படித்தால்... பிடிக்கும்!

படித்தால்... பிடிக்கும்!
Updated on
2 min read

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என்பதைப் போல நம் நாட்டு அறிவியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டறிந்ததை முறையாகத் தொடர்ந்திருந்தால் உலகின் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் நம் வசம் வந்திருக்கும் என நூலின் முன்னுரையில் நூலாசிரியர் ஆதங்கத்தோடு குறிப்பிடுவதற்கு வலுசேர்க்கும் வகையில் ஆய்வாளர்கள் பட்டியல் உள்ளது.

ஜெகதீச சந்திர போஸின் மின்காந்த அலைகளை ஒலி அலைகளாக மாற்றலாம் என்ற கண்டுபிடிப்பை வைத்தே வானொலியை மார்க்கோனி கண்டறிந்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அதேபோல, சர் சி.வி.ராமன் முதல் 27 இந்திய ஆராய்ச்சியாளர்களை வரிசைப்படுத்தி வியக்க வைத்துள்ளார். ஆர்யபட்டா, பாஸ்கரர், கணிதமேதை ராமானுஜன் உள்ளிட்டோரைப் பற்றிய செய்திகள் படிப்போரின் விழிகளை விரிய வைக்கின்றன. பள்ளிக் குழந்தைகள் முதல் கற்பிக்கும்

ஆசிரியர்கள் வரை அனைவரும் படித்துப் பயனடையத் தக்க நம் நாட்டு ஆய்வு அறிஞர்களின் சிறிய தொகுப்பான இந்த நூல் 143 பக்கங்களுடன், ரூ.150 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

"மறக்க முடியாத வானிலை மாற்றங்கள்', வானிலையாளர் ஈ.ரா.சுகுமார், நூல் குடில் பதிப்பகம்.

இயற்கை வானிலை மாற்றம் குறித்து அரசு நிர்வாகங்கள் தண்டோராவில் தொடங்கி, வானொலி, தொலைக்காட்சி என நவீன தொழில்நுட்பங்கள் வரை மக்களிடையே விழிப்புணர்வையும், அதன் மூலம் பாதுகாப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், கணினியுகமான தற்காலத்திலும் வானிலை அறிவிப்பு என்பது சாமானியர் முதல் அதிகாரத்தில் இருப்போர் வரை அனைவரையும் பதற்றத்திலே கேட்க வைப்பதாக உள்ளது. இத்தகைய சூழலில் பேரிடர்கள், பருவமழைக் காலங்கள், அக்னி நட்சத்திரம், புயல், பெருமழை என பல தெரிந்த விஷயங்களில் தெரியாத உண்மைகளை இந்நூலாசியர் பல்வேறு தலைப்புகளில் விளக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

இந்திய வானிலை மையம் தனது பொன் விழா ஆண்டைக் கடந்த நிலையில், அதில் பணியாற்றிய அனுபவம் மூலம் பல்வேறு அறிவியல் ரீதியிலான இயற்கை மாற்றத் தகவல்கள் தொகுக்கப்பட்டு ள்ளன.

நூலானது 128 பக்கங்களுடன், ரூ.150 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

"ஆயர் இன வரைவியல்', சா.கருணாகரன், தடாகம் பதிப்பகம்.

நமது தேசத்தில் பல்வேறு இனத்தார் இணைந்து வாழ்ந்து வரும் நிலையில், அதில் ஆயர் இனம் குறித்த ஆய்வு நூலாக வெளியாகியுள்ளது. சங்க காலம் முதல் தற்காலம் வரை ஆயர் இன மக்கள் தங்களுக்கான தனித்துவ அடையாளத்துடன் வாழ்வதை நூலில் பல்வேறு தலைப்புகளில் நூலாசிரியர் எடுத்துரைத்துள்ளார். அதற்கு இலக்கியம், கள ஆய்வு என பல்வேறு ஆவணங்களையும் அவர் படிப்போரின் பார்வைக்கு வைத்துள்ளார்.

ஆயர்கள் நாடோடிகளாக பல்வேறு தேசங்களில் சுட்டிக் காட்டப்படுவதற்கு மத்தியில், அவர்கள் வேளாண்மையோடும், கால்நடை வளர்ப்புத் தொழிலோடும் எந்த வகையில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என நூலில் உரிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளன. தமிழில் சங்க காலத்தில் முல்லை நிலப் பாடல்களாக வரும் 234 பாடல்களில் ஆயர்கள் வாழ்வு காணப்படுவதாகவும் நூலாசிரியர் தெரிவித்து, அதற்கான ஆதாரப் பாடல்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நூல் 356 பக்கங்களுடன், இதன் விலை ரூ.395 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com