பிக் பாஸில் வெல்ல ஓவியாவைத் தவிர வேறு யாருக்குமே அங்கு தகுதியில்லையா?

ஓவியா ஜெயிப்பதில் எந்தக் குற்றமும் இல்லை ஆனால், அவரை விடவும் தகுதி வாய்ந்த நபர் அங்கே பிக் பாஸ் குடும்பத்தில் ஒருவர் கூட இல்லை என்றால் ஓவியாவுக்காக ஓட்டுப் போட்டு எலிமினேஷனில் இருந்து
பிக் பாஸில் வெல்ல ஓவியாவைத் தவிர வேறு யாருக்குமே அங்கு தகுதியில்லையா?

கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே உடனே ஓவியா தான் வின்னர் என்ற ரீதியிலேயே பல பதிவுகளைக் காண நேரிடுகிறது. ஓவியாவுக்கு போட்டியில் ஜெயிக்கப் பல தகுதிகள் இருந்தாலும் அவரிடம் குறைகளும் இல்லாமல் இல்லை. அந்தப் போட்டியின் பங்கேற்பாளர்கள் முன்னமே தெரிவித்திருந்தபடி அந்த பிக் பாஸ் வீட்டின் வேலைகளை ஓவியா சரிவரச் செய்யவில்லை என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. இதைப் பலமுறை பிக் பாஸ் பங்கேற்பாளர்கள் அந்நிகழ்ச்சியினிடையே தெரிவித்திருக்கிறார்கள். நிகழ்ச்சி தொடங்கி பல வாரங்கள் கடந்த பின்னும் இப்போதும் அவர் மீது அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளும் அதே தான். வீட்டில் ஒரு வேலையையும் செய்யத் தனக்கு விருப்பமில்லை. அப்படியே போட்டியின் விதிகளின் படி வேலை செய்ய வேண்டும் என்றாலும், தனக்குத் தோன்றும் போது மட்டுமே செய்வேன். எப்போது வேலை செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். அப்போது மட்டுமே செய்வேன். என்பது மாதிரியான ஓவியாவின் பதில்கள் கூட்டுக் குடும்ப மாதிரி அமைப்பான பிக் பாஸில் நிச்சயமாக சண்டைகளை வரவழைக்கும் ஒரு அம்சம் தானே தவிர வேறில்லை. ஓவியாவின் மீது ஆரம்பம் முதலே வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளில் இதுவே முக்கியமானது. இதை அவர் நிவர்த்தி செய்தாரா? என்றால்? இதுவரை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

நேற்றைய நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி சொன்னது போல... ஓவியாவுக்குப் பிற பெண்களைப் பற்றியோ அல்லது ஆண்களைப் பற்றியோ குறை கூறும் மனப்பான்மை இல்லை என்பது அவரது வெற்றிக்கான தகுதிகளில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே அவரது வெற்றியை உறுதி செய்தால். பிற நாட்களில் அவர் பிக் பாஸ் குடும்பத்தில் பிறரது வேலையைப் பகிர்ந்து கொள்ள முயலாதது குற்றமே இல்லையென்றாகிறது இல்லையா? நமது குடும்ப அமைப்பில் பல சண்டை, சச்சரவுகளுக்கும் மூல காரணமாக அமைவதில் இந்த வேலைப்பங்கீடும் ஒன்று. இன்றும் கூட்டுக் குடும்ப அமைப்பில் வாழும் பல குடும்பங்களில் அண்ணன், தம்பிகளுக்குள், அவர் தம் மனைவிகளுக்குள் சண்டைகள் வரக் காரணமே குடும்பத்திற்கான வீட்டு வேலைகளைப் பங்கிட்டுக் கொள்ளும் போது ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளே காரணம் என்பதால். ஓவியா தன் மீதான அந்தக் குற்றச்சாட்டை நிவர்த்தி செய்து கொள்ளும் வரை அவரை எப்படி வெற்றியாளருக்கான தகுதி உடையவர் என ஏற்றுக் கொள்ள முடியும். ஏனெனில் குடும்பத்தின் சண்டைக்கு மூலகாரணமே இந்த விஷயம் தான் என பிக் பாஸ் குடும்பத்தினர் பல்வேறு சந்தர்பங்களில் பதிவு செய்துள்ளனர். ஆனால் அதற்குள் ஓவியா தான் வின்னர் எனும் ரீதியில் அவருக்கான ஆதரவு வலுத்து வருகிறது. ஓவியா ஜெயிப்பதில் எந்தக் குற்றமும் இல்லை ஆனால், அவரை விடவும் தகுதி வாய்ந்த நபர் அங்கே பிக் பாஸ் குடும்பத்தில் ஒருவர் கூட இல்லை என்றால் ஓவியாவுக்காக ஓட்டுப் போட்டு எலிமினேஷனில் இருந்து அவரைக் காப்பாற்றியவர்களைத் தவிர வேறு யாருமே பிக் பாஸ் பார்க்கவே இல்லை என்பதாகிறது. ஓட்டுக்களில் விருப்பங்களற்ற பெருவாரியான ஆதரவாளர்களில் பிக் பாஸ் குடும்பத்தின் பிற உறுப்பினர்களான கணேஷ் வெங்கட்ராம், ரைஸா, ஆரவ், சினேகன் உள்ளிட்டோரை ஆதரிப்பவர்களும் இருப்பார்கள் என நம்ப மறுக்கக் கூடாது.

