விவாகரத்தை அடுத்து மறுமணமா?: இயக்குநர் விஜய் மறுப்பு

நடிகை அமலா பாலை விவாகரத்து செய்தபிறகு தான் மறுமணம் செய்ய உள்ளதாக வெளியான செய்திகளை இயக்குநர் விஜய் மறுத்துள்ளார்.
விவாகரத்தை அடுத்து மறுமணமா?: இயக்குநர் விஜய் மறுப்பு
Updated on
1 min read

நடிகை அமலா பாலை விவாகரத்து செய்ததற்கு அடுத்ததாக, தான் மறுமணம் செய்யவிருப்பதாக வெளியான செய்திகளை இயக்குநர் விஜய் மறுத்துள்ளார்.

கேரளத்தைச் சேர்ந்த அமலாபால் (25), 2010-இல் தமிழ் திரைப்படத் துறையில் "வீரசேகரன்' எனும் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் "சிந்துசமவெளி', "மைனா', "தெய்வத் திருமகள்', "தலைவா' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதேபோல், நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான "கிரீடம்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய். பின்னர், "மதராசபட்டினம்', "தலைவா', "சைவம்' உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கினார்.

நடிகர் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்த "தலைவா' படத்தை இயக்குநர் விஜய் இயக்கினார். அப்போது, இயக்குநர் விஜய்க்கும், அமலாபாலுக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இரு வீட்டார் ஒப்புதலுடன், கேரள மாநிலம் கொச்சியில் 2014-ஆம் ஆண்டு ஜூன் 7-இல் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்குப் பின்னர் சென்னை அடையாறு போட் கிளப்பில் உள்ள ஒரு பங்களாவில் இருவரும் தனிக் குடித்தனம் நடத்தினர். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் சுமூகமாக பிரிவது என்று முடிவு செய்து சென்னை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி பரஸ்பரம் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தனர்.

 இந்த வழக்கு 2-ஆவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதி இருசன் பூங்குழலி முன்பு நடைபெற்று வந்தது. இருவரும் நேரில் ஆஜராகி, மனமொத்து பிரிவதாகக் கூறி பிரமாண பத்திரங்களை தனித்தனியாக தாக்கல் செய்தனர். 

இதைத் தொடர்ந்து, இருவருக்கும் பரஸ்பரம் விவாகரத்து வழங்குவதாக நீதிபதி, கடந்த மாதம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் விஜய் மறுமணம் செய்ய உள்ளதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் இத்தகவல் தவறானது என்று இயக்குநர் விஜய் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் மேலும் கூறியதாவது: என்னுடைய மறுமணம் குறித்து ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த ஆதாரமும் இல்லாத செய்திகள் அவை. என்னை மிகவும் வேதனைப்படுத்திவிட்டன. அதுபோன்ற செய்திகளைத் தவிர்த்துவிடுங்கள் என்றுகூற எனக்குத் தார்மீக உரிமை உள்ளது என எண்ணுகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com