நடிகை கடத்தல் வழக்கா? அல்லது மீண்டுமொரு லஷ்மி காந்தன் கொலைவழக்கா? முடிவு அப்படித்தானோ!

நடிகை கடத்தல் வழக்கா? அல்லது மீண்டுமொரு லஷ்மி காந்தன் கொலைவழக்கா? முடிவு அப்படித்தானோ!

தென்னிந்தியத் திரையுலகைப் பொறுத்தவரை பிரபல நடிகர்கள் இம்மாதிரியான கிரிமினல் வழக்குகளில் சிக்கிக் கொண்டு தங்களது திரையுலக எதிர்காலத்தை தாங்களே மண்ணோடு மண்ணாகப் புதைந்து போகச் செய்வதில் சிறந்த

கேரள நடிகை  கடத்தல் வழக்கில்,  நேற்று முன் தினம் நடிகர் திலீப் கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து இன்று நீதிமன்றம் அவரை 2 நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு  அனுமதி அளித்துள்ளது. தன் மனைவியுடனான விவாகரத்துக்கு காரணமானவராக நடிகை இருந்திருப்பார் என்ற முன் பகையின் காரணமாகவே தான் இப்படி ஒரு காரியத்தைச் செய்ததாக திலீப் வாக்குமூலத்தில் தெரிவித்ததை அடுத்து அவரை 3 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரியது. அதையொட்டி நடிகர் திலிப்புக்கு ஜாமீன் அனுமதி மறுத்த  நீதிமன்றம் அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

ஒரு நடிகையை, உடன் நடித்த பிரபல நடிகர் ஒருவரே முன் பகை காரணமாக கூலிப்படையை ஏவி கடத்தச் செய்து பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய இந்த  விவகாரம் தற்போது கேரள திரைத்துறையில் கடும் கண்டனத்திற்குரிய பிரச்னையாக விஸ்வரூபமெடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக  நேற்று முன் தினம் நடிகர் மம்மூட்டியின் இல்லத்தில் கூடிய மல்லுவுட் நடிகர், நடிகைகள் அனைவரும் ஒருமனதாக விவாதித்து திலீப்பை ‘அம்மா’ அமைப்பிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் வெளிவருவதாக இருந்த திலீப் நடித்த திரைப்படங்களின் வெளியீடு மீண்டும் தள்ளிப் போகுமென எதிர்பார்க்கப் படுகிறது. பிரபல நடிகர்கள் இப்படியான சதிச் செயல்களில் ஈடுபடுவது அவர்களது ரசிகர்களைப் பலத்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக கேரள ரசிகர்கள் மலையாள ஊடகங்களில் இவ்விவகாரம் குறித்த தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நடிகர்களின் திரைப்படங்களைக் காண தாங்கள் உழைத்துச் சேர்த்த பணத்தைச் செலவிடுவதை காட்டிலும், பேசாமால் அந்தப் பணத்தை ஒரு சர்கஸ் பார்க்கவோ, அல்லது மிருகக் காட்சி சாலைக்குச் சென்று சுற்றிப் பார்க்கவோ செலவிடலாம் என்று சில ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தனது முதல் மனைவியான, மஞ்சு வாரியருடனான விவாகரத்துக்கு முதற்காரணமாக அந்த நடிகையே இருந்திருக்கக் கூடும் என திலீப் நம்பினார். அந்த முன்பகை காரணமாகவே பல்சர் சுனி மூலமாக கூலிப்படையை ஏவி, நடிகையைக் காரில் கடத்தி மானபங்கம் செய்து அதை வீடியோ பதிவாக்கி அவரை மிரட்டும் முயற்சிகளை மேற்கொள்ள தனது நண்பரும் தயாரிப்பாளருமான நாதிர்ஷா மூலமாக திலீப் முயன்றுள்ளார் என்பதே அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு. சமீபத்திய ஊடகச் செய்திகளில், தன் மீது வைக்கப் பட்டுள்ள குற்றச்சாட்டை திலீப் ஒப்புக் கொண்டதாகவே காட்டப்படுகின்றன. திலீப் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க 19 விதமான சாட்சியங்களை காவல்துறை, நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளதாம். இதன் அடிப்படையில் நோக்கும் போது திலீப் ஆதாரங்களின் அடிப்படையில் வகையாக சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொண்டார் என்றே கூறலாம். இதற்கு நடுவில் கடந்த வருடம் திலீப், நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகை கடத்தல் வழக்கை ஒட்டி, திலீப்பின் மனைவியான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருக்கக் கூடுமா? என காவல்துறை விசாரணை நீள்கிறது. மேலும் ‘பாவனா கடத்தல் விவகாரத்தை பொறுத்தவரை குற்றவாளிகள் யாரும் விடுபடப் போவதில்லை, குற்றம் நிரூபணமானால் ஒருவர் பாக்கியின்றி அனைவருக்குமே தண்டனை உறுதி’ என கேரள முதல்வர் பினராயி விஜயன் சில தினங்களுக்கு முன்பு கூறி இருந்தார்.

