/

புற்று நோய் ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்

புற்று நோய் ஆரம்ப அறிகுறிகளை நோயாளிகள் அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்று மியாட் மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் பிருத்வி மோகன்தாஸ் கூறினார்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2013, 11:02 pm

புற்று நோய் ஆரம்ப அறிகுறிகளை நோயாளிகள் அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்று மியாட் மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் பிருத்வி மோகன்தாஸ் கூறினார்.

"இந்தோ-பிரிட்டிஷ் ஹெல்த் இன்ஷியேட்டிவ்' மற்றும் "தி சென்னை ஃபோட்டோ வாக்' ஆகியவை இணைந்து மகேஷ் புற்று நோய் விழிப்புணர்வு அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) ஏற்பாடு செய்திருந்த புற்று நோய் விழிப்புணர்வு நடைப் பயண தொடக்க நிகழ்ச்சியில் டாக்டர் பிருத்வி மோகன்தாஸ் பேசியதாவது:-

விழிப்புணர்வு ஏன்? ""புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2004-ஆம் ஆண்டு 8 லட்சத்து 19 ஆயிரத்து 354 பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2015-ஆம் ஆண்டு 10 லட்சத்து 60 ஆயிரத்து 889-ஆக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியமாகிறது. புற்று நோயின் ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல்,தொடக்க நிலையில் உரிய சிறப்பு சிகிச்சையை ஒருவர் பெறும் நிலையில் புற்று நோயைக் குணப்படுத்த முடியும். எனவே குடும்ப மருத்துவர் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களும் புற்று நோய் அறிகுறிகளை நோயாளியிடம் கண்டறியும் நிலையிலோ அல்லது சந்தேகப்படும் நிலையிலோ சிறிதும் தாமதிக்காமல் புற்று நோய்க்கு உரிய சிறப்பு மருத்துவரிடம் செல்லுமாறு நோயாளியை அறிவுறுத்த வேண்டும்.

மருத்துவ மாநாடு: உடலின் பல்வேறு உறுப்புகளில் புற்று நோய் ஏற்படுகிறது. இதைக்

கருத்தில் கொண்டு 600 புற்று நோய் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டுக்கு சென்னையில் வரும் செப்டம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புற்று நோய் விழிப்புணர்வின் ஒரு பகுதியாக புற்று நோயாளிகளை மையமாக வைத்து எடுக்கப்படும் புகைப்படங்களில், 35 சிறந்த புகைப்படங்களைத் தேர்வு செய்து செப்டம்பர் 6, 7, 8 ஆகிய தேதிகளில் சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள ஹோட்டல் ஹில்டனில் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார் டாக்டர் பிருத்வி மோகன்தாஸ்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநர் ராஜீவ் மேனன் கலந்து கொண்டு பேசியதாவது:

புற்று நோயை எதிர்த்து துணிச்சலுடன் போராடிய இசை அமைப்பாளர் மகேஷ் மகாதேவன்தான் என்னை இயக்குநர் மணிரத்தினத்திடம் அறிமுகப்படுத்தினார். அவரது நினைவாக இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுவது வரவேற்கத்தக்கது.

ஒருவர் புற்று நோயால் பாதிக்கப்படும் நிலையில் மருந்து சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை ஆகியவை அளிக்கப்பட்டாலும்கூட, பாதிக்கப்படுவோருக்கு புற்று நோயை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை அளிப்பதுதான் முக்கியமான சிகிச்சையாகும் என்றார் ராஜீவ் மேனன்.

இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள பிரிட்டிஷ் துணைத் தூதர் மைக் ரிதாவ்ரியானகிஸ், அவரது மனைவி லிபி, மியாட் மருத்ததுவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ், நிர்வாக இயக்குநர் டாக்டர் பி.வி.ஏ.மோகன்தாஸ், மகேஷ் புற்று நோய் விழிப்புணர்வு அறக்கட்டளையின் அறங்காவலர் அருணா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.