பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளைச் சந்திக்காமல் சென்ற விஜய்: பள்ளி ஆசிரியர் கண்டனம்

படப்பிடிப்புக்குழு ஏதோ பள்ளியையே விலைக்கு வாங்கிவிட்டதுபோல் எங்கள் மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடம் நடந்துகொண்டதெல்லாம் பெரும் அநியாயம்...
படம் - @Vijay64FilmOff
படம் - @Vijay64FilmOff
Published on
Updated on
3 min read

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியானது. தளபதி 64 என்று தற்போதைக்குக் குறிப்பிடப்படும் இந்தப் படத்துக்கு இசை - அனிருத். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. விஜய்யின் 64-வது படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கிறார்கள். 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை - பூந்தமல்லியில் உள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மூன்று நாள்கள் படப்பிடிப்பு நடைபெற்றபோதும், விஜய்யைப் பார்க்க ஆவலாக இருந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை விஜய் சந்திக்காமல் கிளம்பிச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பள்ளியின் ஆசிரியர் சரவண மணிகண்டன் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவு அதிகமாகப் பகிரப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது:

விஜய் அவர்களே,

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு எமது பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்றது. பொதுவாகவே எமது பள்ளியில் எந்தவிதப் படப்பிடிப்பையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான் அங்குப் பயிலும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரின் ஒருமித்த கருத்து. ஆனாலும், இதையும் மீறி, அரசியல் செல்வாக்கு, சொந்தச் செல்வாக்கு என்ற ஏதோ ஒரு காரணத்தில் படப்பிடிப்பிற்கு அனுமதி வாங்கிவிடுகிறீர்கள்.

அதன்பிறகு எமது பள்ளி வளாகம் படும்பாடு அடடா மோசம். ஒரு சிறு தொகையை எங்கோ செலுத்திவிட்டு, இந்த மூன்று நாட்களும் படப்பிடிப்பு என்ற பெயரில் படப்பிடிப்புக்குழு ஏதோ பள்ளியையே விலைக்கு வாங்கிவிட்டதுபோல் எங்கள் மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடம் நடந்துகொண்டதெல்லாம் பெரும் அநியாயம்.

முதலில் எங்கள் மாணவர்களால் தடையின்றிப் பள்ளி வளாகத்தில் நடமாட முடியாதபடிக்கு எங்குப் பார்த்தாலும் கார்கள், வாகனங்கள். பள்ளி முதன்மை நுழைவாயிலில் உங்களைப் (நடிகர் விஜை) பார்ப்பதற்கென்றே ஒரு பெருங்கூட்டம். உள்ளே இருப்பவர்கள் வெளியேற முடியாது. வெளியே இருந்து வருபவர்கள் உள்ளே நுழைய முடியாதபடிக்கு மூன்று நாட்களும் ஏக கெடுபிடிகள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களைப் படித்துக்காட்ட வந்த தன்னார்வலர்களும் தடுத்து நிறுத்தப்பட்டு அதில் சிலர் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். பள்ளி வளாகம் என்கிற புரிதல்கூட இல்லாமல், ஆங்காங்கே புகைபிடிப்பது, குப்பைகள் போடுவது என உங்கள் குழுவினர் மிகவும் அலட்சியமாக நடந்துகொண்டார்கள். உங்கள் படப்பிடிப்புக்குழுவின் மேல்மட்ட நபர்களிலிருந்து, கடைநிலைப் பணியாளர்வரை பெரும்பாலான நபர்களுக்குப் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களை எப்படிக் கையாள்வது, அவர்களைக் கண்ணியக் குறைவின்றி எப்படி நடத்துவது என்கிற அடிப்படைப் புரிதலே இல்லை. 

கடந்த சனிக்கிழமையன்று, உங்களைச் சந்தித்து வெறும் இரண்டே நிமிடங்கள் பேசிவிடவேண்டும் என்ற ஆர்வத்திலும், எதிர்பார்ப்பிலும் எங்கள் பள்ளி மாணவர்கள் சுமார் மூன்று மணி நேரமாகக் குழுமி இருக்க, அவர்களைப் பார்வையுள்ளவர்கள் என்று கருதிக்கொண்டு, சைகை செய்துவிட்டு சென்றுவிட்டீர்கள். 

