செட் பிராப்பர்ட்டி மாதிரியான அம்மா ரோல்களில் நடிக்க விருப்பமில்லை, போல்டாகச் சொன்ன நடிகை!

கண்ணாம்பாவுக்கு ஒரு மனோகரா, பண்டரிபாய்க்கு அடிமைப்பெண், எங்க வீட்டுப் பிள்ளை, மன்னன் ஆச்சி மனோரமாவுக்கு சின்னத்தம்பி, சின்னக் கவுண்டர், சூரியன் உள்ளிட்ட எக்கச்சக்கமான திரைப்படங்கள், சரண்யாவுக்கு 
செட் பிராப்பர்ட்டி மாதிரியான அம்மா ரோல்களில் நடிக்க விருப்பமில்லை, போல்டாகச் சொன்ன நடிகை!

நடிகை சுதா என்றால் தெலுங்கு மட்டுமல்ல தமிழிலும் அவருக்கு நல்ல அறிமுகமுண்டு. திரைப்படங்களைத் தாண்டி 80 களில் தூர்தர்ஷன் நாடகங்களில் பரவலாக நடித்து தமிழ் ரசிகர்களிடையேயும் நன்கு பிரபலமானவர் நடிகை சுதா. ஆரம்பத்தில் அறிமுகமானது தமிழில் தான் என்றாலும் சுதாவை தெலுங்குத் திரையுலகம் ‘அம்மா’ கதாபாத்திரத்துக்காக ஒட்டுமொத்தமாகத் தத்தெடுத்துக் கொண்டது. 90 களின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை டோலிவுட்டில் சுதா அம்மாவாக நடிக்காத இளம் மற்றும் நடுத்தர வயது நடிகர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தளவுக்கு டோலிவுட்டில் அம்மா என்றால் சுதா தான் எனும்படியாக தொடர்ந்து பல்வேறு பரிமாணங்களில் அம்மா வேடங்களில் நடித்து வந்தார். தமிழிலும் கே.பாலசந்தரின் ‘டூயட்’ விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை, பரத், தமனா நடித்த கண்டேன் காதலை, உள்ளிட்ட திரைப்படங்களில் நாம் சுதாவை அம்மாவாகக் கண்டிருக்கலாம். 

கோலிவுட்டில் சரண்யா பொன்வண்ணன், அனுபமா குமார், ல‌ஷ்மி ராமகிருஷ்ணன், போலவே இப்போது டோலிவுட்டிலும் பிரகதி, நதியா, ரம்யா கிருஷ்ணன், சுகன்யா, ரோகினி, பவித்ரா எனப் புதுப்புது அம்மாக்கள் வந்து விட்டார்கள். ஆனால் இந்த அம்மாக்கள் அனைவருக்குமே  திரையில் உரிய அங்கீகாரம் கிடைக்கிறதா? என்றால் அது தான் இல்லை என்கிறார் சுதா. 80 களின் பிற்பகுதியில் தான் டோலிவுட்டில் அம்மா ரோல்களில் அறிமுகமான போது தனக்கு நடிபப்தற்கும் வாய்ப்புகள் நிறைய இருந்ததாகக் குறிப்பிடுகிறார் சுதா. உதாரணமாக நாகார்ஜூன், ஜெகபதிபாபு ஹீரோக்களாக நடிக்கும் திரைப்படங்களில் அம்மா ரோல்களுக்கு சின்ன அளவிலாவது அங்கீகாரம் கிடைக்கும் வகையில் காட்சியமைப்புகள் இருக்கும். வெறுமே செட் பிராப்பர்டி மாதிரியாக வசனங்கள் எதுவுமில்லாமல் முழுத்திரைப்படத்திலுமாக ஓரிரு காட்சிகளில் வந்து போவது அறிமுக நடிகைகளுக்கு வேண்டுமானால் ஒப்புக் கொள்ளக் கூடிய விஷயமாகக் கருதப்படலாம். ஆனால் நடிக்கத் தெரிந்த எங்களைப் போன்றவர்களுக்கு அந்த வாய்ப்புகளால் எந்தப் பலனுமில்லை. அத்தகைய திரைப்படங்களால் இனி நாங்கள் பிரபலமாக வேண்டியதில்லை. அப்படியான வாய்ப்புகளை அந்தப் படக்குழுவினர் புதியவர்களுக்கு வழங்கினால் அவர்களது வாழ்விற்கு வழிகாட்டியதாக இருக்குமே தவிர என்னைப் போல 700 திரைப்படங்களுக்கும் அதிகமாக மாறுபட்ட பல்வேறு விதமான அம்மா வேடங்களில் நடித்த ஒருவருக்கு அந்த வாய்ப்புகள் தேவை இல்லை. எனத் தனது நேர்காணல் ஒன்றில் சுதா தெரிவித்துள்ளார்.

