இளம் நடிகர்களின் ‘பவுன்சர் கலாசாரத்தை’ விளாசும் பழம்பெரும் நடிகை ஜமுனா!

ஜமுனாவிடம், இன்றைய இளம் நடிகர்களைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார்? என்று ஒரு பேட்டியில் வினவப் பட்டது. அதற்கு ஜமுனா அளித்த பதிலில் அவரது எல்லையற்ற வருத்தம் மிக அழுத்தமாகப் பதிவாகியிருந்தது. 
இளம் நடிகர்களின் ‘பவுன்சர் கலாசாரத்தை’ விளாசும் பழம்பெரும் நடிகை ஜமுனா!
Published on
Updated on
2 min read

இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் காலத்தால் தங்களுக்கு முந்தைய தலைமுறை நடிகர், நடிகைகளை சரி வர மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பழம்பெரும் நடிகர்கள், நடிகைகள் பலருக்கும் இருப்பது வாஸ்தவமே! அந்த வகையில் ‘தங்கமலை ரகசியம்’ திரைப்படத்தின் மூலம் நமக்கெல்லாம் காலத்துக்கும் மறக்க முடியாத நடிகைகளில் ஒருவராகி விட்ட ஜமுனாவை நினைவிருக்கிறதா உங்களுக்கு? எப்படி மறக்க முடியும்? ‘அமுதைப் பொழியும் நிலவே... நீ அருகில் வராததேனோ? என்று சோகம் பொங்கப் பாடும் அந்த அழகுப் பதுமையை ஒருமுறை கண்டோர் மறந்திருக்க வாய்ப்பில்லை.

ஜமுனாவை தமிழ் ரசிகர்கள் மறவாதிருக்க இந்தப் பாடலும்,  ஏ.வி.எம் மின் 'குழந்தையும், தெய்வமும்' திரைப்படத்தில் இடம்பெறும் 'அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம் எழுதிய நாள் முதலாய்’ பாடலும் போதுமே! அத்தகைய சிறந்த நடிகை இன்றைய இளம் நடிகர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்? என்று ஒரு பேட்டியில் அவரிடம் வினவப் பட்டது. அதற்கு ஜமுனா அளித்த பதிலில் அவரது எல்லையற்ற வருத்தம் மிக அழுத்தமாகப் பதிவாகியிருந்தது. 

இப்போதிருக்கும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு கடந்த தலைமுறையின் மூத்த நடிகர்களான எங்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதெல்லாம் சுத்தமாகத் தெரியவில்லை. இவர்களை விட இவர்களுக்கு முந்தைய தலைமுறை நடிகர்களான பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகார்ஜுனா உள்ளிட்டோர் எவ்வளவோ தேவலாம். ஹலோ என்றால் பதிலுக்கு ஹலோ சொல்லும் அளவுக்காவது அவர்களிடம் நாகரீகமான அணுகுமுறை இருந்தது. ஆனால் இப்போதிருக்கும் இளம் நடிகர்களைப் பற்றி ஐயோ! ... ஒன்றுமே சொல்வதற்கில்லை.

சில நாட்களுக்கு முன் நான் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்... அங்கே மணமக்களைப் பார்த்து விட்டு நான் நிம்மதியாக நடந்து வந்து கொண்டிருந்த போது... ஒரு இளம் வாரிசு நடிகர் ஒருவர் வருகை தந்தார். அடடா அவர் மட்டுமா வருகை தந்தார். அவரைச் சுற்றி அவருடைய பாதுகாவலர்கள் என்று ஒரு கூட்டமும் வருகை தந்தது. அவர்கள் வருகை தந்த வேகத்தில் ஒரு ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த என்னை இடித்துத் தள்ளி விட்டு சென்றனர். அந்த நடிகரின் தாத்தாவுக்குத் தாத்தா அந்தக் காலத்தில் பெரிய நடிகராம்... இவர் இப்போதே பெரிய நடிகராக தன்னைப் பாவித்துக் கொள்வார் போல! இடித்துவிட்டுப் போய்க்கொண்டே இருந்தார்கள். எனக்கு மகாக் கோபமாகிவிட்டது. தடுமாறி திரும்பிப் பார்த்து... ‘என்ன கண் தெரியவில்லையா? இப்படி இடித்துவிட்டுப் போகிறீர்களே? என்று கேட்டால், நின்று பேசும் மரியாதைகூட இல்லாமல் சும்மா அலட்சியமாக மன்னிப்புக் கேட்பது போல பாவித்து விட்டு ஓடுகிறார்கள். திருமண வீட்டில் இப்போதும் பெண்கள் எங்களைப் போன்ற வயதான நடிகர், நடிகைகளைச் சுற்றிக் கொண்டு கொண்டாடுகிறார்கள். இம்மாதிரியான மரியாதை தெரியாத இளம் நடிகர்களை யார் பார்க்கப் போகிறார்கள்? இவர்களையும், இவர்களது பாதுகாவலர்களின் முகங்களையும் திருமண வீட்டில் யார் பார்க்கப் போகிறார்கள்? எதற்கித்தனை ஜபர்தஸ்து?! என்று கொதித்து விட்டார் ஜமுனா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com