

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றுவரும் பபாசியின் 49-ஆவது ஆண்டு புத்தகக் காட்சியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற உரையரங்கில் "படித்தால் எழுவோம்' எனும் தலைப்பில் மேடைப் பேச்சாளர் இதயகீதம் இராமானுஜம் ஆற்றிய உரை:
உலக அளவிலான கலாசாரத்தைப் பறைசாற்றிய அறிவுச் சுரங்கமாக தமிழ் மொழி இருந்து வருகிறது. உலகிற்கே அறிவைப் பறைசாற்றும் பொக்கிஷங்களாக, தமிழ் இலக்கிய நூல்கள் விளங்குகின்றன.
தற்கால இளைஞர்கள் அதிகமான நேரத்தை கைப்பேசி, கணினிகளில் செலவிடுகின்றனர். இதனால் தமிழகத்தின் பாரம்பரியம், கலாசாரத்தை அதிகம் அறிய முடியாத நிலையுள்ளது. சமூகம், மொழி, இனம் சார்ந்த உணர்வுகள் இளைஞர்களிடையே இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, புத்தகத் திருவிழாக்கள் வாயிலாக இளைஞர்களுக்குத் தமிழக இலக்கியப் புத்தகங்கள் மூலம் கலாசார, பண்பாடுகளைக் கற்பிப்பது அவசியமாகிறது.
மனித சிந்தனை மாற்றத்துக்குப் புத்தகங்கள் அவசியம். ஜாதியில்லாத, ஏற்ற தாழ்வற்ற, சமூகம் அமைவதற்கு புத்தக வாசிப்பும், கல்வி கற்பதும் அவசியமாகும். தமிழகத்தில் சங்க காலம் தொட்டே பெண்கள் கல்வி கற்று கவிதை புனைந்ததை சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இடைப்பட்ட காலத்தில் பெண்களுக்கான கல்வி உரிமை மறுக்கப்பட்டதால், அவர்கள் கல்வி கற்காத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. கல்வி கற்காதவர்கள் யார் எதைக் கூறினாலும் அறியாமையால் அதை உண்மை என்று நம்பும் நிலை ஏற்படும்.
ஆனால், கல்வி என்பது ஒருவர் கூறும் கருத்தை சரியா, தவறா என சிந்திக்க வைக்கும். ஆகவே கல்வி என்பது நம்மை மேம்படுத்தும் என்றார்.
நிகழ்ச்சியில் "தமிழில் பாடி அல்லல் தீர்க்க' என்னும் தலைப்பில் கவிஞர் மனுஷ்யபுத்திரன், "ஊடகமும் தமிழும்' எனும் தலைப்பில் பேச்சாளர் முத்துக்குமரன் ஆகியோர் உரையாற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.