முன்பே வா... என் அன்பே வா பாடல் புகழ் பூமிகா திரும்ப வந்தாச்சு!

மிடில் கிளாஸ் அப்பாயி (மிடில் கிளாஸ் பையன்) என்ற பெயரில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தில்  அண்ணிக்கும், கொழுந்தனாருக்குமான சினேகத்தை எத்தனை அழகியலோடு படமாக்கவிருக்கிறார்கள்
முன்பே வா... என் அன்பே வா பாடல் புகழ் பூமிகா திரும்ப வந்தாச்சு!
Published on
Updated on
1 min read

சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வரும் இந்தப் பாடல் இப்போதும் கூட பலரது அலைபேசியின் காலர் டியூன். பாடல் எந்த அளவுக்கு ரசிக்கப்பட்டதோ அதே அளவுக்கு அப்போது பூமிகாவுக்கும் தமிழில் ரசிகர்கள் இருந்தார்கள். தமிழை விட தெலுங்கில் பூமிகா அதிகப் படங்கள் நடித்திருக்கிறார். இயக்குனர் கருணாகரனின் அறிமுகமான பூமிகா தமிழில் ரோஜாக்கூட்டம், பத்ரி, சில்லுன்னு ஒரு காதல், சிறுத்தை என்று விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். தமிழில் அவர் நடித்த படங்கள் அத்தனையும் ஹிட் ஆகியிருந்தாலும் தமிழை விட தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தார். தெலுங்கிலும் கூட தற்போது ஏனோ பூமிகாவை வெகு நாட்களாக காண இயலவில்லை. திருமணம் செய்து கொண்டு யோகா, தியானம், ஃபிட்னஸ் என்று திருப்தியாக செட்டிலாகியிருந்தவரை மீண்டும் அழைத்து வந்திருக்கிறார்கள். இங்கல்ல, அக்கடபூமியில்! 

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘நான் ஈ’ திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமான நானியின் அடுத்த திரைப்படத்தில் நானிக்கு அண்ணியாக நடிக்க டோலிவுட்டில் தேடல் நடந்து கொண்டிருந்தது. அப்போது, நானியே, இவர் அந்தக் கேரக்டருக்குப் பொருத்தமாக இருப்பார் என பூமிகாவை பரிந்துரைக்க இப்போது பூமிகா நானிக்கு அண்ணியாகி விட்டார். மிடில் கிளாஸ் அப்பாயி (MCA) திரைப்படம் தென்னிந்திய திரைப்பட உலகம் அதிகம் பேசியிருக்காத வகையில் அண்ணிக்கும், கொழுந்தனாருக்குமான ஆத்மார்த்தமானதொரு உறவைப் பற்றி பேசவிருக்கிறதாம். இதைக் கேள்விப்பட்டதும் அடடே! என்றிருந்தது.

அண்ணிக்கும், கொழுந்தனாருக்கும் இடையிலான ஆத்மார்த்தமான உறவைப் பற்றிப் பேசும் திரைப்படங்கள் தமிழ், தெலுங்கில் இதற்கு முன்பு இல்லாமலென்ன? இருந்திருக்கின்றன. ஆனால் அதிக அளவில் இல்லை.

கே.பாலசந்தரின் காதல் பகடை டெலி சீரியல், தமிழில் எழுத்தாளர் இந்துமதி எழுதிய ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ நாவலின் அடிப்படை கூட அண்ணிக்கும், கொழுந்தனாருக்குமிடையிலான சினேகத்தைப் பற்றியது தான்.

மிடில் கிளாஸ் அப்பாயி (மிடில் கிளாஸ் பையன்) என்ற பெயரில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தில்  அண்ணிக்கும், கொழுந்தனாருக்குமான சினேகத்தை எத்தனை அழகியலோடு படமாக்கவிருக்கிறார்கள் என்பது படம் வெளிவந்தால் தெரியும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com