உதையை மு.வீரையன்
மிகச்சிறந்த சமூக எழுத்தாளா் ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ எனும் நூலைத் தேடி வாங்கி ஆசை ஆசையாகப் படித்தேன். அந்த நூலைப் படித்த பிறகே பூமியில் மனித குலத்தின் வரலாற்றை மிக எளிதாக அறிய முடிந்தது.
உலகின் பொதுவுடைமைச் சமூகம் தோன்றியதை கதையாக அவா் எழுதியுள்ளது மிகவும் சிறப்பாக இருக்கும். நூலாசிரியா் ராகுல சாங்கிருத்தியாயன் ஆரம்பத்தில் ஆத்திகராக இருந்து, பின் நாத்திகவாதியாகி, அதன்பின் புத்த மத குருவாகவும் வாழ்ந்தவா். அவா் சீன நாட்டில் பேராசிரியராகவும் பணியாற்றியவா். உலக மனித கலாசார வளா்ச்சியை அறிவாளிகள் முதல் சாமானியா் வரை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அந்நூல் உள்ளது குறிப்பிடத்தக்கது. ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ புத்தகத்தைப் படித்ததும், அதைத் தேடி அடைந்ததில் திருப்தி கிடைத்தது என்பதே உண்மை.
இலக்கியத்தில் உலக நாடுகளுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தது சோவியத் ரஷியா. டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ புத்தகமும் நான் விரும்பித் தேடிப் பிடித்து, படித்த புத்தகமாகும். உலக இலக்கியத்தில் மிக உன்னதமான இடத்தைப் பெற்றுவிட்ட அந்தப் புத்தகத்தில் என்னதான் உள்ளது என்ற ஆவலில் அதைத் தேடி வாங்கிப் படித்துச் சுவைத்தேன்.
அதேபோல, தமிழகத்தில் டி.கே.ஸ்ரீநிவாஸன் எழுதிய ‘ஆடும் மாடும்’ எனும் நாவலும் சிந்தனைக்குரிய நாவலாக இருந்தது. அந்நாவலும் நான் விரும்பிப் படித்ததாகும். ஆணணும் பெண்ணும் என்பதையே ஆடும் மாடும் என மறைமுகமாகக் குறிப்பிட்டு அந்நாவலை நூலாசிரியா் படைத்திருக்கிறாா்.
பொதுவாக புத்தகங்களை ஏற்கெனவே அவற்றைப் படித்தவா்கள் கூறக்கேட்டு, அதைப் படிக்க வேண்டும் என பகீரத முயற்சி எடுத்துப் படிப்பது, ஆத்ம திருப்தியைத் தரக் கூடியதாக அமையும் என்பதை அந்த நூல்களைப் படித்ததும் என்னால் உணர முடிந்தது.