வலிமையான உடலுக்கு வழி

வலிமையான உடலுக்கு வழி

அண்மையில் பஞ்சுமிட்டாய் விற்பனையை தமிழ்நாடு அரசு தடை செய்தது. சில வாரங்களுக்கு முன்பு புதுச்சேரி அரசும் தடைசெய்தது குறிப்பிடத்தக்கது. இவ்வகை மிட்டாய் தயாரிப்புகளில் "ரோடமைன் பி' என்ற செயற்கை நிறமூட்டி கலக்கப்படுவதாக எழுந்த புகார் அடிப்படையில் இது புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்ற உண்மையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது ஓர் ஆரோக்கியமான நடவடிக்கை என்றாலும், இதுபோலவே கிராமப்புறங்களில் கடைகளில் விற்கும் பல்வேறு விலை மலிவான பண்டங்கள் மீதும் நடவடிக்கை தேவை. இவ்வகை பண்டங்களை தர ஆராய்ச்சி செய்து சான்றிதழ் பெற்ற பிறகே அப்பண்டங்கள் விற்பனைக்கு தகுதியுடையவையாக அறிவிக்கப்பட வேண்டும். ஏற்கெனவே முறைப்படி உரிமம் பெற்று செயல்படும் நிறுவனங்களின் தயாரிப்பை நாம் குற்றஞ்சாட்டவில்லை.

பொதுவாகவே குழந்தைகள் அடிக்கடி எதையாவது சாப்பிடும் பழக்கம் உடையவர்கள். இந்தப் பழக்கம் அடிப்படையில் ஒரு பொழுதுபோக்கு போல எடுத்துக் கொண்டாலும் அவர்களுடைய உடலில் ஏற்படக்கூடிய வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் ஓர் உந்துதல். சிறுவயதில் அவர்களுடைய உடல் வளர்ச்சியின் வேக விகிதம் அதிகம். அதற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் இது போன்ற நிறைய பண்டங்களை சாப்பிடத் தூண்டப்படுவதும் இயற்கையே.

உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்துக்களை முறைப்படி ஈடுசெய்வதே இதற்கு சரியான தீர்வாக அமைய முடியும். வேகவைத்த தானியங்கள், சிறுதானியங்கள், காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்

படும் சூப், பழங்கள் போன்றவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக, குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறித்த விழிப்புணர்வுடன் பெரியோர் செயல்படவேண்டும். குழந்தைகள் மண், பலப்பம், சாக்பீஸ் போன்றவற்றை உண்பது நுண்ணூட்டச்சத்து குறைபாட்டின் வெளிப்பாடுகளே.

முற்காலங்களில் வீடுகளிலேயே குழந்தைகளுக்குத் தேவையான தின்பண்டங்களைத் தயாரித்து அளிக்கும் வாய்ப்பு பரவலாக இருந்தது. அதுவும் கிராமப்புறங்

களில் ஒருவீட்டில் செய்யப்படும் முறுக்கு, சீடை, அதிரசம், அப்பம் போன்றவை அடுத்தடுத்த வீடுகளுக்குப் பகிரப்படும். பொதுவாகவே உறவினர்களுடன் சுற்றம் சூழ வாழ்ந்ததால், இவற்றைத் தயாரிப்பதற்கான மனித உழைப்பு இயல்பாக கைவரப்பெற்றது.

ஆனால், இன்றைய நவீன உலகில், குறிப்பாக எல்லாம் வியாபாரமயமாகியுள்ள உலகில் அனைத்தும் கடைகளில் வாங்கும் பழக்கம் அதிகமாகி வருகிறது. எந்த சிறிய கிராமம் ஒன்றிலும் உள்ள பெட்டிக் கடையில் அதிகமாக விற்பனையாகக் கூடியது குழந்தைகளுக்கான தின்பண்டங்களே. வண்ணமயமாக, குழந்தைகளை ஈர்க்கும் வகையில் அவை பொட்டலங்கள் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அவை கடைகளில் தொங்கவிடப்பட்டுள்ள விதமே குழந்தைகளை கடைகளின்பால் ஈர்க்கின்றன.