இவர்களுக்கெல்லாம் ஓவியாவைப் போல ரசிகர் பட்டாளங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பிக் பாஸ் கூட்டுக் குடும்ப அமைப்பு முறையில் இவர்கள் பிறருக்கு மன உளைச்சலைத் தரும் அளவுக்கு ஆபத்தில்லாத அணுகுமுறைகள் கொண்டவர்கள் என்பதை மறுக்க முடியாது.

ஒருவர் வேலையே செய்யாமல் சும்மா உட்கார்ந்து கொண்டு வேளா வேளைக்கு சாப்பிட மட்டும் செய்வேன் என்பதோ, அல்லது என்னால் இவ்வளவு வேலை தான் செய்ய முடியும், அதையும் நான் விரும்பும் போது மட்டுமே தான் செய்வேன் என்று சட்டம் பேசுவதும் கூட குடும்பத்தின் பிற உறுப்பினர்களை மன உளைச்சலுக்குத் தூண்டும் விஷயம் தான். அதைத் தான் பிக் பாஸ் வீட்டில் ஓவியா இதுவரை செய்து வந்துள்ளார். அதற்காக அவர் மீது குற்றம் சாட்டி அவரைத் தனிமைப்படுத்திய பிற உறுப்பினர்களான காயத்ரி, ஜூலியானா, நமிதாவுக்கு வக்காலத்து வாங்குவதாக எண்ணி விடத் தேவையில்லை. ஏற்கனவே பேயாடிக் கொண்டிருப்பவர்களுக்கு உடுக்கை அடித்து மேலும் ஆட விட்டது ஓவியாவின் இந்த பொறுப்பற்ற தன்மை தான். 

இங்கே ஜல்லிக்கட்டு புகழ் வீரத்தமிழச்சி ஜூலியானாவைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. பிக் பாஸ் வின்னராக அந்தப் பெண்ணுக்கு 0.000001 % வாய்ப்பிருந்தாலும் அது அந்த நிகழ்ச்சிக்கு மட்டுமல்ல அதைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்களின் ரசனைக்கேடு என்று தான் சொல்ல வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக இவருக்கு கிடைத்த மீடியா வெளிச்சத்தில் நிஜமாகவே ஜல்லிக்கட்டுக்காக சத்தமில்லாமல் புரட்சி செய்து வெற்றி கண்ட பலரது முகமும், குரலும் வெளிச்சத்துக்கு வராமலே போனதன் புண்ணியத்தை அந்த ஜூலியானாவே கட்டிக் கொள்ளட்டும்.

அப்புறம் காயத்ரி... டான்ஸ் மாஸ்டர் காயத்ரி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தன் சுயரூபத்தை அனைவருக்கும் நீக்கமறக் காட்டி விட்டார். அவருக்கு போட்டியில் வெற்றி வாய்ப்புகள் உண்டோ இல்லையோ? ஆனால் வந்த வரை லாபம் தான்! சிலருக்கு தான் எங்கிருந்தாலும் தனக்கென்று ஒரு ஜால்ராப்படை தேவைப்படும். அப்படிப்பட்ட குணாம்சம் காயத்ரியின் நடவடிக்கையில் நன்றாகவே தெரிகிறது. ஜால்ரா சத்தத்தில் உச்சஸ்தாயியில் ஓங்கி ஒலிப்பது சாட்ஷாத் ஜல்லிக்கட்டு ஜூலியானாவின் குரல். அம்மணி இப்படி ஒரு எண்ணத்துடன் தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினார் போலும். 

