ருசிக்க முடிகிறதா பீட்சா-3? திரைவிமர்சனம்

நடிகர்கள் அஸ்வின் காகுமனு, பவித்ரா மாரிமுத்து நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் பீட்சா 3. 
ருசிக்க முடிகிறதா பீட்சா-3? திரைவிமர்சனம்

நடிகர்கள் அஸ்வின் காகுமனு, பவித்ரா மாரிமுத்து நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் பீட்சா 3. 

திகில் திரைப்படங்களில் கவனிக்கத்தக்க வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்று பீட்சா. நடிகர் விஜய்சேதுபதியின் ஆரம்ப காலங்களில் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்த திரைப்படம் அதற்குப் பிறகு பீட்சா 2, பீட்சா 3 என வெளியாகின. எனினும் முந்தைய பீட்சா திரைப்படம் ஏற்படுத்திய அதே தாக்கத்தை இவை ஏற்படுத்தினவா என்றால் கேள்விக்குறிதான். 

சென்னையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகின்றனர் அனுபமா குமாரும், அவரது மகள் அபி நக்‌ஷத்ராவும். தனது அம்மாவின் ஸ்வீட் கடைக்கு துணையாக இருக்கும் அபிக்கு ஒரு விபத்தில் மறதி பிரச்னை ஏற்படுகிறது. கஜினி பாணியில் 10 நிமிடத்திற்கு ஒருமுறை மறதி ஏற்படும் அபியை குடியிருப்பு வளாகத்தின் செயலாளர் நடிகர் கவிதா பாரதியும், இன்னும் மூவரும் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்குகின்றனர். அது அவரது தாயாருக்கு தெரிய வர இருவரையும் கொலை செய்து விடுகின்றனர். இந்நிலையில் அனுபமாவின் ஸ்வீட் கடையில் புதிய உணவகத்தை தொடங்கும் அஸ்வின் அங்கு அலையும் பேய்களால் பாதிக்கப்படுகிறார். 

அவர் அந்த பேய்களிடமிருந்து எப்படித் தப்பித்தார்? தங்களது வாழ்க்கையை அழித்த  வில்லன்களை பேய்கள் என்ன செய்தன? என்பவையே பீட்சா 3 திரைப்படத்தின் கதை. 

தமிழ் சினிமாவில் பாவப்பட்ட ஜீவன்களாக நாளுக்குநாள் மாறி வருகின்றன பேய்கள். திகில் படமென்றால் ரசிகர்களை கொஞ்சமேனும் பயமுறுத்தும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட வேண்டும் என கட்டாயச் சட்டம் போட்டால் ஒழிய பேய்களையும், ரசிகர்களையும் இயக்குநர்களிடமிருந்து காப்பாற்ற முடியாது போல. படம் தொடங்கி முதல் பாதி முடியும் வரைக்கும் என்ன கதை? என்ன நடக்கிறது? என பார்வையாளர்களை சுற்ற விட்டிருக்கிறார் இயக்குநர். ஒரு சிவப்பு நிற இனிப்பு பண்டத்தை சமைத்து தரும் பேய் கிடைக்க உணவகத்தின் உரிமையாளர் என்ன வரம் செய்திருக்க வேண்டும் என யோசிக்க வைக்கிறது அடுத்தடுத்து வரும் காட்சிகள். அந்தளவு ரசிகர்களின் பொறுமையை சோதித்திருக்கிறார் இயக்குநர். 

வழக்கமான பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதை எந்தளவு சுவாரஸ்யமாக கொடுக்கலாம் என படக்குழு யோசித்திருக்கலாம். முதல் பாதியில் திக்கு தெரியாமல் செல்லும் காட்சிகள் இரண்டாம் பாதியில் பழைய அறுவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொள்கிறது. 

திரைப்படம் தொடங்கியவுடன் வரும் கைப்பந்து விளையாட்டு வீரரின் ஆவி எதற்காக ஒரு கொலையை செய்தது? அதற்கும் கதைக்கும் என்ன தொடர்பு? முதல் கொலை நடந்த வீட்டிலிருந்து கிடைக்கும் மம்மி பொம்மை எப்படி அஸ்வினின் உணவகத்திற்கு வந்தது? அந்த மம்மி பொம்மையை திகிலாக இறுதி வரை காட்டினரே அதில் என்ன அப்படி உலக மகா திகில் இருக்கிறது? எனும் கேள்விகள் படம் முடிந்த பிறகும் ரசிகர்களைத் தொடர்கின்றன. பேச்சில் பாவமாக இருக்கும் அனுபமா நடத்தும் ஸ்வீட் கடை அவ்வளவு ஆடம்பரமாக இருக்கிறது. 

முழுப் படத்தையும் தாங்க வேண்டிய பொறுப்பை அஸ்வினிடம் ஒப்படைத்திருக்கும் இயக்குநரின் துணிச்சல் அநாவசியமானது. இதற்கிடையில் பேய்களுடன் பேச ஆஃப் தயாரிக்கும் கதாநாயகி, தங்கையின் காதலைத் தடுக்கும் காவல் அதிகாரி அண்ணன் ஆகியோர் கதையை தங்கள் பங்குக்கு இன்னொரு பக்கம் இழுக்கின்றனர். வன்கொடுமையால் கொலை செய்யப்படும் அபிக்கும், அஸ்வினுக்கும் இருக்கும் தொடர்பு ஒரு கட்டத்தில் நமக்கு ஆர்வத்தை ஏற்படுத்தினாலும், அந்த ஆர்வம் உடனடியாக காற்று போன பலூனாக மாறிவிடுகிறது. இதுதவிர குடியிருப்பில் நடக்கும் பாலியல் வன்கொடுமை என்றாலே அந்தக் குடியிருப்பின் காவலர் குற்றவாளியாக்கப்படுவதை இயக்குநர்கள் தெரிந்தேதான் செய்கின்றனரா என்பது புரியவில்லை. சாதாரண வேலை செய்பவர்களை குற்றவாளியாக்கியே தீருவோம் என இயக்குநர் எடுத்து வரும் சபதங்களை எப்போது கைவிடப் போகின்றனரோ?

முன்கூட்டியே கணிக்கக் கூடிய காட்சிகள், எதிர்பார்ப்பை ஏற்படுத்தாத திரைக்கதை ஆக்கம் பீட்சா 3-இன் ருசியைக் கூட்டத் தவறியிருக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com