மும்பை பெருமழையில் சிக்கிக் கொண்ட பாலிவுட் பிரபலங்களின் ட்வீட்கள்!

'இந்த வெள்ளத்தில் என் முட்டாள் கார் நகராமல் படுத்து விட்டது, இனி இங்கிருந்து தொடை அளவு தண்ணீரில் நடந்தே வீட்டுக்குச் செல்ல வேண்டியது தான்.' (மாதவனின் இன்ஸ்டாகிராம் நிலைத்தகவல்)
மும்பை பெருமழையில் சிக்கிக் கொண்ட பாலிவுட் பிரபலங்களின் ட்வீட்கள்!

மாதவன்:

'இந்த வெள்ளத்தில் என் முட்டாள் கார் நகராமல் படுத்து விட்டது, இனி இங்கிருந்து தொடை அளவு தண்ணீரில் நடந்தே வீட்டுக்குச் செல்ல வேண்டியது தான்.' (மாதவனின் இன்ஸ்டாகிராம் நிலைத்தகவல்)

அனுபம் கெர்:

'மும்பை சாண்டா க்ரூஸ் விமான நிலையப் பகுதியில் வெள்ளத்தில் தனியாகக் காருக்குள் மாட்டிக் கொண்டேன், அங்கிருந்து மீண்டு எங்கு செல்வதெனத் தெரியாமல் நடந்தே பாந்த்ராவில் இருக்கும் நண்பரது வீட்டில் மழைக்குத் தஞ்சமடைந்திருக்கிறேன், இப்போதும் அந்த நண்பரது வீட்டிலிருந்து வெளிவர முடியாத அளவுக்கு பெருமழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது!' (ட்விட்டரில் அனுபம் கெர்)

ஹ்யூமா குரேஸி:

'பெருமழையால் மூன்று மணி நேரம் ஹை வே போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டேன்... இந்தப் பெருமழை வெள்ளத்தில் நான் கண்ட மனிதர்கள் எல்லோரும் ஒருவர் மற்றொருவருக்கு உதவத் தவறவில்லை, அது தான் எனது மும்பை! எல்லோரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன்!'

மகேஷ் பட்:  

‘விழித்தெழு மும்பை! இந்தப் பருவமழைக் காலத்தின் மிக மோசமான கனவு இது. இப்போது தான் என் இரு சகோதரிகளுடன் பேசினேன். அவர்கள் மும்பையின் மேற்கு கர் பகுதியில் கிட்டத்தட்ட வெள்ளத்தில் மூழ்கி விட்டனர்!'

'மூழ்கிக் கொண்டிருந்த காரிலிருந்து, சரியான நேரத்தில் யாரோ பெருங்கருணை கொண்ட மனிதர்கள் எங்களைக் காப்பாற்றி வெளியில் இழுத்துப் போட்டனர்.' 

திலீப் குமார்:

'நாள் முழுதும் என் அறையின் ஜன்னல் வழியே இந்தப் பெருமழையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடை மழையிலிருந்து மீண்டு நீங்கள் பாதுகாப்பாகவும், ஆரோக்யமாகவும் இருக்க நான் பிரார்த்திக்கிறேன்!'

தீபிகா படுகோன்:

'நான் இந்தச் செய்தியை பதிந்து கொண்டிருக்கும் போது, எனது அலைபேசியின் திரையில் மும்பை மழை வெள்ளம் பற்றிய அபாய எச்சரிக்கைகள் தொடர்ந்து வந்த வண்ணமிருக்கிறது. தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருப்பதோடு நலமாகவும் இருங்கள்!'

ப்ரியங்கா சோப்ரா:

'BMC ஹெல்ப் லைன் எண் 1916. போலீஸ் ஹெல்ப் லைன் 100... வீடு தான் பெரும்பாலானோருக்கும் பாதுகாப்பான இடம். மழையில் சிக்கித் தவிப்போர் பாதுகாப்பான இடங்களில் அடைக்கலமாகுங்கள், அடைக்கலம் அளிக்கக்கூடிய நிலையிலிருப்பவர்கள் தேவைப்படுவோருக்கு நிச்சயம் உதவுங்கள். மும்பையில் பாதுகாப்பாக இருங்கள்!'

அபிஷேக் பச்சன்:

(நேற்று தேசிய விளையாட்டு தினம் அதையொட்டி வெள்ள அபாய நேரப் பதட்டத்தைத் தணிக்கும் விதமாக அபிஷேக்கின் ட்வீட் இருந்தது)  
'இனிய தேசிய விளையாட்டுத் தினம்! இன்றைய விளையாட்டு வாய்ப்பு நீச்சல்... சந்தோஷமாய் நீந்துங்கள்!' 

லாரா தத்தா:  

(கணவர் மகேஷ் பூபதிக்கு அனுப்பிய ட்வீட்) 

'நமது விம்பிள்டன், US open, Aus open& French open போட்டிகளில் பெற்ற டவல்களைப் பயன்படுத்த நல்ல வாய்ப்பு! பாதுகாப்பாக இருங்கள். வாய்ப்பிருந்தால் எல்லோரும் கூரைக்கு உள்ளே இருங்கள்!'

கடந்த திங்களன்று மும்பையில் பெருமழை, பேய் மழையாகக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த போது வெள்ள அபாயத்தில் சிக்கிக் கொண்ட, அல்லது சிக்கிக் கொள்ளும் வாய்ப்பிருந்த அத்தனை பாலிவுட் பிரபலங்களும் தங்களது வெள்ள அனுபவங்களையும், உணர்வுகளையும் ட்விட்டரில் கொட்டித் தீர்த்திருந்தார்கள். அதில் சிலருடையவை தான் மேற்கண்ட ட்விட்கள். திங்களன்று மும்பையில் பெய்த அசுர மழை 2005 ஆம் ஆண்டின் மும்பை கொடுங்கனவை மீண்டும் நினைவூட்டுதாக அமைந்து விட்டது.

2005 ஆம் ஆண்டில் மும்பை பெருமழையில் வீட்டை விட்டு எங்கும் வெளிச் செல்ல முடியாமல் மாட்டிக் கொண்ட அமிதாப் குடும்பத்தினர். அப்போதும் தங்களது வெள்ள அபாய அனுபவங்களை பிற்பாடு செய்தி ஊடகங்களில் பதிவு செய்திருந்தனர். அது கிட்டத்தட்ட 2015 ஆம் ஆண்டில் சென்னை சந்தித்த ராட்சத மழை அனுபவத்துக்கு ஈடானது. மும்பை ஜூஹூ பகுதியில் இருக்கும் அமிதாப் பச்சனின் வீட்டில் 2005 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது முதல் மாடி வரை வெள்ளநீர் எல்லை மீறி இருந்தது.  பாதுகாப்பாக மாடியில் தங்க வைக்கப்பட்டிருந்த தனது வயதான பெற்றோருக்கு உணவுப் பொருட்களைத் தர, தன் மகன் அபிஷேக் ஒவ்வொரு முறையும் வெள்ளநீரை நீந்திக் கடந்து செல்வார். என அமிதாப் அப்போது தெரிவித்திருந்தார்.

அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு இந்த ஆண்டு மும்பை பருவமழை வெள்ளத்தில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. சாதாரண நாட்களை விட இம்மாதிரியான அபாயகரமான நேரங்களில் தான் பொதுமக்களின் மனிதாபிமானம் விழித்துக் கொள்ளும். மும்பை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அத்தனை சகோதர, சகோதரிகளும் பாதுகாப்பான இடங்களில் நலமோடு இருக்க தினமணி பிரார்த்தித்துக் கொள்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com