நமிதா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன் கமலிடம் சொன்னது; ரியல் நமிதா எப்படி என்று தனது ரசிகர்களுக்கு காட்டவே, தான் இந்தப் போட்டியில் பங்கேற்றதாகக் கூறினார். இப்போது அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, ரசிகர்கள் அல்லாதோருக்கும் ஏன் தமிழ்நாட்டின்... உலகில் எங்கெங்கு ஸ்டார் விஜய் டி.வி யின் பிக் பாஸ் ஒளிபரப்பாகிறதோ அங்கிருப்பவர்கள் அனைவருமே  தெரிந்து கொண்டிருப்பார்கள்... ரியல் நமிதா எப்படி என்று!!!  திரை வேறு... நிஜம் வேறு என்று புரிய வைத்த தைரியமான முயற்சிக்காக நாம் ஒரு வேளை நமிதாவைப் பாராட்டலாம். போட்டியிலிருந்து இரு வாரங்களுக்கு முன் எலிமினேட் ஆன பரணியின் மீது தான் வைத்த குற்றச்சாட்டுக்கு நமிதா அளித்த விளக்கம் அவரது சுயநலத்தையும், சந்தர்ப்பவாதத்தையும், பாரபட்ச மனப்பான்மையையும் பிறர் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியை வெறும் பார்வையாளர்கள் கண்ணோட்டத்தில் நடுநிலைத் தன்மையுடன் பார்த்தால் ஓவியாவுக்கு இணையாக போட்டியில் ஜெயிக்கும் வாய்ப்பு கணேஷ் வெங்கட் ராமுக்கும் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சில சமயங்களில் வையாபுரியும், நமிதாவும் அவரை சாப்பாட்டு ராமன் என்று விமர்சித்தாலும் கூட கணேஷ்  பிக் பாஸ் குடும்பத்தின் பிற உறுப்பினர்களோடு வந்த நாள் முதல் இன்று வரை நடத்திய பல சம்பாஷனைகளைக் காணும் போது அவரது செயல்பாடுகளில் பெரிதாக எந்தக் குற்றமும் இல்லை. அனைவருடனும் இனிமையாகப் பழக நினைக்கும் முயற்சி, சக நண்பர்களின் மனம் கோணாது வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசும் விதம், பிக் பாஸ் போட்டியின் டாஸ்குகள் எப்படிப் பட்டவையாக இருந்தாலும் அதை ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொண்டு தனது பங்களிப்பை வழங்க நினைக்கும் முயற்சிகள் என அனைத்திலும் பார்வையாளர்களால் குறை காண முடியாத நபராகவே கணேஷ் அடையாளம் காணப்படுகிறார். அவரைப் பற்றிய குறையாகப் பெரிது படுத்தப் படும் ஒரு நிகழ்வு; பிக் பாஸ் வீட்டில் பெண்கள் பரணியின் மீது அபாண்டமாகப் பழி சுமத்திய போது உண்மை என்ன என ஆராயாமல் ‘பெண்களின் பாதுகாப்புக்கு நான் கியாரண்டி’ என்று கூறியது மட்டுமே. ஆக வெற்றி வாய்ப்பில் ஓவியாவுக்கும், கணேஷுக்கும் சரி சமமான வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இவ்விருவரிடமும் எத்தனைக்கெத்தனை நிறைகள் இருக்கின்றனவோ அதற்கொப்ப ஒரு சில சின்னச் சின்ன குறைகளும் உள்ளன. 

ஆனால் ஓவியாவுக்கு திரண்டதைப் போல கணேஷுக்கு ரசிகர் பட்டாளமோ, எழுச்சிப் படையோ, பச்சை மண்ணுடா அவன் மாதிரியான ஆதரவாளர்கள் சப்போர்ட்டோ இல்லை. ஏனென்றால் ஓவியா அளவுக்கு இந்நிகழ்ச்சியில் கணேஷ் அடிக்கடி பார்வையாளர்களிடம் பரிதாபத்தைச் சம்பாதிக்கவில்லை என்பதே நிஜம். ஆகவே இன்னமும் சில வாரங்கள் மீதியுள்ள நிலையில் பிக் பாஸில் ஓவியா வென்று விட்டதைப்போன்ற மாயத்தோற்றம் ஏற்பட்டிருந்தாலும் இன்னமும் போட்டி டிராவில் தான் உள்ளது என்பதே மீதமுள்ள பார்வையாளர்களின் மனநிலை என்றுணர்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com