திலீப், மஞ்சு வாரியர் காதல் திருமணம்!

திலீப், மஞ்சு வாரியர் திருமணமும் காதல் திருமணமே! அந்தக் காதல், விவாகரத்தில் முடியக் காரணம் என்னவாக இருக்க முடியும் என்பது குறித்து இருவரும் இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்துகளையும் பதிந்திருக்கவில்லை. அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட யூகங்களே இதுவரை ரசிகர்களுக்கான பதில்களாக இருந்து வருகின்றன. திலீப் உடனான தனது திருமணத்தின் போது நடிகை மஞ்சு வாரியர் உச்சத்தில் மின்னிக்கொண்டிருந்த பரபரப்பான முன்னணி நடிகையாக இருந்து வந்தார். அச்சமயத்தில் திலீப்பை திருமணம் செய்து கொள்ள மஞ்சு எடுத்த முடிவுக்கு அவரது பெற்றோரின் சம்மதம் இருக்கவில்லை. பெற்றோரை எதிர்த்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறியே மஞ்சு 1998 ல் திலீப்பை மணந்தார். அவர்களுக்கு மீனாட்சி என்றொரு மகள் இருக்கிறார்.

விவாகரத்தில் பிரபலங்களுக்கும் பங்கிருக்கிறது...

தனது முதல் திருமண வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது திலீப் ‘5 ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்கு மிக அழகான, அருமையான குடும்பம் இருந்தது’ ஆனால் இன்று அதெல்லாம் இல்லாமலாகி விட்டது. என்  முதல் மனைவியான மஞ்சு வாரியர் எனக்கு மனைவி மட்டுமல்ல, எனது எல்லாப் பிரச்னைகளையுமே நான் பகிர்ந்து கொள்ளக்கூடியமிகச் சிறந்த தோழியாகவும் அவர் இருந்தார். எங்களுக்குள் பிரச்னை வரக் காரணமாக மலையாளத் திரையுலகின் உச்சத்திலிருக்கும் சில பிரபலங்களும் தான் காரணம். அவர்களது பெயரை நான் வெளியிட விரும்பவில்லை. ஏனெனில் எனக்கு அதை விட எங்களது மகள் மீனாட்சியின் எதிர்கால வாழ்க்கை அமைதியாகவும், தெளிவாகவும் அமைய வேண்டுமே என்ற கவலையும், அக்கறையும் இருந்ததால் நான் எங்களது விவாகரத்திற்கு இவர்கள் தான் காரணம் என யாரையுமே குறிப்பிட விரும்பவில்லை. என்று தெரிவித்திருந்தார்.

