ஆட்டோபயோகிராபி ’விளிம்பில்’ (தி எட்ஜ்) இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். என்னை மிகவும் பாதித்த இரண்டு நூல்கள் பற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஒன்று பிரான்ஸ் நாட்டிலிருந்து சுகன், ஷோபா சக்தி தொகுத்த ’சனதரும போதினி’ – சின்னக் கதையாடல்கள் இன்னொன்று மலையாளத்தில் எம்.சுகுமாரன் எழுதிப் பிரபலமாகித் தமிழில் சிவன் மொழிபெயர்த்த ’இறுதிச் சடங்கு’ இரண்டுமே ரேசர் எட்ஜ். படிப்பவனைக் குத்திக் கிழித்து ரணமாக்கி, ’இதுதான் உண்மை… பார்’ என்று மண்டையில் அறைகிறது. சனதரும போதினியில் 9 வீரியக் கதைகள், 19 கட்டுரை – கதையாடல்கள் உண்டு. இந்தியா – ஈழம் – புகலிடம் எனத் தொடரும் சாதீயத் தீயையும் மற்றும் தேசியம், ஆதிக்கப் பண்பாடுகள், ஆதிக்க இலக்கியங்கள் போன்ற மகாகதையாடல்களையும் சிதைத்துப் பார்க்கும் எத்தனங்களே இந்தச் சின்னக் கதையாடல்கள்.

‘இறுதிச் சடங்கு’, ஒரு வீரியமிக்க நாவல். மலையாள நாவல் இலக்கியத்தின் அதிரடியான வித்தியாசமான தொடுதல் எம்.சுகுமாரனுடையது. ‘ஷேக் கிரியா’ என்கிற ’இறுதிச் சடங்கு’ திரைப்படமாகி மாநில விருதையும் பெற்றது.

 இரண்டு வருடங்களுக்கு முன்பு கேரளத்திற்கு எழுத்தாளர்களைச் சந்திக்கப் பயணித்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட நாவல் ’ஷேக் கிரியா’. எனது மலையாள நண்பர் எனது வேண்டுகோளுக்கு இணங்கி நட்டநடு ராத்திரியில் ஏற்ற இறக்கங்களோடு ’ஷேக் கிரியா’ நாவலைப் படித்துக் காட்டினார். என் உறக்கம் தொலைந்தது.

கதையின் பிரதான நாயகன் குஞ்ஞய்யப்பனும் அவன் சார்ந்த தத்துவார்த்தக் கட்சியும் அதன் உறைந்து போன சிதிலங்களும்,  அவன் மனைவி குஞ்ஞோமனையும், அடிவயிற்றில் ஒரு கறுத்த மச்சத்துடன், இவர்களுக்கிடையே ஒரு விருச்சிக (மார்கழி) மாத இரவில் பிறந்து வீழ்ந்த கொட்டு நாணு எல்லாம் என் உறக்கத்தைச் சிதறடித்தார்கள்.

நல்ல இலக்கியம், மொழி கடந்து நிற்க வேண்டும். இதன் வீரியம் என்னைக் கலங்க அடித்தது. கேரள மாநிலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த இயக்கமாக விளங்கும் ஓர் அரசியல் கட்சி குறித்து இந்த நாவல் விவாதிக்கிறது. முழுக்க முழுக்க ரத்தமும் சதையுமான உயிர் உண்மை ரணங்கள். கேரளத்தைத் தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற நாவல் வெளியாக முடியாது.

இது முழுக்க முழுக்கக் கற்பனையில்லை. பத்து வருட காலம் எம்.சுகுமாரன் கட்சி சார்ந்த பத்திரிகையொன்றில் பிழை திருத்துபவராக இருந்து எழுதி, தற்போது சிறிய ப்ளாட்டில் வாசம் செய்யும் எம்.சுகுமாரனின் ‘இறுதிச் சடங்கு’ நாவல் இப்படித்தான் ஆரம்பிக்கிறது.

‘’நீங்கள் கையாளும் ஃபைல்கள், பணத் தொடர்பான கணக்கு வழக்குகள், செக் புத்தகம் போன்றவற்றை உடனடியாகப் பத்திரிகை ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டு, இன்று வரையிலான உங்களது ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு, முடிந்த விரைவில் வேலையிலிருந்து விலகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்’’.

ஒரு சனிக்கிழமை மதியத்தில் குஞ்ஞய்யப்பனின் வேலை நீக்க நோட்டீஸோடு ‘இறுதிச் சடங்கு’ தொடங்குகிறது.

குஞ்ஞய்யப்பன் தொடர்ந்து செய்யும் போராட்டம், அவன் சந்திக்கும் கசப்புகள், மறுபடியும் பணியில் சேர குஞ்ஞய்யப்பனின் போராட்டங்கள் எல்லாமே தோல்வியில்!.

’ரொமாண்டிக் ரெவல்யூஷனரி’ குஞ்ஞய்யப்பன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை விசாரிக்க வந்த ஜில்லா செகரட்டரி கடைசியில் திரும்பும்போது, ‘’உங்களோட கோரிக்கை மீது ஒரு நியாயமான தீர்மானத்தை எடுக்கலாம்.’’ – கார் கதவை மூடிய பிறகு தலையை மட்டும் வெளியே நீட்டித் தாழ்ந்த குரலில் புரட்சிக் கட்சியின் ஜில்லாத் தலைவர் கேட்டார்.

’’தோழரே… நீங்க ஈழவரா?’’

‘’இல்லை…. ஹரிஜன்,’’ குஞ்ஞய்யப்பன் பதிலளிக்கிறான்.

ஜில்லா செகரட்டரி கண்களில் அசட்டுத்தனத்துடன், ‘’தோழர்…. தவறாக நினைக்கக் கூடாது. கட்சிக்குள் சில நாயர் பிரமுகர்கள் ஈழவர்களை ஓரங்கட்ட முயற்சி செய்கிறார்கள்.’’

போராட்ட முடிவில் நீண்டதொரு கடிதம் எழுதும் வரை குஞ்ஞய்யப்பனுக்காகக் குடிசையின் பின்புறமுள்ள பலாமரமும் அதில் தொங்கும் ஊஞ்சல் கயிறும் விடிவதற்குள் அவனுக்கு உதவக் காத்திருக்கின்றன.

அரசியல்வாதிகளால் மக்கள் எப்படிச் சுரண்டப்படுகிறார்கள் என்பதோடு, நாம் சுரண்டப்படுகிறோம் என்ற சுரணையே இல்லாமல் இருக்கும் ஆதங்கத் தன்மையைக் கொடுக்கிறது ‘இறுதிச் சடங்கு’.

99-ல் வெளியான ‘இறுதிச் சடங்கு’ மொழிப்யர்ப்பு படிக்கக் கிடைத்தது. மூலத்தின் ஒரு புள்ளியும் சிதையாமல், உள்ளது உள்ளபடி, கண்டது கண்டபடித் தமிழில் எழுதியவர், தன் மேதாவித்தனத்தை இடைச்செருகாமல், சிதைக்காமல் தந்திருக்கிறார். தேடிப் படியுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.