/

அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா அவசியம்

பள்ளி மாணவர்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என சென்னை பெருநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.

Updated On :13 ஆகஸ்ட் 2013, 4:53 am

பள்ளி மாணவர்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என சென்னை பெருநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சமீப காலங்களில் பள்ளி மாணவர்கள் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனைத் தடுக்கும் பொருட்டு பள்ளிகளுக்கு சில கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது, அதனை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையர் (கிழக்கு) சங்கர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

பள்ளி மாணவர்கள் கடத்தலைத் தடுக்க சென்னை பெருநகரக் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் பள்ளிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கண்காணிப்பு பலப்படுத்தப்படும்: பள்ளிகளில் இருந்து குழந்தைகளை அழைத்து செல்ல வரும் பெற்றோர், உறவினர், யாராக இருப்பினும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுடன் அறிமுகமாகியிருக்க வேண்டும்.

புதிதாக வரும் யாருடனும் மாணவர்களை அனுப்பக் கூடாது. மாணவர்களை அழைத்து செல்ல வருபவர்களைக் கண்காணிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லும் வேன் மற்றும் ஆட்டோ டிரைவர்களின் பின்னணியைத் தெரிந்திருக்க வேண்டும்.

சி.சி.டி.வி. கேமரா: அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்களை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியும். இத்தகையக் கட்டுப்பாடுகளின் மூலம் வரும் காலங்களில் கடத்தல் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும்.

இந்தக் கட்டுப்பாடுகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிககை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.