அவர் சொல்வது சரி தானே....  யோசித்துப் பாருங்கள், தமிழ் சினிமாவில் நினைவில் நிற்கும் அம்மா கதாபாத்திரங்கள் என்றால் உடனடியாக நம் நினைவுக்கு வருபவர்கள் கண்ணாம்பா, பண்டரிபாய், ஆச்சி மனோரமா மட்டுமே காரணம் அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் கனமானவை மட்டுமல்ல நடித்தவர்களுக்கு மாநில மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுத்தந்த திரைப்படங்களும் கூட. அவர்களது வரிசையில் தற்போது நடிகை சரண்யா பொன்வண்ணன் மட்டுமே அதிக அளவில் அம்மா வேடங்களில் சோபித்து வருகிறார், இந்த வரிசையில் மிஷ்கினின் ‘யுத்தம் செய்’ திரைப்படம் வாயிலாக ரெளத்திரம் பழகும் அம்மாவாக வாழ்ந்து அசத்திய லஷ்மி ராமகிருஷ்ணனையும் மறந்து விட முடியாது. சினிமா அம்மாக்களிடையே என்ன ஒரு கஷ்டம் என்றால் தொடர்ந்து நினைவில் நிற்கத் தக்க அம்மா கதாபாத்திரங்கள் அவர்களுக்கு மீண்டும், மீண்டும் வழங்கப் படுவதில்லை. அதற்கு அம்மா நடிகைகளின் சம்பள விவகாரம், சிலர் செய்யும் பந்தாக்கள், திரைக்கதை, தொழிற் போட்டி எனப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் சுதா போன்ற பிரபலமான அம்மா நடிகைகளுக்கு, தங்களுக்கு எந்த விதமான அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் இருக்கிறது அல்லது இல்லை எனச் சொல்லும் உரிமையும் இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் தங்களது நடிப்புத் திறனுக்கு தீனி போடாத, நியாயம் செய்யாத வேடங்களை மறுப்பது இயக்குனர்களால் புரிந்து கொள்ளத்தக்க விஷயம் தான்.

சரண்யா, லஷ்மி ராமகிருஷ்ணன் தவிர ஃபாத்திமா பாபு, மீரா கிருஷ்ணன், அனுராதா கிருஷ்ணமூர்த்தி எனச் சில அம்மாக்கள் சிற்சில திரைப்படங்களில் தலைகாட்டியிருந்தாலும் அவர்கள், அம்மா வேடங்களில் பெரிதாகச் சோபித்ததாகத் தெரியவில்லை. 

ராதிகா, ரேவதி, சுஹாசினி, பூர்ணிமா போன்று ஒரு காலத்தில் டாப் ஹீரோயின்களாக இருந்தவர்களுக்கு அம்மா வேடங்களில் நடித்தாக வேண்டிய கட்டாயம் இல்லாதிருப்பதாலோ, அல்லது அவர்களது பழைய பெருமைகளுக்குத் தக்க கனமான அம்மா கதாபாத்திரங்களை நமது இயக்குனர்களால் உருவாக்க முடியாத காரணத்தாலோ என்னவோ அவர்களையும் கூட அதிகமாக அம்மா வேடங்களில் காண முடிவதில்லை.

கண்ணாம்பாவுக்கு ஒரு மனோகரா, பண்டரிபாய்க்கு அடிமைப்பெண், எங்க வீட்டுப் பிள்ளை, மன்னன் ஆச்சி மனோரமாவுக்கு சின்னத்தம்பி, சின்னக் கவுண்டர், சூரியன் உள்ளிட்ட எக்கச்சக்கமான திரைப்படங்கள், சரண்யாவுக்கு தென்மேற்கு பருவக் காற்று, தவமாய் தவமிருந்து, ராம், உள்ளிட்ட திரைப்படங்களைப் போல தமிழ் சினிமாவில் பிற அம்மா நடிகைகளுக்கு வலிமை வாய்ந்த அம்மா கதாபாத்திரங்கள் வாய்க்கவில்லை என்பதே நிஜம்.

அம்மா கதாபாத்திரம் என்றதுமே அது வயோதிகமானதாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. கீழே உள்ள அம்மா கதாபாத்திரங்களை யோசித்துப் பாருங்கள்;

மாப்பிள்ளை திரைப்படத்தின் ஸ்ரீவித்யா
அலைபாயுதே வில் அம்மாவாக நடித்த ஜெயசுதா;
எம்.குமரன் S/O மகாலஷ்மியின் நதியா;
பாகுபலியின் சிவகாமியான ‘ரம்யா கிருஷ்ணன்; 

இவர்களெல்லாம் ஏற்று நடித்த அளவுக்கு மொத்தப் படத்தையுமே தாங்கி நடிக்கக் கூடிய அளவுக்கு கனமான அம்மா கதாபாத்திரங்களாக இல்லாவிட்டாலும் கூட ஒரு கல், ஒரு கண்ணாடி திரைப்படத்து சரண்யா அளவுக்கு ஜாலியான அம்மாக்களாக, அதாவது படத்தில் அம்மாவாக நடிப்பது ஒரு உயிருள்ள பெண் தான் எனும்படியாக படம் பார்ப்பவர்களுக்குத் தோன்றும் வண்ணமாகவாவது திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடிப்பவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். சும்மா ஹீரோ, ஹீரோயின் அருகில் வந்து நின்று விட்டு, தலையைக் கோதி ரெண்டு சொட்டு கண்ணீர் விடும்படியான அம்மா கதாபாத்திரங்கள் நிச்சயம் ரசிகர்களின் நெஞ்சில் நிற்க வாய்ப்பில்லை. சுதா சொன்னது இதைத் தான். யாருமே அம்மா இல்லாமல் பிறந்து விட முடியாது. டெஸ்ட் டியூப் பேபியாக இருந்தாலும் கூட அம்மா என்ற ஒரு பெண் இல்லாமல் குழந்தை உருவாக வாய்ப்பில்லை. ஆதலால் அம்மா கதாபாத்திரங்களை செட் பிராப்பர்ட்டி போல காட்டாமல் கொஞ்சமே, கொஞ்சம் ஜீவனுள்ளதாக காட்ட முயற்சியுங்கள் இயக்குனர்களே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com