அழகின் அழகே மதுபாலா! 

பாலிவுட்டின் மர்லின் மன்றோ யார் என்று கேட்டால் அந்தக் காலத்து இளைஞர்கள் யோசிக்காமல் சொல்லும் பெயர் மதுபாலா.
அழகின் அழகே மதுபாலா! 

பாலிவுட்டின் மர்லின் மன்றோ யார் என்று கேட்டால் அந்தக் காலத்து இளைஞர்கள் யோசிக்காமல் சொல்லும் பெயர் மதுபாலா. அவரது 86-ம் பிறந்த நாளான இன்று (பிப் 14), கூகுள் டூடுள் மதுபாலாவின் புகைப்படத்தை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. அழகு, ஆளுமை, பெண்மை என்று அழகின் இலக்கணமாக மட்டுமல்லாமல், மிகையற்ற நடிப்புத் திறனை வெளிப்படுத்தி அன்றைய ரசிகர்களை பரவசப்படுத்தியவர் மதுபாலா. பாம்பே என்று வழங்கப்பட்ட மும்பையின், ஒரு சேரிப்பகுதியில் பிறந்த மதுபாலா குடும்பத்தை காப்பாற்ற குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கி, அதன் பின் கதாநாயகியானார். எழிலான தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கச் செய்த மாயத்தை திரையில் நிகழ்த்தினார்.

பிப்ரவரி 14, 1933-ம் ஆண்டு தில்லியில் பிறந்த மும்தாஜ் ஜகான் பேகம் தெஹ்லவி மும்பைக்கு இடம்பெயர்ந்து, பாம்பே டாக்கீஸ் ஸ்டூடியோ அருகில் இருந்த வீடொன்றில் வசித்தார். அப்போதுதான் சினிமா உலகம் அவரை ஸ்வீகரித்துக் கொண்டது. ஒன்பது வயதில் பேபி மும்தாஜ் என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். அதன் பின் பதினான்கு வயதில் நீல்கமல் என்ற படத்தில் கதாநாயகியானார். அப்போதிலிருந்து மும்தாஜ் ஜகான் பேகம் மதுபாலாவானார். தன்னுடைய பெற்றோர்களையும் நான்கு சகோதரிகளையும் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை அவருக்கு இருந்தது. ஓய்வில்லாமல் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

மஹால் என்ற வெற்றிப் படத்தை உள்ளடக்கி, 1949-ம் ஆண்டு ஒன்பது படங்களில் நடித்தார் மதுபாலா. மதுபாலாவின் குடும்பச் சித்திரங்கள், நகைச்சுவை படங்கள் மற்றும் காதல் ரசம் ததும்பும் வேடம் என எல்லாவற்றிலும் அசராத நடிப்பால் மிளர்ந்தார் மதுபாலா. இந்த காலகட்டத்தில்தான், அதாவது 1951-ம் ஆண்டு தன்னுடன் தரானா என்ற படத்தில்  கதாநாயகனாக நடித்த திலீப் குமார் மீது காதல் வயப்பட்டார். ஆனால் மதுபாலாவின் தந்தை இந்தக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். வரலாற்றுக் காவியமான முகல்-இ.அஸாம் படத்தில் இந்த ஜோடி தங்களின் தத்ரூபமான நடிப்பாலும், தோற்றத்தாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டனர். மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருந்த அந்தப் படம் பாலிவுட் சரித்திரத்தில் மறக்க முடியாத ஒரு பெயராக நிலைப்பெற்றுவிட்டது.

70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மதுபாலாவை 'உலகின் தலைசிறந்த நடிகை' என்று 1952-ம் ஆண்டு தியேட்டர் ஆர்ட்ஸ் பத்திரிகை புகழாரம் சூட்டி மகிழ்ந்தது. 

2008 - ம் ஆண்டில் இந்திய அரசாங்கம் மதுபாலாவின் உருவப்படத்தை நினைவுத் தபால் தலை முத்திரையாக வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியது. வெள்ளித் திரையில் தோன்றிய பேரழகி என்று இன்றளவும் பலரின் நினைவலையில் நீங்கா இடம் பிடித்திருத்தவர் மதுபாலா.

1969-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதியன்று மதுபாலாவின் திரை வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. காரணம் 36 வயதில் அவர் நோயால் அவதியுற்றார். ராஜ் கபூருடன் நடித்த சலக் என்ற படம் 1966-ல் வெளியாகவிருந்தது, ஆனால், கடுமையான உடல்நலக் குறைவால் அவரால் அந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. லட்சக்கணக்கான ரசிக இதயங்களை சம்பாதித்த மதுபாலா மிகக் குறுகிய காலம் மட்டுமே வாழ்ந்து மறைந்தார். அவரது உடலுக்குத்தான் அந்த மரணம் ஏற்பட்டது, இன்றளவும் தொடரும் அவரது புகழ் இந்திய திரை வரலாற்றில் நிலைபெற்று நிலைக்கிறது என்றால் மிகையல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com