

மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் வழங்கப்பட்டதற்குப் பலரும் விமரிசனம் செய்துள்ளார்கள். இதற்கு லாரன்ஸ் பதில் அளித்துள்ளார்.
தெலுங்கில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் "பட்டாஸ்.' கல்யாண்ராம் நடிப்பில் வெளிவந்த இப்படம் தெலுங்கு சினிமாவில் பெரும் வசூல் சாதனை புரிந்துள்ளது. இப்படம் தற்போது "மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நிக்கி கல்ராணி, சத்யராஜ், லட்சுமிராய், கோவை சரளா, வி.டி.வி.கணேஷ், மயில்சாமி, "மகாநதி' சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஜீவா நடிப்பில் வெளிவந்த "சிங்கம்புலி' படத்தை இயக்கிய சாய்ரமணி இப்படத்தை இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.செளத்ரி தயாரித்துள்ளார். இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் டைட்டில் கார்டில் லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி இணையத்தில் வெளியானதை அடுத்துப் பலரும் லாரன்ஸை விமரிசனம் செய்து வருகிறார்கள்.
இதையடுத்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த லாரன்ஸ், இயக்குநர் எனக்கு ஒரு இன்பதிர்ச்சி காத்திருக்கிறது என்று சொன்னார். டைட்டில் கார்டில் எனக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்துள்ளார் என்பது இப்போதுதான் தெரிகிறது. இந்தப் பட்டத்துக்கு நான் உரியவன் அல்லன் என்று நினைக்கிறேன். ரஜினி சாரை நான் தலைவனாக நினைப்பவன். அவர்தான் என்னைத் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். சூப்பர் ஸ்டார் பட்டம் எப்போது அவருக்கு மட்டும்தான். என் தாய் அளித்த பெயரை விட எனக்குப் பெரிய பட்டம் எதுவும் இல்லை. என் தாய் பெயருடன் சேர்த்து கண்மணி ராகவா லாரன்ஸ் என்றே என் பெயர் இனிமேல் டைட்டில் கார்டில் இடம்பெறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.