மெய்நிகர் வணிகம் 5: கிரிப்டோகரன்சியின் எதிர்காலம்

கிரிப்டோகரன்சி முதலீடு சரியானதா? நல்லதா? என்கிறதை விட அதன் எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்கப்போகிறது என்பதுதான் அந்த வணிகத்தில் ஈடுபடுவோரின் கேள்வியாக இருக்கிறது
மெய்நிகர் வணிகம் 5: கிரிப்டோகரன்சியின் எதிர்காலம்
மெய்நிகர் வணிகம் 5: கிரிப்டோகரன்சியின் எதிர்காலம்

எந்த வணிக அமைப்பிற்கும் லாபம், இழப்பு தாண்டி அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதுதான் முக்கியம்.

கிரிப்டோகரன்சி முதலீடு சரியானதா? நல்லதா? என்கிறதை விட அதன் எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்கப்போகிறது என்பதுதான் அந்த வணிகத்தில் ஈடுபடுவோரின் கேள்வியாக இருக்கிறது. கிணற்றில் பந்தைப் போட்டுவிட்டு நீர் அதிகரிக்கும் போது எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கும் போது நீர் வற்றினால் கூட தாங்கிக்கொள்ளலாம். ஆனால், கிணற்றைக் காணவில்லையென்றால் என்ன செய்வது. கிரிப்டோவணிகம் அப்படிப்பட்ட ஒன்றுதான். இருந்தாலும் , அதன் எதிர்காலம் பற்றி பலரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

உற்பத்தி மற்றும் தேவையின் அடிப்படையில் கிரிப்டோ நாணயங்களின் விலை அதிகரிப்பதில்லை. அது ஒருவகையான ஊகத்தின் அடிப்படையில் பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் நிகழும் வணிகம் என்பதால் உறுதியான நிலைப்பாட்டையும் தெளிவையும் எளிதாக அளித்துவிடமுடியாது. ஆனால், பொருளாதார வல்லுனர்கள் சில அவதானிப்புகளால் அடுத்த சில ஆண்டுகளில் கிரிப்டோ வணிகம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும் என்பதைக்  கூறிவருகிறார்கள்.

சுலபமான முதலீடுகள்:

என்னதான் கிரிப்டோகரன்சியில் அதிகப்படியான நாணயங்கள் அடையாளம் இல்லாமல் இருந்தாலும் பிட்காயின், எதெர்னம் போன்ற முக்கிய கரன்சிகளின் மீதான நம்பிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது அதன் முதலீட்டு தொகையைப் பார்த்தால் தெரிய வருகிறது.

இத்தனை ஆயிரங்களைத் தான் முதலீடு செய்ய வேண்டும் என்றில்லாமல் பைசா கணக்கில் கூட கிரிப்டோ வணிகத்தில் ஈடுபடலாம் என்பது பலருக்கும் ஏதுவான ஒன்றாக மாறியதால் பலரும் அந்த வணிகத்தை முயற்சி செய்து பார்க்கிறார்கள். சிறியளவில் முதலீடு செய்தால் தான் என்ன ? என்கிற மனநிலையில் பலரும் இருப்பதால் இந்த வணிகம் முன்னைவிட பெரும் பாய்ச்சலுடன் சென்றுகொண்டிருக்கிறது.

மேலும் , கிரிப்டோ வணிகத்தில் ஈடுபட உருவாக்கப்பட்ட சில செயலிகளும் ஏமாற்றத்தை அளிக்காமல் பரிவர்த்தனைகளை மிகச் சரியாக செய்து வருவதால் இனி வரும் காலங்களில் முதலீட்டாளர்கள் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் எனத் தோன்றுகிறது.

எலான் மஸ்க்கிலிருந்து பில் கேட்ஸ் வரை கிரிப்டோ பற்றிய தங்களில் நிலைப்பாடுகளை அடிக்கடி தெரிவித்து வருவதால் அதன் தாக்கம் குறைவதில்லை. அப்படி சில முக்கிய நாணயங்கள் பிரபலம் அடைந்துள்ளது. குறிப்பாக எலான் மஸ்க் முதலீடு செய்த ‘டோஜ் காயின்’ சமீப காலத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கிரிப்டோவின் எதிர்காலம்:

இந்தியாவில் கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சியைத் தடை செய்வது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அதை மத்திய அரசு ஒத்திவைத்தது. மேலும், கிரிப்டோ வணிகத்தைத் தடை செய்தாலும் அரசே அதற்கு மாற்றாக ரிசர்வ் வங்கி வாயிலாக புதிய நாணயங்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம் என தெரிவித்ததால் பலரும் கிரிப்டோகரன்சியின் தாக்கத்தை அரசு உணர்ந்ததால் இப்படியான முடிவை எடுக்கிறார்கள் என தெரிவித்தனர். 

மேலும், உலகளவில் இந்தியாவில் தான் அதிகமான கிரிப்டோ முதலீட்டாளர் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உண்மையில் இப்போது இந்தியாவில் கிரிப்டோவைத் தடை செய்ய வாய்ப்பில்லை. ஆனால், எதிர்காலத்தில் அப்படியான முடிவு எடுக்கப்படும் என்றால் நிச்சயம் நெறிப்படுத்தப்படுமே ஒழிய முற்றிலும் தடை செய்ய முடியாது என்கிறார்கள் மெய்நிகர் செலவாணி வல்லுநர்கள்.

உலகளவிலும் அடுத்த சில ஆண்டுகளில் கிரிப்டோகரன்சிகளைப் பற்றிய புரிதல் பலருக்கும் ஏற்படும் என்பதால் கோடிக்கணக்கான மக்கள் இந்த வணிகத்திற்குள் வருவார்கள் என எதிர்பார்க்க்ப்படுகிறது.

இதையெல்லாம் தாண்டி மனிதர்கள் அவரவர் வளர்ச்சியின் மீது ஈடுபாடு கொண்டிப்பதால்  தங்கள் வேலையின் மூலம் கிடைக்கும் பணத்தைத் தாண்டி வேறு எதிலாவது முதலீடு செய்யவேண்டும் என நினைக்கிறார்கள்.

வங்கிகளின்  வட்டியோ, பங்குச் சந்தையோ கிரிப்டோகரன்சியைப் போல் பெரிய லாபத்தைக் கொடுப்பதில்லை. அதனால், இயல்பாகவே பலரும் லாபம் கிடைக்கிற பாதையை நாடுகிறார்கள். எல்-சால்வடர் நாடு கிரிப்டோகரன்சியை அங்கீகரித்து பிட்காயினை அந்நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாகவும் அறிவித்ததிலிருந்து கிரிப்டோ வணிகத்தை மற்ற நாடுகளும் அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் கிரிப்டோ வணிகம் தவிர்க்க முடியாத வர்த்தக சந்தையாக மாறும் என்பதே பலரின் கருத்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com