கடந்த மூன்று நாட்களாக உங்கள் குழுவினர் எங்கள் நிறுவனத்தின்மீது செலுத்திய ஆக்கிரமிப்புகள், அதிகாரங்கள், அதனால் எங்கள் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் என இவை அத்தனையையும், மாணவர்கள் உங்கள் மீது இருக்கிற அன்பினாலும், உங்களிடம் இந்த மூன்று நாட்களில் எப்படியேனும் ஒருமுறையாவது பேசிவிடவேண்டும் என்ற ஆர்வத்தினாலும் பொறுத்துக்கொண்டார்கள். அவர்களின் ஆசிரியர்களாகிய எங்களுக்கும் பயந்துகொண்டு, அதேநேரத்தில் உங்களையும் சந்திக்கிற இந்த அரிதான வாய்ப்பை நழுவவிடக்கூடாதே என்ற எண்ணத்தில், ஒரு இனம்புரியாத தவிப்புடன் இங்கும் அங்கும் அலைந்துகொண்டிருந்ததை ஒரு முடிவுக்குக் கொண்டுவரலாம் என நினைத்து, மாணவர்களை ஒரு இடத்தில் ஒன்றுகூட்டி, உங்களிடம் இரண்டே நிமிடங்கள் பேசவைப்பது என முடிவு செய்தோம்.

அதற்காக ஆசிரியர்கள் இருவர் உங்கள் குழுவினரை அணுகிப் பேசினோம். கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு, முதலில் மாலை நான்கு மணிக்கு என்றார்கள். பிறகு ஆறு மணிக்கு என்றார்கள். அதிலும் உங்கள் மேலாளர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட திரு. உதயக்குமார் கண்டிப்பாக மாலை ஆறுமணிக்குச் சந்திக்கலாம் என்றும், மாணவர்களை ஒருங்கிணைக்குமாறும் கூறிச் சென்றார்.

மாணவர்கள் படப்பிடிப்புத் தளத்திற்கு அருகிலேயே உங்களைச் சந்திக்கும் ஆர்வத்தோடும், விருப்பத்தோடும் மிக அமைதியான முறையில் உங்கள் கண் எதிரே, ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் காத்திருந்தார்கள். இயக்குநர் லோகேஷ் இரண்டு நிமிடங்கள் வந்து மாணவர்களிடம் பேசிவிட்டுச் சென்றார். ஆனால், நிச்சயம் சந்திப்பதாகச் சொல்லப்பட்ட தாங்கள் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, ரகசியமாகக் கிளம்பிவிட்டீர்கள். நீங்கள் கிளம்பிவிட்டீர்கள் என்பதைக்கூட அறியாமல் நீங்கள் வருவீர்கள் என நம்பிக்கையோடு மேலும் அரைமணி நேரம் எங்கள் மாணவர்கள் காத்துக்கொண்டு நின்ற அவலமும் நடந்தேறியது.

சரி, மாணவர்களை விடுங்கள். தாங்கள் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு வந்திருக்கிறீர்கள். நிச்சயம் சில வினாடிகளாவது அவர்களைச் சந்திக்கவேண்டும், அவர்களிடம் உரையாட வேண்டும் என ஒரு சக மனிதனாக ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை? எல்லாப் படப்பிடிப்புத் தளங்களைப் போலவே, இதையும் ஒரு சராசரி இடமாக நினைத்துவிட்டீர்களா? அல்லது பார்வையற்ற இவர்கள் நமது ரசிகர் கணக்கில் வரமாட்டார்கள் என்கிற கணக்கா? ஒவ்வொரு ஆண்டும் உங்கள் பிறந்த தினத்தின்போது, சோறு போட மட்டும் என்கிற பட்டியலில் எங்கள் பள்ளி வைக்கப்பட்டிருக்கிறதா?

ஒரு தனியார் பள்ளியாக இருந்திருந்தால், ஹைஃபை மேடையில் நின்று, மைக் பிடித்து அந்த மாணவர்களிடம் பேசியிருப்பீர்கள்தானே? இல்லாவிட்டால் அந்தப் பள்ளி முதலாளிகள் உங்களை விட்டுவிடுவார்களா என்ன? அரசுப்பள்ளி, அதுவும் பார்வையற்றோர் பள்ளியென்றால் அவ்வளவு குறைவான மதிப்பீடா? 

ஒரு பார்வையுள்ள ரசிகனைப்போல, ஸ்டைல், நடனம், முகபாவனை, மிடுக்கான ஆடை அலங்காரத்தின் வழியே அல்லாமல், வெறும் உங்களின் கோர்வையான வசனங்களால், உங்கள் குரலால் மட்டுமே உங்களின்மீது பிரியமும், பேரன்பும் கொண்டிருக்கிற பார்வை மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கு, எல்லாம் வேஷம் என்பதைப் புரியவைத்தமைக்கு மிக்க நன்றி திரு. விஜய் அவர்களே என்று வேதனையுடன் தன் பதிவை எழுதியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com