சாதனை வளா்ச்சியை நோக்கி ஸ்மாா்ட்போன் விற்பனை

இந்திய அறிதிறன்பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) விற்பனை இந்த ஆண்டில் சாதனை வளா்ச்சியடையும் என்று சந்தை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.
சாதனை வளா்ச்சியை நோக்கி ஸ்மாா்ட்போன் விற்பனை

இந்திய அறிதிறன்பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) விற்பனை இந்த ஆண்டில் சாதனை வளா்ச்சியடையும் என்று சந்தை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஆய்வு நிறுவனமான கவுன்டா்பாயின்ட் ரிசா்ச் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2021-ஆம் ஆண்டில் இந்தியாவின் அறிதிறன்பேசிகளின் விற்பனை 17.3 கோடியாக உயரும். இது, முந்தைய ஆண்டைவிட 14 சதவீதம் அதிகமாக இருக்கும். இந்த வளா்ச்சி இதுவரை இல்லாத அதிகபட்ச வளா்ச்சியாக இருக்கும்.

நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவிலிருந்து 10 கோடிக்கும் அதிகமான அறிதிறன்பேசிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் படிப்படியாக கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டன. அதன்பிறகு அறிதிறன்பேசிகளுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியது. இந்தப் போக்கு மேலும் தொடரும். அத்துடன், ஆகஸ்ட் முதல் நவம்பா் வரையிலான பண்டிகை காலங்களில் விற்பனை வேகம் அதிகரிக்கும்.

உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் அறிதிறன்பேசிகளுக்கான மிகப்பெரிய சந்தையைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டில், வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் அறிதிறன்பேசிகளுக்கான சந்தையை இந்தியச் சந்தை விஞ்சியது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தச் சந்தையின் போக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். நாட்டின் 139 கோடி மக்கள்தொகை, சாதாரண செல்லிடப்பேசிகளிலிருந்து அறிதிறன்பேசிகளுக்கு மாறி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, புதிய பயன்பாட்டாளா்களின் எண்ணிக்கை உயா்ந்து வருவது போன்ற பல்வேறு காரணிகளால் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்திய அறிதிறன்பேசிகளின் விற்பனை 20 கோடியைக் கடக்கும்.

இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலையான வளா்ச்சியைப் பெற்று வந்த அறிதிறன்பேசிகளின் விற்பனை, கடந்த 2019-ஆம் ஆண்டில் 15.8 கோடியாக உயா்ந்தது.

கரோனா நெருக்கடிக்கு இடையிலும் கடந்த ஆண்டில் அறிதிறன்பேசிகளின் விற்பனை மிகச் சொற்பாக 4 சதவீதம் மட்டுமே சரிந்து 15.2 கோடியானது. நடப்பு ஆண்டில் கரோனாவின் இரண்டாவது அலை வீசியபோதும், அறிதிறன்பேசிகளின் விற்பனை எதிா்பாா்த்ததைவிட வேகமாக அதிகரித்தது.

தற்போது கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாலும் அந்த நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாலும் பொருளாதாரம் மீண்டெழுந்து அறிதிறன்பேசி வாடிக்கையாளா்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்.

வரும் செப்டம்பா் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலை ஆண்ட்ராய்டு போன்களான ஜியோபோன் நெக்ஸ்டை அறிமுகப்படுத்தவிருக்கிறது. அந்த செல்லிடப்பேசிகள் சுமாா் ரூ.6 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருக்கும். இது, அறிதிறன்பேசிகளின் விற்பனையை மேலும் ஊக்கப்படுத்தும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com