திலீப் அப்படிச் சொன்னாலும் மஞ்சு, திலீப் விவாகரத்துக்கு மூல காரணமாக, திலீப், நடிகை காவ்யா மாதவனுடன் கொண்டிருந்த அதீதமான நட்பே காரணமெனக் கிசு கிசுக்கப் பட்டது. அந்த நட்பு முறையற்ற உறவாக சித்தரிக்கப் பட அதையொட்டியே மஞ்சு வாரியருக்கும், திலீப்புக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் முளைத்ததாக மலையாளப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டு வந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை திலீப் மற்றும் காவ்யா மாதவன் இருவருமே தொடர்ந்து மறுத்து வந்தனர்.

மஞ்சுவின் திரையுலக மறுபிரவேசத்தை எதிர்த்ததால் விவாகரத்தா?

இது ஒரு பக்கம் இருக்க; மஞ்சு மலையாளத் திரையுலகின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். திருமணத்திற்குப் பிறகு கணவர், குழந்தை, வீடு என்று ஒதுங்கி விட அவர் விரும்பவில்லை. மகள் மீனாட்சி வளர்ந்து பள்ளி செல்லும் காலம் வந்த பின், தான் மீண்டும் திரைத்துறையில் நுழைய விருப்பம் தெரிவித்தார் மஞ்சு. ஆனால் மனைவி என்பவள் வீட்டில் இருந்து, குடும்பத்தை கவனித்துக் கொண்டால் போதும் எனும் மேல்சாவனிஸ மனப்பான்மை திலீப்புக்கு இருந்ததால் அவர் மஞ்சுவின், சினிமா மறுபிரவேசத்திற்கு மறுப்புத் தெரிவிக்கவே அவர்களுக்குள் தொடங்கிய ஈகோ மோதலே பிற்பாடு விவாகரத்தில் முடிந்தது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. 

மஞ்சு, திலீப் விவாகரத்திற்குப் பிறகு... தனது தந்தையுடன் வாழவே அவர்களது மகளான மீனாட்சி விருப்பம் தெரிவித்திருந்தார். தந்தையுடனிருந்த மீனாட்சியின் முன்னிலையில் தான் கடந்த வருடத்தில் திலீப், காவ்யா மாதவன் திருமணம் நடந்தது. இந்நிலையில் தற்போது நடிகை கடத்தல் வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தன் மகள் மீனாட்சியின் மீதான உரிமையை தனக்கே அளித்து விடும்படி மஞ்சு வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

என் விசயத்தில் பலிகடாவாக்கப் பட்ட பெண்ணை மணப்பதே முறை...

முதல் மனைவியுடனான தனது விவாகரத்துக்கு காரணமானவர் எனக் கருதப் பட்ட ஒரு நடிகையையே திலீப் மறுமணம் செய்து கொண்டது ’ திலீப்பின் மேல் சாவனிஸ நடவடிக்கை’ என்பதாக அப்போது மலையாள ஊடகங்களில் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக திலீப்,  ‘என் மகள் மீனாட்சிக்கு ஒரு அம்மா தேவைப்பட்டார், அதற்கு நான் மறுமணம் செய்து கொள்வதாக இருந்தால், என்னோடு பலமுறை கிசுகிசுக்கப் பட்டு தனது வாழ்வைத் தொலைத்து என் விசயத்தில் பலியாடாக்கப்பட்ட ஒரு பெண்ணைத் தவிர வேறு யாரை நான் திருமணம் செய்து கொள்ள முடியும்?! என்று தோன்றியது. அதோடு காவ்யாவை எனக்குப் பல ஆண்டுகளாக தெரியும். அறிமுகமில்லாத புதியவர் ஒருவரை மறுமணம் செய்து கொள்வதைக் காட்டிலும் இவரைத் திருமணம் செய்து கொள்வதே பொருத்தமாக இருக்கும், என்றெண்ணினேன்’ அதனால் தான் எனது, மகள் மற்றும் குடும்பத்தினர் ஒப்புதலுடன் இந்தத் திருமணம் நடந்தது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

காவ்யாவுடனான மறுமணம் திலீப்பின் மேல்சாவனிஸ நடவடிக்கை...

