விஷால் கைதான நிலையில் தயாரிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ள தி.நகர் பகுதியில் 144 தடை உத்தரவு  

தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தின் பூட்டை உடைக்க முயன்ற விவகாரத்தில் விஷால் கைதான நிலையில், தயாரிப்பாளர் சங்க அலுவலகம் அமைந்துள்ள தி.நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  
விஷால் கைதான நிலையில் தயாரிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ள தி.நகர் பகுதியில் 144 தடை உத்தரவு  
Published on
Updated on
2 min read

சென்னை: தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தின் பூட்டை உடைக்க முயன்ற விவகாரத்தில் விஷால் கைதான நிலையில், தயாரிப்பாளர் சங்க அலுவலகம் அமைந்துள்ள தி.நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தைக் கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் சென்னையில் புதனன்று போராட்டம் நடத்தினார்கள். பொதுக்குழுவிடம் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார். பிரச்னைகள் தொடர்பாகப் பொதுக்குழுவைக் கூட்டவேண்டும் என்று போராட்டம் நடத்திய தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்தார்கள். கடந்த நிர்வாகம் சேமித்து வைத்த ரூ. 7 கோடி வைப்பு நிதி என்ன ஆனது என்றும் இவர்கள் கேள்வியெழுப்பினார்கள். மேலும் விஷால் குறித்து முதலமைச்சரிடம் முறையிட உள்ளதாகவும் அவர்கள் கூறினார்கள். 

அதன் தொடர்ச்சியாக விஷால் பதவி விலகக் கோரி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இரு அலுவலகங்களுக்குத் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் பூட்டு போட்டார்கள். இந்த விவகாரம் குறித்து விஷால் தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். 

இதையடுத்து தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் போட்ட பூட்டை உடைக்க விஷால் வியாழன் காலை வந்தார். ஆனால் பூட்டை உடைக்கக் காவல்துறையினர் அனுமதி மறுத்தார்கள். பதிவுத்துறையினர் வந்து பூட்டைத் திறப்பார்கள் என்று காவலர்கள் விஷாலிடம் தகவல் தெரிவித்தார்கள். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் விஷால். எதிர்தரப்பினர் போட்ட பூட்டை உடைக்க அனுமதி மறுத்ததால் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஷால் மற்றும் அவருடைய ஆதரவு தயாரிப்பாளர்கள் பலரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். 

இந்த விவகாரம் தொடர்பாக பாரதிராஜா, ஏ.எல். அழகப்பன், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் தமிழக முதல்வரை வியாழனன்று சந்தித்தார்கள். விஷாலுக்கு எதிரான புகார் மனு முதல்வரிடம் அளிக்கப்பட்டது.  சிறப்பு அதிகாரியை நியமித்து ஒரு நிர்வாகக் குழுவை அமைக்கவேண்டும். விஷால் தலைமையிலான நிர்வாகக் குழுவின் கணக்குகளுக்கு விளக்கம் கேட்கவேண்டும். 4 மாதங்களில் முறையாகத் தேர்தல் நடத்தவேண்டும் போன்ற கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இறுதியாக, தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களில் எதிரணியினர் போட்ட பூட்டுகள் திறக்கப்பட்டுள்ளன. பதிவுத்துறை அதிகாரிகள் தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களின் பூட்டுகளைத் திறந்துள்ளார்கள். காவலர்களால் கைதான விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

திடீர் திருப்பமாக கைதான் விஷால் மீது இரு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சட்டவிரோதமாகக் கூடுதல், பிரச்னைக்குரிய சொத்துகள் குறித்து தகராறில் ஈடுபட்டு அமைதியைக் குலைத்தல் ஆகிய பிரிவுகளில் விஷால் மீது சென்னை - பாண்டி பஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க அலுவலகம் அமைந்துள்ள தி.நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தயாரிப்பாளர் சங்க அலுவலகம் அமைந்துள்ள தி.நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே நான்கு பேருக்கு மேல் அங்கு கூடுதல் தடை செய்யப்படுகிறது.  அத்துடன் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறி விட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com