/

குழந்தை உடலில் தீ பிடிக்க ஆசிட் வெளிப்படுவதே காரணம் டாக்டர் வி.ஜெயராமன் தகவல்

உடலில் திடீர் திடீரென தீப்பிடிக்க ஆசிட் வெளிப்படுவதே காரணம். குழந்தை வளர வளர உடலில் இருந்து வெளியாகும் ஆசிட்டின் அளவு குறையும் இதனால் தீப்பற்றுவது குறைந்துவிடும்.

Updated On :11 ஆகஸ்ட் 2013, 11:04 pm

உடலில் திடீர் திடீரென தீப்பிடிக்க ஆசிட் வெளிப்படுவதே காரணம். குழந்தை வளர வளர உடலில் இருந்து வெளியாகும் ஆசிட்டின் அளவு குறையும் இதனால் தீப்பற்றுவது குறைந்துவிடும். எனவே குழந்தையை எட்டு வயது வரை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீக்காய சிகிச்சைப் பிரிவின் முன்னாள் தலைவர் டாக்டர் வி.ஜெயராமன் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் தரங்கிணியைச் சேர்ந்த தம்பதி கர்ணன், ராஜேஸ்வரியின் இரண்டரை வயது ஆண் குழந்தை ராகுல். ராகுல் உடலில் எதிர்பாராத நேரங்களில் திடீர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் குழந்தை பெற்றோர் பீதியடைந்தனர். இது மாய மந்திரம் என அக்கம் பக்கத்தினரும் பீதியடைந்தனர்.

ராகுல் பிறந்து இரண்டரை மாதங்களில் நான்கு முறை அவன் மீது தீப்பற்றியுள்ளது. தந்தை கர்ணன் முதலில் உள்ளூர் டாக்டரை அணுகினார். குழந்தையின் உடலில் தீப் பற்றுவதற்கான காரணம் தெரியாததால் அக் குழந்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக் காய சிகிச்சையில் சேர்க்கப்பட்டது. குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் உடலிலிருந்து அமிலம் (ஆசிட்) வெளிப்படுவதே தீ பற்றி எரிவதற்கு காரணம் என்று டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும் வேறு ஏதாவது காரணமாக இருக்கலாம் என்றும் பரிசோதனை செய்யப்பட்டது. இருப்பினும் முதல் கட்டமாக ஆசிட் வெளிப்படுதலே தீ பற்றுவதற்கு காரணம் என்று டாக்டர்கள் முடிவுக்கு வந்தனர்.

இது, குழந்தை வளர, வளர உடலில் ஆசிட் வெளிப்படும் தன்மை குறையும் என்றும் அதுவரை, குழந்தையை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் எனவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.

20க்கும் மேற்பட்ட பரிசோதனைகள்: இது குறித்து கீழ்ப்பாக்கம் பச்சிளம் குழந்தைகளின் துறைத் தலைவர் டாக்டர் நாராயண பாபு கூறியது: விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் சிசிக்சை அளிக்கப்பட்டன. மேலும், ராகுல் உடலில் தீப்பிடிப்பதற்கான காரணங்கள் முமுமையாக அறிய முடியாத காரணத்தால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி ராகுல் அனுமதிக்கப்பட்டான்.

இங்கு அனுமதிக்கப்பட்ட ராகுலுக்கு ரத்தம், சிறுநீர், வியர்வை உள்பட 20-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்ய மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவ்வாறு பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட 20 மாதிரிகளில் 5 பரிசோதனைகளின் ஆய்வு அறிக்கை மட்டுமே தற்போது கிடைத்துள்ளன.

மீதம் உள்ள இதர பரிசோதனைகளின் ஆய்வு அறிக்கை வரும் புதன்கிழமை கிடைக்கும். அதன் பிறகே தீப்பிடிப்பதற்கான காரணத்தை தெரிந்து சிகிச்சை அளிக்க முடியும். அது வரை உடலில் உள்ள காயங்கள் குணமடைவதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், குழந்தை குளிர்ச்சியான இடத்தில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் மற்ற குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார் அவர்.

எட்டு வயது வரை பாதுகாப்பு தேவை: குழந்தையின் உடலில் தீப்பற்றுவது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீக்காய சிகிச்சைப் பிரிவின் முன்னாள் தலைவர் டாக்டர் வி.ஜெயராமன் கூறியது: தற்போது இரண்டரை மாத குழந்தையின் உடலில் தீப்பற்றியது போல் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 11 வயது மாணவனுக்கு இது போன்ற பிரச்னை இருந்தது.

நமது உடலில் இருந்து ஆசிட் வெளிப்பட்டால் இதுபோன்று அடிக்கடி தீப்பற்றும். அதனால், குழந்தையை எப்போதும் குளிச்சியான இடத்தில் வைத்திருக்க வேண்டும். குழந்தையின் உடல் சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய உடைகளை அணிவிக்கக் கூடாது.

காய்ச்சல் வந்தால் கூட உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இதனால் குழந்தையின் உயிருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பாடது. குழந்தை வளர வளர உடலில் ஆசிட் வெளிப்படுவது குறைந்து விடும். அதனால், எட்டு வயது வரை குழந்தையை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்றார் அவர்.

10 சதவீதம் தீக்காயம்: இது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீக்காயத்துறைத் தலைவர் டாக்டர் ஜெகன்மோகன் கூறியது:

இரண்டரை வயது குழந்தையின் எடை குறைவாக இருப்பதால் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைக்கு புதிதாக ஏற்பட்ட தீக்காயம் அதிகளவில் இல்லை. முன்பு ஏற்பட்ட தீக்காயத்தின் புண்கள் மட்டும் 10 சதவீதமாக உள்ளது. குழந்தைக்கு திடீரென தீப்பிடிக்க வாய்ப்பு இல்லை. அதற்காக அனைத்து பரிசோதனைகளும் எடுத்துள்ளோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.