தனது இரண்டாவது திருமணத்தை நியாயப் படுத்த திலீப் அளித்த இந்த ஸ்டேட்மெண்ட் குறித்து அப்போதே மலையாளப் பெண்ணியவாதிகள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது, ‘ ஒருவர் தன்னோடு கிசு கிசுக்கப் படுகிறார் என்பதற்காக அவரைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்வதெல்லாம் அதீதமான கற்பனை. திலீப் போன்ற மேல்சாவனிஸ சித்தாந்தம் கொண்ட ஒரு நடிகரிடம் இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? ஆனால் காவ்யா போன்ற ஒரு சிறந்த நடிகையிடம் நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை, அவர் எப்படி இந்தத் திருமணத்திற்கு சம்மதித்தார்? என்று நினைத்தால் ஆச்சர்யமான இருக்கிறது... இதன்மூலம் இருவரது நீண்ட நாள் தொடர்பு இன்று... முதல் மனைவி விவாகரத்து அளித்து ஒதுங்கிய பின் நிஜமாகி இருக்கிறது... அவ்வளவு தான். என்று இந்த விசயத்தை ஒதுக்கினர்.

நடிகை மீதான துவேசத்துக்கு காரணம்?!

இதற்கு நடுவில், திலீப், மஞ்சு வாரியர், காவ்யா மாதவன் முக்கோணக் கதையில் நடிகை ஏன் பலி வாங்கப் பட்டார்? என்றொரு கேள்வி வருகிறதில்லையா? பாதிக்கப்பட்ட அந்த  நடிகை, பல காலமாகவே மஞ்சு வாரியரின் நெருங்கிய தோழி.  திலீப்புக்கும், மஞ்சு வாரியருக்கும் பிணக்கு ஏற்பட்ட முதற்பொழுதில், நட்சத்திரக் கலைவிழாவுக்காக வளைகுடா நாடுகளுக்குச் சென்றிருந்தனர் மலையாள நடிகர், நடிகைகள்.. அப்போது அந்தக் குழுவில் நடிகையும் ஒருவர். அந்தக் கலை விழாவில் திலீப் மற்றும் காவ்யா மாதவனின் நடவடிக்கைகள் கணவன், மனைவி போல அந்நியோன்யமாக இருந்ததாக நடிகை, மஞ்சு வாரியரிடம் தெரிவிக்கவே இதனால் மஞ்சு வாரியருடனான திலீப்பின் குடும்ப வாழ்க்கை ஆட்டம் கண்டது. இந்தக் கோபத்தை மனதில் வைத்து தான் திலீப் இப்படி வஞ்சம் தீர்த்துக் கொண்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்த நிலையில் தற்போது திலீப்பின் வாக்குமூலம் அதை உறுதி செய்திருக்கிறது. நடிகையைக் கடத்த பல்சர் சுனிக்கு திலீப் 50 லட்சம் ரூபாய் அளித்ததாக ஒப்புக் கொண்டதாக காலையில் ஊடகச் செய்திகள் தெரிவித்தன. அதையொட்டியே நேற்று முன் தினம் கைது செய்யப் பட்ட நிலையில் தற்போது ஜாமீன் மறுக்கப் பட்டு 2 நாட்கள் காவல்துறை கஸ்டடியில் விசாரிக்கப் படவிருக்கிறார் திலீப்.

இனி  திலீப்பின் திரையுலக எதிர்காலம்...

தற்போது ஜாமீன் மறுக்கப் பட்டுள்ள நிலையில் திலீப்பிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் மேலும்யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது எனக் கண்டறிய காவல்துறை தொடர்ந்து முயன்று வருகிறது. திலீப்பின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தற்போது வரை 19 விதமான சாட்சியங்கள் சிக்கியுள்ளதாக தகவல். இவ்வழக்கில் திலீப் தவிர காவ்யா மாதவனுக்கும் பங்கு உண்டா? காவ்யாவின் தாயாரான சியாமளா தான் இந்த கடத்தல் வழக்கின் மூளையாகச் செயல்பட்டாரா? என்ற ரீதியில் விசாரணை நீள்கிறது. 

