பிணி தீர்க்கும் அற்புத குழந்தை இயேசு திருத்தலம்!
By ஆர். முருகன் | Published On : 24th December 2021 05:00 PM | Last Updated : 25th December 2021 03:26 PM | அ+அ அ- |

திருச்சி காட்டூர் அற்புத குழந்தை இயேசு திருத்தலம்
திருச்சி: தங்களது பிணி தீர்க்க வேண்டிக் கொண்டவர்களுக்கு அதனை நிறைவேற்றித்தரும் நம்பிக்கையாக திருச்சி காட்டூர் அற்புத குழந்தை இயேசு திருத்தலம் விளங்குகிறது.
இந்த திருத்தலத்தில் வேண்டிக் கொண்டதால் பிணி நீங்கிய பலரும் தங்களது அனுபவங்களை கையெழுத்திட்டு வழங்கியுள்ளதை ஆலயத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.infantjesuschurch.in என்ற இணைய முகவரியில் இடம் பெற்றிருப்பதே இந்த ஆலயத்தக்கான மதிப்புமிக்க சான்றாக அமைந்துள்ளது.
மின்சாரம் பாய்ந்து பாதிக்கப்பட்டோர், கை, கால் செயலிழந்தோர், இதயநோயால் பாதித்தோர், தோல் வியாதி உள்ளிட்ட பல்வேறு வகையான பாதிப்புகளுக்குள்ளாகிய நபர்களும் இங்கு வேண்டியதால் குணமடைந்ததாகக் கூறுகின்றனர். மேலும், திருமணத் தடை, குழந்தைப் பேறு, வேலைவாய்ப்பு, குடும்பப் பிரச்னை, தொழில் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கும் இந்தத் திருத்தலம் தீர்வைத் தருகிறது என்பது இவர்களது நம்பிக்கையாக உள்ளது.
இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு வேண்டியதை அருளும் திருத்தலமாகவும் உள்ளதாகக் கூறுகின்றனர் பயனடைந்தோர். இந்தத் திருத்தலமானது இப்போது காட்டூரின் அடையாளமாகவும் மாறிப்போனது.
கடந்த 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆயர் அந்தோனி டிவோட்டா தலைமையில், திருப்பலியுடன் குழந்தை இயேசு ஆலய இடம் புனிதம் செய்யப்பட்டு அப்போதைய பங்குத்தந்தை அருளானந்தம் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி அப்போதைய பங்குத்தந்தை சகாயராஜா பொறுப்பில் ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. அழகிய வேலைப்பாடுகளுடன், தேவலாயத்துக்கான சிறப்பு அலங்கார அமைப்புகளுடன் கட்டப்பட்டு அனைத்து திருப்பணிகளும் முடிந்த பிறகு நவநாள் ஜெபம் தொடங்கப்பட்டது. பின்பு, ஆலய அபிஷேகம் நடத்தப்பட்டு தினந்தோறும் காலை திருப்பலி தொடங்கியது (இன்று வரை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இந்த ஆலயமானது 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் காட்டூர் புனித அந்தோனியார் ஆலய பங்கிலிருந்து அற்புத குழந்தை இயேசு ஆலயத்தை தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. இந்த பங்கின் முதல் பங்கு தந்தையாக இன்னாசி முத்து அடிகளார் நியமனம் செய்யப்பட்டார். இவர், 2013ஆம் ஆண்டு தொடங்கி 2017ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்கு பங்குத் தந்தையாக பணியாற்றினார். பின்னர், 2017 ஆம் ஆண்டு ஜூன் இறுதியிலிருந்து இரண்டாவது பங்குத்தந்தையாக அ. சூசைராஜ் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்.
ஆலயத்தின் சிறப்பு நிகழ்வுகள்: இந்த ஆலயத்தில் 17.09.2009 முதல் குழந்தை இயேசு நவநாள் ஜெபம் தொடங்கப்பட்டது. சிறப்பாக நவநாள் ஜெபத்தின் வழிபாட்டு முறை மற்றும் அதன் ஆசி பெறுவது பற்றி விவரிக்கப்பட்டது. அன்று முதல் நவநாள் ஜெப வழிபாடு தொடர்ந்து நடைபெறுகிறது. 01.07.2012-இல் ஆயர் அந்தோனி டிவோட்டா தலைமையில், மறைமாவட்ட முதன்மை குரு தாமஸ் பால்சாமி முன்னிலையில் மக்கள் கூட்டத்தில் ஆலய அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
03.02.2013 முதல் குழந்தை இயேசு ஆலய தேர் திருவிழா சிறப்பாக தொடங்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் தேர் பவனி திருவிழா சிறப்பான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருப்பலி விவரம்: திங்கள், செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் காலை 6.15 மணி திருப்பலி நடைபெறுகிறது. வியாழன் முற்பகல் 11.15 மணி, மாலை 6.30 மணிக்கு நவநாள் திருப்பலி நடைபெறுகிறது. இதேபோல, சனி மாலை 6.30 மணி, ஞாயிறு காலை 7.00 மணி, ஞாயிறு முற்பகல் 11.15, மாலை 6.30 மணிக்கு திருப்பலி நடைபெறுகிறது. வியாழக்கிழமை தோறும் முற்பகல் 11.15 மணி, மாலை 6.30 மணிக்கு அற்புத குழந்தை இயேசுவின் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர், சாட்சி சொல்லுதல், குணமளிக்கும் வழிபாடு, திரு எண்ணெய் பூசுதல், குழந்தை இயேசுவை தலையில் வைத்து செபித்தல் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2 ஆம் தேதி இயேசு ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நாளை பங்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மாதத்தின் முதல் வியாழன்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இவைத்தவிர, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்டங்களின்போது ஆலயம் முழுவதும் வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது.
திருத்தலத்தின் முகவரி: குழந்தை இயேசு நகர், ஆர்.கே.புரம், காட்டூர், திருச்சி-620019. தொடர்புக்கு: 94433 02482.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...