நடிகர் கமல் ஹாசன், சிலதினங்களுக்கு முன்பு ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் ஒரு கவிதை எழுதி வெளியிட்டார்.
ஹிம்சாபுரி (2001)
----------------------------
போதியின் நிழலில் ஏற்றிய விளக்கு
ஆத்திக வெயிலில் வியர்த்துக் கருத்தது
தச்சன் ஒருவன் அறிவைச் சீவி
தானே அறைபடச் சிலுவை செய்தனன்
(Z)ஜாரின் கோலிற் செம்மை இலையெனச்
சினந்து சிவந்த குடியொன்றுயர்ந்தது
யூதப் பெருமான் அணுவை விண்டதில்
ஆயுதம் கண்டனர் அமெரிக்கச் சித்தர்
ஒற்றைக் கழியோன் அஹிம்சையில் பெற்றது
உற்றது இன்று ஹிம்சா புரியாய்.
அன்புடன்
கமல்ஹாசன்.
இதை அவர் வெளியிட்டபிறகு பலரும் இந்தக் கவிதை குறித்து பலவிதமான கருத்துகளை வெளியிட்டார்கள். என்ன சொல்லவருகிறார், தெளிவாகப் புரியவில்லை என்கிற மாதிரியான கருத்துகளும் வெளிவந்தன.
இந்நிலையில் இதுகுறித்து கவிஞர் மகுடேசுவரன் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு எழுதி கமலைப் பாராட்டினார். அதில் அவர் கூறியதாவது:

ஹிம்சை என்றால் துன்பம். புரி என்றால் தலைநகரம். “துன்பத்தின் தலைநகரம்” என்பது தலைப்பு.
போதியின் நிழலில் ஏற்றிய விளக்கு ஆத்திக வெயிலில் வியர்த்துக் கருத்தது = போதி மரத்தடி நிழலில் புத்தன் பெற்ற ஞானத்தால் ஏற்றி வைத்த ஞான விளக்கு, ஆத்திகப் பரவலின் வெய்யிலின் வெப்பம் தாங்காமல் வியர்த்தது. அதன் ஒளிமங்கிக் கறுத்தும்போனது. புத்தர் ஏற்றிவைத்த பகுத்தறிவுக் கருத்துகளின் ஒளி ஆத்திகத்தால் இங்கே நிலைமங்கியது. (கறுத்தது என்பது சரியான பயன்பாடு).
தச்சன் ஒருவன் அறிவைச் சீவித் தானே அறைபடச் சிலுவை செய்தனன் = தச்சனாய்ப் பிறந்த ஒருவன் தன் அறிவைக் கூர்மைப்படுத்தித் தானே அறைபட்டுச் சாவதற்குச் சிலுவைக் கருத்துகளைச் செய்தான். இயேசுவின் அன்புவழிக் கருத்துகள் அவரையே கொன்றன. (சீவித் தானே என்று வலிமிகவேண்டும்).
ஜாரின் கோலிற் செம்மை இலையெனச் சினந்து சிவந்த குடியொன்றுயர்ந்தது = ஜார் மன்னனின் ஆட்சியில் செங்கோல் தவறியது, செம்மை இல்லை என்று சினந்த இரசியாவில் சிவப்புப் புரட்சி நிகழ்ந்து குடிகளின் வாழ்வு உயர்ந்தது.
யூதப் பெருமான் அணுவை விண்டதில் ஆயுதம் கண்டனர் அமெரிக்கச் சித்தர் = ஐன்ஸ்டீன் என்கின்ற யூதர் அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு அணுவைப் பற்றிக் கூறினார். அதையே பின்பற்றி அணு ஆயுதம் செய்துவிட்டனர் தற்கால அமெரிக்கச் சித்தர்கள். இங்கே சித்தர் என்பது அழிவுக்கொள்கையுடைய சித்தமுடையோர் என்று ஏளனமாய்க் குறிப்பது.
ஒற்றைக் கழியோன் அஹிம்சையில் பெற்றது உற்றது இன்று ஹிம்சாபுரியாய் = கழி என்றால் ஊன்றுகோல். ஒற்றை ஊன்றுகோலை ஊன்றி நடந்தவராகிய காந்தி அன்புவழியால் ஆக்கிப் பெற்றெடுத்த நிலம் இன்று துன்பத்தின் தலைநகரம் ஆகிவிட்டது.
ஹிம்சாபுரி (2001) என்ற தலைப்பும் காந்தியைப் பற்றிய இறுதி இரண்டு அடிகளும் இக்கவிதை நாட்டின் தற்கால வன்முறைப் போக்கு பற்றியது என்பதற்கான தடயங்கள்.
கமல்ஹாசன் கவிஞர்களின் கவிஞர். ஐயமில்லை என்று எழுதினார்.
ஆச்சர்யமாக, கவிஞரின் இந்தப் பாராட்டுக்கு கமல் ட்விட்டர் வழியாகப் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: மகுடேசுவரன் பொழிப்புரைக்கும் பாராடாடுக்கும் நன்றி. என் தமிழ் கல்விவழி வந்ததல்ல. செவி விழி மொழிவழி வந்தது. நிறை தமிழுடைத்து குறை என்னிடத்து என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