பழைய லஷ்மி காந்தன் கொலை வழக்குக்கு சற்றும் குறையாத பரபரப்பு...

தென்னிந்தியத் திரையுலகைப் பொறுத்தவரை பிரபல நடிகர்கள் இம்மாதிரியான கிரிமினல் வழக்குகளில் சிக்கிக் கொண்டு தங்களது திரையுலக எதிர்காலத்தை தாங்களே மண்ணோடு மண்ணாகப் புதைந்து போகச் செய்வதில் சிறந்த முன்னுதாரணங்கள் சில உண்டு. அதில் குறிப்பிடத்தக்கது லஷ்மிகாந்தன் கொலை வழக்கு. இந்த வழக்கில் முன் விரோதம் காரணமாக கிசு கிசு எழுத்தாளரான லஷ்மி காந்தனை அன்றைய பிரபல சூப்பர் ஸ்டார்களான தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சதிவேலையில் ஈடுபட்டு கூலிப்படையை வைத்து கொலை செய்து விட்டதாக குற்றம்சாட்டப்பட்டார்கள். குற்றம் நிரூபணமாகி முடிவில் இருவரும் சிறை சென்றதால், அவர்கள் திரும்பி வருவதற்குள் உச்சாணிக் கொம்பில் இருந்த அவர்களது திரையுலக பிம்பங்கள் சரிந்து அதல பாதாளத்தில் விழ, இருவரது திரைவாழ்வும் ஆட்டம் கண்டு ஷீணித்தது.  தற்போது அதே விதமாக ஒரு நடிகையின் மீதான முன் விரோதம் காரணமாக திலீப்பும் லஷ்மி காந்தன் கொலை வழக்குக்கு சற்றும் குறையாத பாதக அம்சங்கள் கொண்ட மோசமான குற்றச்சாட்டில் வசமாகச் சிக்கியுள்ள நிலையில் குற்றம் நிரூபணம் ஆகும் பட்சத்தில் திலீப்பின் திரையுலக எதிர்காலம் என்ன ஆகும்?  எனக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

லட்சோபலட்சம் ரசிகர்களைக் கொண்ட ஒரு ஹீரோ இப்படிச் செய்தது நிரூபணம் ஆனால் அவருக்கு தொடர்ந்து ரசிகர்களாக இருக்க வேண்டிய நிர்பந்தம் மக்களுக்கு இல்லை. எனவே திலீப் மட்டுமல்ல இந்த வழக்கில் எந்த ஸ்டார் நடிகர்கள் சிக்கியிருந்தாலும் அவர்களது கதி அதோ கதி தான்.  2 நாட்கள் கஸ்டடி விசாரணைக்குப் பின் திலீப்  அளிக்கும் சாட்சியங்களின் அடிப்படையில் மல்லுவுட்டிலிருந்து மேலும் என்னவெல்லாம் பூதம் கிளம்பவிருக்கிறது எனத் தெரியவில்லை.

மொத்தத்தில் இது நடிகை கடத்தல் வழக்கு என்பதைத் தாண்டி, பழைய விவகாரங்களோடு ஒப்பிடுகையில் திலீப்பின் திரையுலக எதிர்காலத்துக்கு முடிவு கட்ட வந்த மற்றுமொரு ‘லஷ்மி காந்தன் கொலை வழக்குப்’ போன்றதாகவே தோற்றமளிக்கிறது. அதன் முதற்கட்ட விளைவே கேரள நடிகர்கள் சங்க அமைப்பான ‘அம்மா’ வில் இருந்து திலீப் நீக்கப் பட்டதாக வந்த அறிவிப்பு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com