‘இது நம்ம ஆளு’ பட விவகாரம்: இயக்குநர் பாண்டிராஜ் - சிம்பு குடும்பத்தினர் மோதல்! 

இரு தரப்பினரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கப் போவதாகக் கூறி உள்ளார்கள்.
‘இது நம்ம ஆளு’ பட விவகாரம்: இயக்குநர் பாண்டிராஜ் - சிம்பு குடும்பத்தினர் மோதல்! 
Updated on
2 min read

இது நம்ம ஆளு பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ் - சிம்பு குடும்பத்தினர் இடையே மோதல் எழுந்துள்ளது. இரு தரப்பினரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கப் போவதாகக் கூறியுள்ளார்கள்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடிப்பில் உருவாகி வரும் படம், 'இது நம்ம ஆளு'. குறளரசன் இசையமைத்துள்ளார்.

பேட்டிகளில் மோதல்

தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் நயன்தாரா குறித்து டி.ஆர். புகார் தெரிவித்ததாக முதலில் செய்திகள் வெளிவந்தன.  ஆனால் நயன்தாரா மீது புகார் தெரிவிக்கவில்லை என சிம்பு விளக்கம் அளித்தார்.

இதுதொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: நயன்தாராவைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவருடைய மீதிச் சம்பளமான 50 லட்சத்தைத் தரவும் மீதமுள்ள இரு பாடல்களுக்குத் தேதிகள் வாங்கவும் தாயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகினோம். சங்கத்திடம் பணம் தந்து அவருடைய தேதிகளை வாங்கித் தரச் சொன்னோம். இதுபற்றி கடிதம் எழுதித் தரச் சொன்னார்கள். அப்படியே கொடுத்தோம். அது எப்படி புகார் ஆகும்? நயன்தாரா தேதி கொடுத்தால் அந்த இரண்டு பாடல்களையும் படமாக்குவோம். இல்லாவிட்டால் அவை இல்லாமல் படத்தை வெளியிடுவோம். எனக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. நயன்தாரா எப்போதும் என் நண்பராக இருப்பார் என்றார்.

இந்தப் பிரச்னை தொடர்பாக ஓர் நாளிதழுக்கு இயக்குநர் பாண்டிராஜ் பேட்டியளித்தார். அதில், ‘இது நம்ம ஆளு' படத்தைப் பொறுத்தவரை படப்பிடிப்பு முடிந்துவிட்டது. டி.ஆர் கூறுவது குத்துப் பாடல் தொடர்பானது. அப்பாடல் படத்துக்கு தேவையில்லை, நயன்தாரா மற்ற படங்களை விட இந்தப்படத்துக்கு அதிகமான தேதிகளைக் கொடுத்துவிட்டார். குறளரசன் இன்னமும் 3 பாடல்களை முடித்துக்கொடுக்கவேண்டும்’ என்றார்.

இதற்குப் பதிலடியாக சிம்பு  ஒரு பேட்டியில், ‘இயக்குநராக பாண்டிராஜ் மீது மரியாதை உண்டு. நானோ என் தந்தையோ அப்பாடலைக் கேட்டோம் என்பதை விடவும் இன்று எல்லாப் படங்களுக்கும் ஒரு குத்துப் பாடல் தேவைப்படுகிறது. இது நம்ம ஆளு பாடல்கள் வெளிவந்தால் குறளின் விதியை யாராலும் மாற்றமுடியாது. அந்தளவுக்குப் பாடல்கள் மிக அற்புதமாக உள்ளன என்றார்.

சமூகவலைத்தளத்தில் மோதல்

புகார்க் கடிதம், பேட்டிகள் என்று சென்று கொண்டிருந்த இந்தப் பிரச்னை சமூகவலைத்தளத்துக்கு வந்தபோது பலரும் அதிர்ச்சியானார்கள். இது நம்ம ஆளு பாடல்கள் தொடர்பாக சிம்புவின் தம்பி குறளரசன், தன்னுடைய கோபம், வருத்தங்களை ட்வீட் வழியாக வெளிப்படுத்தினார்.

‘இப்போது வரை 'இது நம்ம ஆளு' படத்தின் 1 நிமிட டீஸரை மட்டுமே பார்த்துள்ளேன். பாடல் காட்சிகள் எப்போது கிடைக்கும் என்று தெரியாது. புதுமுக இசையமைப்பாளர், படத்தின் பின்னணி இசையை சில நாள்களில் முடிக்கவேண்டிய நிலைமை. 2 மாதங்களுக்கு முன்பே 5 பாடல்களைக் கொடுத்துவிட்டேன். 3 பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளன. தயாரிப்பாளர் விரைவில் படம் வெளியாகும் தேதியை அறிவிப்பார். தற்போது அடுத்த ஆல்பத்தில் பணியாற்றத் தொடங்கி உள்ளேன். எனக்கு என் அண்ணன் தான் எல்லாமே. அவர் ஒருவருக்காக மட்டுமே இதைச் செய்கிறேன். பலமுறை தன்னம்பிக்கை இழக்கச் செய்தாலும் அவரை நான் கைவிட்டதில்லை. என் தந்தையுடன் விரைவில் பத்திரிகையாளர்களைச் சந்திப்பேன். என்னை யாரும் இந்தளவுக்குக் காயப்படுத்தியதில்லை. இது நம்ம ஆளு இயக்குநர் என்னிடம் இந்தப் பாடல்கள் எல்லாம் நன்றாக இல்லை. யாரும் கேட்கமாட்டார்கள் என்றார். அதை ரசிகர்கள் முடிவு செய்யட்டும். எனது அண்ணன், அப்பா, இசையமைப்பாளர் தமன், யுவன், அனிருத் ஆகியோர் எனது இசையைப் பாராட்டியதற்கு நன்றி என அவர் ட்வீட் செய்தார்.

ஒரு இயக்குநருக்கு பாடல்களை மறுக்க உரிமை உண்டு என்று ரசிகர் ஒருவர் இதற்குப் பதில் கொடுத்தபோது, ‘மறுக்க அவருக்கு உரிமை உண்டு.  ஆனால், மற்றவர்களுக்காகப் பிடிக்கவில்லை என்று சொல்லக்கூடாது. பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லாவற்றையும் விவரமாகக் கூறுகிறேன் என்றார் குறளரசன்.

இயக்குநர் பாண்டிராஜ், ட்விட்டரில் பெயர் குறிப்பிடாமல் சில ட்வீட்களை வெளியிட்டார். ‘தம்பி நீ யாருன்னு எனக்குத் தெரியும்,நான் யாருன்னு உனக்குத் தெரியும், நாம ரெண்டுபேரும் யாருன்னு ஊருக்கே தெரியும்.தூக்கம் வந்தா போயி தூங்கு போ. ஒரு நல்ல முதலாளிக்கு அழகு,உழைத்தவனின் வியர்வை காய்வதற்குள் ஊதியம் கொடுப்பது.ஒரு வருடம் சென்றாவது கொடுக்கலாமே. விரைவில் படக்குழுவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து கடந்த இரண்டரை வருடங்களாக என்ன நடந்தது என்பதையும் இது நம்ம ஆளு படத்துக்காக பட்ட கஷ்டங்களையும் கூறுகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com