நம்மில் பலர் சிறுவர்களாயிருந்த காலம் முதற்கொண்டே இப்படிப்பட்ட பண்டங்கள் இருந்தனதான் என்றாலும், அப்போது இருந்த பண்டங்கள் அந்த அளவுக்கும் ஆபத்தை விளைவிப்பதாயில்லை. குருவி ரொட்டி, தேங்காய் பிஸ்கெட், கமர்கட், சுய்யம், கடலை மிட்டாய் எள்ளுருண்டை போன்ற ஆரோக்கியமான தின்பண்டங்கள் விற்கப்பட்டன. தற்போதும் இவை ஆங்காங்கே விற்பனை செய்யப்படுவதை மறுப்பதற்கில்லை.

ஆனால், அதே நேரத்தில் பல்வேறு ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு பல்வேறு வண்ணங்களில் திரவங்களாக சிறு சிறு பொட்டலங்களில் அடைக்கப்பட்டு பல வகையான தின்பண்டங்கள் கிடைக்கின்றன. இவற்றின் விலையைப் பார்க்கும்போது நிச்சயமாக இது தரமான பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருக்காது என்று எந்த அறிவுள்ளவரும் கணித்துவிட முடியும்.

இது இப்படி என்றால் வளர்ந்துவரும் நுகர்விய தாக்கம் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் எவ்வளவு குறைவான விலையில் முடியுமோ, அவ்வளவு குறைவான விலையில் வறுவல், முறுக்கு போன்ற தின்பண்டங்களை பொட்டலம் செய்து விற்பனை செய்கின்றன. வீடுகளில் இது போன்ற பண்டங்களுக்கான தயாரிப்பு இல்லாத நிலையில் சில நேரங்களில் குழந்தைகளின் வற்புறுத்தல்களாலும் பல நேரம் பெற்றோரேகூட சிறிது பணம் கொடுத்து அவர்களை கடைக்கு அனுப்பி விடுகின்றனர். எனவே, குழந்தைகள் கடைக்குச் சென்று தாங்கள் விரும்பக்கூடிய தின்பண்டங்களை எவ்வித பின் விளைவையும் உணராமல் வாங்கி உண்கின்றனர்.

தற்போது உணவகங்களில் அளவுக்கு அதிகமான காரம், மசாலா பொருள்கள், நிறமூட்டிகள் போன்றவை உணவுத் தயாரிப்புகளில் சேர்க்கப்படுகின்றன. இயல்பாக உணவு சாப்பிட்ட காலம்போய் உணவுகளில் என்னென்ன வகையான பொருள்கள் கலந்து இருக்குமோ என்ற அச்சத்துடனேயே சாப்பிட வேண்டியுள்ளது. எனவே, பெரியவர்கள் உண்ணும் உணவுத் தயாரிப்புகள் குறித்த கவலையும் எழுவது நியாயமானதே.

இயல்பாகவே குழந்தைகள் விவரம் அறியாதவர்கள்; ஒரு பண்டம் சுவையாக இருக்கிறது என்பது மட்டுமே அவர்களுக்குத் தெரியும். ஆனால், அந்தப் பண்டங்களில் கலக்கப்படும் தரமற்ற பொருள்கள் குறித்த விழிப்புணர்வு பெரியவர்களிடமே இல்லாதபோது குழந்தைகளிடம் எவ்வாறு இருக்கும்?

எனவே, கூடுமானவரை குழந்தைகளுக்கான தின்பண்டங்களை வீடுகளிலேயே தயாரித்து வழங்கும் பழைய முறை மீள வேண்டும். ஒருவேளை அவ்வாறு தனித்தனியாகத் தயாரிக்க பொருளாதார வசதி, நேரம் போன்றவை தடையாக இருக்குமானால், குறிப்பிட்ட ஒரு பகுதியில் வசிக்கும் ஒருசில குடும்பங்கள் ஒன்றிணைந்து மாதத்துக்கு ஒன்றிரண்டு முறை கூட்டாகச் சேர்ந்து தேவையான பொருள்களை வாங்கி தாங்களாகவோ அல்லது சமையலர்களை நியமித்தோ தயாரித்து பகிர்ந்து கொள்ளும் முறையைக்கூட பின்பற்றலாம்.

எது எப்படியோ குழந்தைகள் உடல் நலனில் உடனடியாக கவனம் செலுத்துவது, அவர்களது கல்வியில் கவனம் செலுத்துவதற்கு இணையாக இருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com