

நடிகர் சந்தானம் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு (அக்.13) ஒத்திவைக்கப்பட்டது.
நடிகர் சந்தானம் மற்றும் அவரது நண்பரும் கட்டட ஒப்பந்ததாரருமான சண்முகசுந்தரமும் சேர்ந்து திருமண மண்டபத்துடன்கூடிய அடுக்குமாடி கட்டடத்தை கட்டி வந்தனர். இதில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. சந்தானம் தான் கொடுத்த பணத்தை சண்முகசுந்தரத்திடம் திருப்பி கேட்டுள்ளார்.
இந்தப் பிரச்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் சண்முகசுந்தரம், அவரது நண்பர் பிரேம் ஆனந்த் ஆகியோரை சந்தானம் தரப்பினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், நடிகர் சந்தானத்தின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது எனக் கோரி, நடிகர் சந்தானம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு , நீதிபதி ஆதிநாதன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தாக்கப்பட்ட வழக்குரைஞர் பிரேம் ஆனந்தையும் இந்த வழக்கில் சேர்க்கவும், சந்தானத்துக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால்,, இந்த வழக்கில் பிரேம் ஆனந்தை சேர்க்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, தாக்கப்பட்ட பிரேம் ஆனந்த் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்பதைத் தெரிவிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.