
தமிழகத்தை கடந்த சில வாரங்களாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீரெட்டி புயலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பிரபலங்களில் நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸும் ஒருவர். ஸ்ரீரெட்டி இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். நல்லவர் போல நடித்து தாம் அடுத்த இயக்கவிருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பளிப்பதாக உறுதியளித்து ராகவா லாரன்ஸ் தம்மிடம் முறையற்று நடந்து கொண்டதாகவும். ஆனால், தம்மை பயன்படுத்திக் கொண்ட பின்னர் ராகவா லாரன்ஸ் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை என்றும் ஸ்ரீரெட்டி தனது முகநூலிலும் செய்தி ஊடக நேர்காணல்களிலும் புகார் தெரிவித்திருந்தார்.
இதை மறுக்கும் விதமாக நடிகர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் தெரிவித்திருக்கும் பதில்...
'ஸ்ரீரெட்டி கூறுவது முற்றிலும் பொய். அவர் தவறு நடந்ததாகக் குறிப்பிடும் சமயத்தில் நான் தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் ‘ரிபெல்’ திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். அத்திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 7 வருடங்களாகின்றன. இத்தனை நாட்களாக புகார் அளிக்காமல் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?
அச்சமயத்தில் ஹோட்டல் அறை ஒன்றில் என்னைச் சந்தித்ததாகக் கூறும் ஸ்ரீரெட்டி, அந்த அறையில் நான் ராகவேந்திர சுவாமி படம் மற்றும் ருத்ராக்ஷம் எல்லாம் வைத்து அறையை பக்திமணம் கமழ வைத்திருந்தாதாக் கூறியுள்ளார். நான் என்ன முட்டாளா? ஹோட்டலில் படுக்கை அறையில் ராகவேந்திர சுவாமி படத்தை வைக்க?!
அவ்வளவு ஏன்? எனக்கு ஸ்ரீரெட்டியைப் பார்த்தால் இப்போதும் கோபம் வரவில்லை. அவரது நேர்காணல்களைக் காணும்போது அவரது நிலையை எண்ணி வருத்தமாகத் தான் இருக்கிறது. இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. நான் பத்திரிகையாளர்களைக் கூட்டுகிறேன். ஸ்ரீரெட்டி அங்கே வந்து நான் சொல்லும் காட்சிக்கு நடித்துக் காட்டி தனது நடிப்புத் திறனை நிரூபிக்கட்டும். சில நடன அசைவுகளைக் கற்றுத் தருகிறேன். அதன்படி ஆடிக் காட்டி நிரூபிக்கட்டும். சோதிக்கிறேன் என்று நான் கடினமான நடன அசைவுகளை செய்து காட்டச் சொல்வேன் என்ற பயமெல்லாம் வேண்டாம். மிக எளிதான நடன அசைவுகளைச் செய்து காட்டினால் போதும். அவர் தனது திறமையை நிரூபிக்க வேண்டும். அது தான் முக்கியம். ஒருவேளை செய்தியாளர்கள் முன்னிலையில் நடித்துக்காட்ட சிரமமாக இருந்தால் ஸ்ரீரெட்டி அவரது வழக்கறிஞர்களை அழைத்து வந்து அவர்கள் முன்னிலையில் நான் வைக்கும் சோதனையில் ஜெயித்து தனது நடிப்பு மற்றும் நடனத் திறமையை நிரூபித்தால் எனது அடுத்த திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்க நான் தயார்.
இதை அவர் மீதான பயத்தில் நான் அறிவிக்கவில்லை. எனக்கு உண்மையிலேயே பெண்கள் மீதுள்ள மரியாதையால் சொல்கிறேன். இல்லாவிட்டால் என் அம்மாவுக்காக நான் கோயில் கட்டினேன் என்ற பெருமையை இழந்தவனாகி விடுவேன்.’
- என்று தெரிவித்திருக்கிறார். நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.