சுடச்சுட

  
  rajini2


  பாசம், நேசம், நட்பு, பழிக்குப் பழி என எல்லாம் உடைந்து சிதறிக் கொண்டே இருக்கும் அவஸ்தையை, போராட்டக் குணத்தை ரஜினியின் ஃபார்முலா திரைக்கதையில் பேசுகிறது படம். 
  கேங்ஸ்டர் படம் என்ற வரையறைக்குள் வராமல், ஆழமான அன்பையும், பாசப் பரிதவிப்பையும் ஆனந்த நெகிழ்ச்சியையும் நுணுக்கமாக பதிவு செய்கிறது திரைக்கதை. 
  ரஜினி என்கிற ஒற்றை மந்திரம்தான் கதையின் எட்டுத்திக்கும் வெடித்து நிற்கிறது. சூப்பர் ஸ்டார் எனும் ஈர்ப்பு விசை மீண்டும் திரைக்கு திரும்பி வந்திருக்கிறது. மனசு ஒத்துழைத்தாலும் உடம்பு மறுக்கிறது என்ற விமர்சனத்தை காட்சிக்கு காட்சி அடித்து நொறுக்குகிறார் ரஜினி. 
  பெரிய இடத்து சிபாரிசுடன்(?) கல்லூரி விடுதி வார்டனாக பணியில் சேருகிறார் ரஜினி. அதுவேகூட, பேட்டையின் தந்திரங்களில் ஒன்றுதானோ? அவர் எதற்காக அந்தக் கல்லூரியில் வேலைக்குச் சேர்கிறார் என்று கேள்வி கேட்கக்கூடாது. கேட்க விடாமல் செய்துவிடுகிறது, ரஜினியின் தடாலடி ஆட்டமும், பாட்டமும், சாகசங்களும்.
  ராகிங்கில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அந்தக் கல்லூரியில் சீனியர் மாணவர் பாபி சிம்ஹா வைத்ததுதான் சட்டம். உள்ளூர் அரசியல் புள்ளியின் மகன் பாபி சிம்ஹாவை தனது அதிரடி நடவடிக்கைகளால் கட்டுக்குள் கொண்டு வருகிறார் ரஜினி. 
  அதிகார வர்க்கம் அலறுகிறது. இதனால் இருவருக்கும் மோதல். ஒரு கட்டத்தில் ரஜினி உள்ளிட்ட அனைத்து சக மாணவர்களையும் அடித்து நொறுக்க திட்டமிடுகிறார் பாபி. இதற்கிடையே கல்லூரியின் இன்னொரு மாணவரை தீர்த்துக் கட்ட களத்தில் குதிக்கிறது வட மாநில ரௌடி கும்பல். மரண மாஸ் காட்டி கும்பலை துவம்சம் செய்கிறார் ரஜினி. 
  யார் அந்த ரௌடி கும்பல்... ரஜினிக்கும் அவர்களுக்குமான பின்னணி என்ன... அந்த மாணவன் யார்... முடிவில் வெல்வது யார்... தடதடத்து பயணிக்கிறது பேட்ட.
  மணல் கொள்ளை, விவசாயம், ஜாதியம், இந்துத்துவா, மாட்டுக்கறி சர்ச்சை, அரசியல் 
  என்ட்ரிக்கான ஆயத்தம் என ஏராளமான அரசியல் குறியீடுகளின் வழியே நகர்கிறது பேட்ட கதை. 
  எங்கெங்கும் ரஜினிதான். ஹீரோயிசத்தோடு கதைக்கான அர்ப்பணிப்பு, தீரா நினைவுகளை மீட்டிக் கொண்டே, சிறகுகள் வலிக்க போராடும் குணம், குடும்பம் என்ற ஒற்றைக் குடையின் கீழ் அன்பு செலுத்தி நிற்கிற கணம், பழியுணர்ச்சி, உறவு, பாசம், சிம்ரனை சந்திக்கிற காட்சி என நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். 
  புருவங்கள் துடிக்கும் ஆக்ஷன், கண்கள் கசியும் காதல், உதிர்க்கும் வார்த்தைகள் என காட்சிகள் எங்கெங்கும் பிரதிபலிக்கிறார். கோபங்களிலும், தாபங்களிலும் கரைந்து நிற்கிறார். 
