Enable Javscript for better performance
DID YOU FORGET ACTRESS MANTHRA?!- Dinamani

சுடச்சுட

  
  MANTHRA

  ACTRESS MANTHRA

   

  நடிகை மந்த்ராவை ஞாபகமிருக்கிறதா? ஏன் இல்லாமல்? மறக்க முடியுமா மந்த்ராவை? நடிகர் அருண் விஜயின் அறிமுக நாயகி என்பதை விட அஜித்தின் ‘ரெட்டை ஜடை வயசு’ திரைப்பட நாயகி என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியுமே என்கிறீர்களா? சரிதான்.. அவர் மீண்டும் திரைப்படங்களில் தோன்றவிருக்கிறாராம். இம்முறை அம்மாவாக என்கிறார். சமீபத்தில் மா டி வி புகழ் ‘அலிதோ சரதாக’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட பட பட்டாசு வெடித்தார் மந்த்ரா.. அடடா! நமக்குத்தான் அவர் மந்த்ரா.. அக்கடபூமியில் அவரது பெயர் ராசி. 

  குழந்தை நட்சத்திரமாக தெலுங்கில் அறிமுகமான ராசி, பிறகு அங்கேயே நாயகியும் ஆனார். பிரபல ஹீரோக்களோடு நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் அருண் விஜய் ஜோடியாக ’ப்ரியம்’ திரைப்படத்தில் அறிமுகமானார். படம் சுமாராக ஓடியது. அடுத்தடுத்து தமிழிலும் படங்கள் ஒப்பந்தமாயின. தமிழில் அஜித், விஜய், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சரத்குமார், என அனைவருடனும் நடித்தார். ஒருகாலத்தில் கோலிவுட்டில் ஹீரோக்களை விட அதிகம் சம்பளம் வாங்கிய நடிகை என்று கூட இவரைப் பற்றிய செய்திகள் உண்டு. ஆனால், என்ன ஆனதோ தெரியவில்லை இவரது பட வாய்ப்புகள் தீடீரென குறையத் தொடங்கின. 

  முக லாவண்யம் அப்படியே இருக்க உடல் மட்டும் குண்டாகிக் கொண்டே போனது தான் அதற்கு காரணம் என்றன அன்றைய ஊடகங்கள். மந்த்ரா அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை. கார்த்திக், பப்லு ஜோடியாக என ஜாலியாக சில படங்களில் இரண்டாம் நாயகி வேடம் ஏற்றார். ஊட்டியில் படப்பிடிப்பில் இருக்கும் போது தந்தை இறந்து விட்டார் என்று தகவல் வந்தது. நொறுங்கிப் போனார். மந்த்ராவுக்கு எல்லாமே அப்பா தான். பாசமான அப்பாவாக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த தோழனாகவும் அன்பு காட்டிய அப்பாவை இழந்தது தனக்கு மிகப்பெரிய நஷ்டம் என்கிறார் மந்த்ரா. அப்பா இறந்ததும் உடைந்த மனது அதன் பிறகு அத்தனை லேசில் அந்த இழப்பை ஏற்றுக் கொள்ளாமல் தவித்த வேளையில் வந்து சேர்ந்தவர் தான் மந்த்ராவின் கணவர். காதல் திருமணம் தான். 5 வயதில் மகள் இருக்கிறார். கணவரும் திரைத்துறையைச் சார்ந்தவரே. வெப் சீரிஸ்கள் இயக்குவதில் ஆர்வமாயிருக்கும் மந்த்ராவின் கணவர் அவருக்கொரு சிறந்த நண்பரும் கூட.

  தன் வாழ்வில் இனிமேல் நடிக்க விரும்பாத இயக்குனர் ஒருவரைக் குறிப்பிடச் சொன்னால், மந்த்ரா இயக்குனர் தேஜாவைக் குறிப்பிடுகிறார்.

  ஆமாம், தெலுங்குப் படமொன்றில் கோபிசந்த் ஜோடியாக மிக மோசமான நெகட்டிவ் கதாபாத்திரமொன்றில் நடிக்க வைத்து விட்டார் என்ற மனக்குமுறல் இன்னும் தீரவில்லை மந்த்ராவுக்கு.

  அந்தப் படத்தில் எதிர்மறையாக நடித்த காரணத்தால் தான் சிரஞ்சீவியுடன் நடிக்க இருந்த வாய்ப்பு பறிபோனதாகக் கருதுகிறார் மந்த்ரா.

  அது மட்டுமல்ல, சிரஞ்சீவியின் மனைவி சுரேகாவுக்கு மிகப்பிடித்த நடிகை என்றால் இன்றளவும் அது மந்த்ரா தானாம். நம்மூர் தேசிய விருது டைரக்டர் அகத்தியன் இயக்கிய ‘கோகுலத்தில் சீத’ திரைப்படம் தெலுங்கில் ‘கோகுலம்லோ சீதா’ என்ற பெயரில் படமானது. தயாரிப்பு சுரேகா கொனிடேலா. படத்தின் நாயகன் சிரஞ்சீவியின் தம்பி பவண் கல்யாண். அதில் தமிழில் சுவலட்சுமி ஏற்ற கதாபாத்திரத்தை தெலுங்கில் மந்த்ரா ஏற்று நடித்திருந்தார். படத்தில் மந்த்ராவின் நடிப்பு எந்த விதத்திலும் சோடை போகவில்லை. நடிக்கத் தெரிந்த நடிகையாக இருந்தும் தமிழில் மந்த்ராவுக்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தக் கூடிய சரியான வேடங்கள் அமையவில்லை. வெறும் கவர்ச்சிப் பதுமையாகவே பல படங்களில் வந்து போனார். அது ஏனோ!? 

  பிஸியாக நடித்துக் கொண்டிருந்த வரையில் மந்த்ராவின் மிக நெருங்கிய தோழியாக இருந்தவர் மறைந்த நடிகை செளந்தர்யா. அவரது இறப்பு தன்னை இன்றளவும் மிகுதியாகப் பாதிக்கிறது என்கிறார் மந்த்ரா.

  சமீபத்தில் மீண்டும் சிரஞ்சீவியின் மனைவி சுரேகாவின் பட நிறுவனத்திலிருந்து ‘ரங்கஸ்தலம்’ திரைப்படத்தில் ரங்கம்மா அத்தை என்றொரு கேரக்டரில் நடிக்க மந்த்ராவுக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஆனால், இவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்கு அது ஒத்து வராது என்று ஒரே முடிவாகச் சொல்லி விட்டாராம்.

  தற்போது மெகா சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் மந்த்ரா கூடிய விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் அம்மா, அக்கா, அண்ணி வேடங்களில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

  மந்த்ரா எதிர்பார்ப்பது ‘அத்தாரிண்டிகி தாரேதி’ நதியா மற்றும் தமிழில் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன் திரைப்படத்து ரம்யா கிருஷ்ணன் ரக கேரக்டர்களையாம்.

  நன்றி: அலிதோ சரதாக ரியாலிட்டி ஷோ

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai