கொட்டும் அருவி!

ஒவ்வொரு மகளுக்கும் தன் தந்தை தான் முதல் கதாநாயகன். அந்தக் கதாநாயகனே...
கொட்டும் அருவி!
Published on
Updated on
3 min read

ஒரு கிராமத்தில் ஒரு நாட்டாமை இருந்தார். அவர் அந்தக் கிராமத்திற்கு நல்ல காரியங்கள் செய்து வந்தார். ஆனால் ஒரு காலகட்டத்தில் தவறு ஒன்று செய்துவிட்டதாகக் கருதிய மக்கள் அவரைக் கிராமத்திலிருந்து துரத்தி அடித்தனர். கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் தன்னந்தனியாக வாழத் தொடங்கினார். ஓர் இளைஞன் தற்செயலாக அந்த நாட்டாமையைப் பார்க்க நேரிடுகிறது. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தெரியவருகிறது. உடனடியாகப் போய் அந்தக் கிராமத்து மக்களிடம் சொல்கிறான். அந்தக் கிராம மக்கள் நாட்டாமையையைப் பார்க்கச் செல்கிறார்கள்.  இந்தப் பழங்கால கே.எஸ்.ரவிக்குமார் கதை போன்ற கருவை ஆயுதமாகக் கொண்டு இந்தச் சமூகத்தின் தலையில் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறாள் இந்த அருவி.

நான்கு சண்டைகள், ஐந்து பாடல்கள், கவர்ச்சி நடனங்கள், அருவெறுப்புச் சிரிப்புகள் இருந்தால்தான் பணத்தைத் திரும்பப் பெற முடியும் என்கிற பொய்த் தோற்றத்தை முறியடித்திருக்கும் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர். பிரபுவும், எஸ்.ஆர். பிரகாஷ்பாபுவும் மிகுந்த துணிச்சல் பெற்றவர்கள் என்பதை அவர்களின் கைகளைக் குலுக்கிச் சொல்லலாம்.

எந்திர ஒலியை உருவாக்கி இசை மாசு ஒன்றைத் தற்போதைய திரையுலகம் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், பாசத்தை ஒலியாக்கி, இதயத்தை நேர்மைப்படுத்தும் இசையாசிரியர்களாக நம் கண்ணுக்கு அடையாளப்படுகிறார்கள் பிந்து மாலினியும் வேதாந்த் பரத்வாஜ்வும்

மழலைப்பருவம் தொடங்கி பதின்வயது வரை மெய்யான பெண்மையின் இயல்பான வாழ்வியலைப் புதுக்கவிதைகளாகத் தந்ததில் படத்தொகுப்பாளர் டெரிக் க்ராஸ்டாவின் (Derrick Crasta) தொழில்நுட்பம் உலகத்தரத்தை மிஞ்சியுள்ளது.

நயகரா அருவியாகக் கண்களைக் குளிரவைத்த அதிதி திடீரென கால்வாய் சிற்றோடையாகக் சுருங்கிப் போய் தொலைப்பேசியில் பேசும் காட்சிகளைப் படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் (Shelley Calist) இந்தப் படத்தின் அத்தனை எதார்த்தக் குறைபாடுகளையும் நிறைவு செய்துவிடுகிறார்.

இப்படியாக எல்லாப் படக்குழுவினரையும் பாராட்டுவதோடு இந்தப் படத்தின் திறனாய்வை முடித்துவிட முடியாது.

தாயின் கருவறையின் இருட்டைக் கிழித்துக்கொண்டு இந்தப் பேருலகில் காலடி வைக்கும் எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் தன் தந்தையின் நெஞ்சம் தான் எட்டி உதைத்து விளையாடக் கிடைக்கும் முதல் பள்ளித் திடல். அந்த விளையாட்டின் அடுத்த நகர்வாகத் தந்தையின் தோள்களில் ஏறித் தேர்வலமாக இந்தப் புவிப்பந்தைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கும் ஒவ்வொரு மகளுக்கும் தன் தந்தை தான் முதல் கதாநாயகன். அந்தக் கதாநாயகனே ஒரு காலத்தில் விரட்டியடித்துவிட்டால் அந்தப் பிஞ்சுப் பெண் என்ன செய்வாள்?

தங்குவதற்குத் தோழியின் உதவியை நாடுகிறாள். உண்டு பிழைப்பதற்கு ஒரு திருநங்கையின் உதவியைப் பெறுகிறாள். துன்பத்தை மறப்பதற்கு ஒரு சாமியாரை நம்புகிறாள். இந்தப் பயணத்தில் அவள் சந்திக்கும் கசப்பான நிகழ்வுகளைச் சொல்லிவிட தொலைக்காட்சி நிறுவனத்தைச் சென்றடைகிறாள்.