  பிற்பாதியில் பலே போட வைக்கிறார் நவாசுதீன் சித்திக்கி. தோட்டாக்கள் தெறித்து உடலைத் துளைக்கும் என்று தெரிந்தும், பீடி புகைத்தபடி வேடிக்கை பார்க்குமிடம், சபாஷ் நவாஸ்.
  மாலிக் சசிக்குமார், ஜித்து விஜய்சேதுபதி, இயக்குநர் மகேந்திரன், மேகா ஆகாஷ், ராம்தாஸ், குரு சோமசுந்தரம் என எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால், ரஜினி மட்டும்தான் மனதில் நிற்கிறார்.
  ஒட்டியும் ஒட்டாமலும் வந்து போகும் கதாபாத்திரம் சிம்ரன். ரஜினியுடன் ஜோடி சேராத குறையை தீர்த்துக் கொள்கிறார். ரஜினியுடன் ஜோடி என்பதைவிட த்ரிஷாவுக்கு வேறு வேலை எதுவும் இல்லை. 
  ஆட்டம், பேச்சு, நடை, உடை, ஸ்டைல், வசனம், சிரிப்பு என அனைத்திலும் முழு ரஜினி ஸ்டைலையும் வெளிக்கொணர்ந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்துவதிலேயே குறியாக இருக்கிறது திரைக்கதையின் நகர்வுகள்.
  பனி போர்த்திய மலை அடிவாரத்தில் இருந்து, அனல் அடிக்கும் மதுரை, அங்கிருந்து உத்தரப் பிரதேசத்திற்கு செல்லும் ரோலர் கோஸ்டர் விஷுவல். ரேடியோவில் மலர்ந்தும் மலராத மலரும் நினைவுகள் பாடலோடு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, அடியாட்களுக்காகக் காத்திருக்கும் காட்சி, துக்க வீட்டில் இன்னொரு மரணத்தை நிகழ்த்த ஜஸ்ட் லைக் தட் முடிவு செய்யும் காட்சியென ரஜினிக்கான மாஸ் மொமண்ட்கள் எக்கச்சக்கம்.
  ரஜினிக்கு என்றில்லாமல், கதைக்காகவே வசனங்கள் எழுதி இருந்தாலும், அதை ரஜினி பேசும் போது அவை சரவெடி. இத்தனை காலம் ஒதுங்கி இல்லை... பதுங்கி இருந்தேன்... நேரம் பார்த்து பாய்வதற்காக... இது அதற்கான நேரம்.., இனிதான் தரமான சம்பவத்த பார்க்க போறீங்க... என இது போல பல இடங்களில் ரஜினியின் அரசியல் என்ட்ரிக்கான ஆழம் பார்க்கிறது வசனங்கள். 
  திருவின் ஒளிப்பதிவு, விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பு என எல்லாமே பலம். இன்னொரு கூடுதல் பலம் அனிருத்தின் இசை. இது போல் ரஜினியின் ஓபனிங் சாங் பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகி விட்டன... 
  ஜித்து தீம், சிங்கார் சிங் தீம் எனப் பின்னணி இசையில் அதிர வைக்கிறார் அனிருத். 
  முன் பாதியில் ஏன், எதற்கு என தடதடத்து பயணிக்கிற திரைக்கதை, பிற்பகுதியில் துப்பாக்கித் தோட்டாக்களின் சத்தத்தில் நம்மை சற்று முகம் சுளிக்க வைக்கிறது. இந்த அளவுக்கு வன்முறை தேவைதானா என்று ஏன் சிந்திக்கவில்லை இயக்குநர்?
  ஒரு சில லாஜிக் மீறல்கள் தவிர, திரைக்கதையில் பெரிய பின்னடைவு இல்லை என்பது ஆறுதல். 
  இப்படி ஒரு ரஜினியைப் பார்த்து எவ்வளவு நாள்கள் ஆகிவிட்டன...

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai