ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க சங்கமித்ரா படத்தில் நயன்தாரா?

ஷ்ருதி விலகலுக்குப் பிறகு அந்த வேடத்தில் நயன்தாரா நடிக்கவேண்டும் என்று சமூகவலைத்தளத்தில் பலரும் தயாரிப்பு நிறுவனத்துக்கு வேண்டுகோள்...
ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க சங்கமித்ரா படத்தில் நயன்தாரா?
Updated on
1 min read

சுந்தர்.சி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் "சங்கமித்ரா'. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். 24' படத்துக்காக தேசிய விருது வென்ற திரு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் உருவாகவுள்ளது. இப்படத்துக்கு இதர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் பிரதான கதாநாயகியாக ஷ்ருதிஹாசன் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் திடீரென சங்கமித்ரா படத்திலிருந்து ஷ்ருதி ஹாசன் விலகினார். ஷ்ருதி ஹாசனைக் கொண்டு முதல் பார்வை சுவரொட்டிகள் வெளியான நிலையில் இந்த அறிவிப்பு பெரிய பின்னடைவாகக் கருதப்பட்டது.

படத்திலிருந்து விலகியது குறித்து ஷ்ருதி ஹாசன் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

சங்கமித்ரா படத்தில் பணியாற்ற வேண்டாம் என்கிற முடிவை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகப் பெரிய படம், 2 வருடங்கள் தேதிகள் ஒதுக்க வேண்டும் என எல்லாம் தெரிந்தே ஷ்ருதி ஹாசன் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்தின் மீதிருந்த ஆர்வம், அர்பணிப்பு தாண்டி இந்த முடிவை எடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. முழுமையான திரைக்கதை வடிவம் அவருக்குத் தரப்படவில்லை. படப்பிடிப்புத் தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே விலகலுக்குக் காரணம். இப்போது அவர் நடித்துள்ள பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் உள்ளார். அடுத்ததாக சபாஷ் நாயுடு படத்துக்காகத் தயாராகி வருகிறார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஷ்ருதி விலகலுக்குப் பிறகு அந்த வேடத்தில் நயன்தாரா நடிக்கவேண்டும் என்று சமூகவலைத்தளத்தில் பலரும் தயாரிப்பு நிறுவனத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். இதையடுத்து நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டுப் படக்குழு அணுகியதாக அறியப்படுகிறது. இந்தப் படத்தில் நடிக்கவேண்டுமெனில் கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் கால்ஷீட் கொடுக்கவேண்டும் என்பதால் நயன்தாரா இதுவரை சம்மதம் அளிக்கவில்லை. 

இதுதவிர பாலிவுட் கதாநாயகிகளிடமும் படக்குழு பேசிவருகிறது. விரைவில் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com