அங்கு அவள் பேசிடும் வசனத் தீப்பொறிகள் ராஜமௌலியின் இந்த ஆண்டின் சிறந்த படத்துக்கான விருதுக் கனவுக்கோட்டையைத் தூள் தூளாக்குகின்றன. நல்லவேளையாகத் தங்கல் படம் கடந்த ஆண்டும், 2.0 படம் அடுத்த ஆண்டும் என அருவியுடனான போட்டியிலிருந்து  விலகிக் கொண்டன. நடிகர் திலகத்தின் பராசக்தி வசனமும், விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் வசனமும் தமிழ்த் திரையுலகில் பெருமையாகப் பேசப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த அதிதியின் வசனத் துளிகள் தமிழ்த்திரையுலகம் இவ்வளவு காலம் பேசிவந்த பொய்ப் பெருமைகளை வெட்கித் தலைகுனிய வைக்கின்றன. வசனங்கள் என்றால் அடுக்குமொழி, வார்த்தை ஜாலங்கள் போன்ற அனைத்து மாயைகளையும் உடைத்து உணர்ச்சிக் குமுறல்களை எரிமலையாக்கியிருக்கிறாள் அருவி.

அச்சுறுத்தும் படங்கள் என்றால் கொலை, கொள்ளை, திருட்டு, வன்முறை, பேய், பிசாசு, இரத்தம் என்றெல்லாம் கதைவிட்டுக் கொண்டிருக்கும் உலகத் திரைப்படங்கள் அருவியைப் பார்த்துப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறார் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்.

சொல்வதெல்லாம் உண்மை போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் யாவும் ஏழைக் குடும்பப் பெண்களின் இல்வாழ்க்கை ஏமாற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக் காசு பார்க்கின்றன என்ற குற்றச்சாட்டைப் பதிவு செய்வதற்காகத் தன் உடல், உயிர், உணர்வு அனைத்தையும் கொடுத்து நடித்திருக்கிறார் லட்சுமி கோபால்சாமி. இவர் நடிப்பின் பேராற்றல் உலக மகா வில்லன்களாக இதுவரை அடையாளப்படுத்தப்பட்ட அனைத்து வில்லன்களையும் கேலிப் பொருளாக்குகிறது என்றே சொல்லலாம்.

வாழ்வதற்கே வழியில்லாமல் திண்டாடும் திருநங்கைகளுக்குச் சுயமரியாதை என்ற ஒற்றைச் சொல்லே உலக அதிசயம்தான். ஆனால் உலக அதிசயங்களை விட இந்தப் பூமியில் உயர்வானது மனிதநேயம் என்பதைத் தனது பண்பட்ட நடிப்பின் மூலம் இந்தச் சமூகத்திற்குக் கற்றுத் தரும் அஞ்சலி வரதனைப் பார்த்து எல்லா இந்திய நடிகைகளும் ஒரு முறையாவது பாராட்டிக் கைத்தட்டியாக வேண்டும்.

அதிதிபாலன், அஞ்சலி வரதன், லட்சுமி கோபால்சாமி ஆகிய மூன்று பெண்ணியப் புயல்கள் நூற்றாண்டுத் திரையுலகின் சிறந்த நாயகிகள் என்று சொன்னால் நிச்சயம் மிகையாகாது.

கள்ளத்தொடர்பு, இழிவுபடுத்துதல், தாக்குதல் போன்றவற்றிலிருந்துதான் தற்போதைக்கு நகைச்சுவைக் காட்சிகள் கற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் குற்றவாளிகளாக இருப்பினும் அவர்களிடமிருந்தும் மெய்யான சிரிப்பை வரவழைத்துப் புதிய நகைச்சுவைப் பாதையை அறிமுகப்படுத்தியுள்ளார் இயக்குநர். சூழ்நிலைகளாலோ அல்லது திட்டமிடல்களாலோ குற்றவாளிகளாக இருப்பவர்களும் மனிதம் என்ற ஒற்றைச் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களே என்பதை ஆயா தோசை சுட்ட கதை மூலம் உணர்த்தியிருக்கிறார்கள்.

தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு

சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டேன்போன்

சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்!

என்று சீற்றங்கொண்டதோடு நிறுத்திக் கொண்டார் பாவேந்தர். ஆனால்,

வாழ்க்கையின் உச்சகட்டத் துன்பத்தைச் சுமந்துகொண்டு இப்பேருலகின் தொடக்கநிலை மகிழ்ச்சியாவது தனக்குக் கிடைத்து விடாதா என்று ஏங்கித் தவித்து அழுது உணர்ச்சிகளைக் கொட்டும் இந்த அதிதியைப் பார்த்து, மனம் உருகிக் கண்ணீர் அருவியில் தலைசாய்ந்து ஒரே ஒரு நிமிடம் “இந்த உலகத்தில் நாம் ஏன் பிறந்தோம்? நமக்கான கடமை என்ன? தன்னலமான வாழ்க்கை தேவையா?” என்று ஒவ்வொரு பார்வையாளரையும் தனக்குள் கேள்வி எழுப்ப வைத்திருக்கும் பேராற்றலைப் பெற்றிருக்கும் இந்தப் படத்தின் கதையாசிரியரை இதயத்திலிருந்து வாழ்த்துவோம். அந்த வாழ்த்துப் பரிமாற்றங்கள் தான் இந்தத் திரைப்படத்தைப் பற்றிய சிறந்த திறனாய்வாக இருக்க முடியும்.

சி.சரவணன்: 9976252800, senthamizhsaravanan@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com