டோலிவுட் சின்னத்திரை, பெரியதிரை மைனர்களுக்கு ஒரு ஸ்ரீரெட்டி பத்தாது போல இருக்கே!

அவர்கள் காயத்ரி குப்தாவிடம் கேட்டிருந்த அதே அபத்தமான அசிங்கக் கேள்வியொன்றை ஸ்வேதா ரெட்டியிடமும் கேட்டிருந்தார்கள். ‘பாஸைத் திருப்திப்படுத்த நீ என்ன செய்வதாக இருக்கிறாய்?’ என்பது தான் அந்தக் கேள்வி
டோலிவுட் சின்னத்திரை, பெரியதிரை மைனர்களுக்கு ஒரு ஸ்ரீரெட்டி பத்தாது போல இருக்கே!

தகவல் தெலுங்கு பிக்பாஸ் சீஸன் 3 ஒருங்கிணைப்பாளர்களைப் பற்றியதாகவே இருந்த போதும் தலைப்பில் ஏன் பிக்பாஸை குறிப்பிடவில்லை என்றால் அந்த ரியாலிட்டி ஷோ தமிழ்நாட்டுக்கும் சரி ஆந்திராவுக்கும் சரி தேவையே இல்லாத ஒரு வெட்டி நிகழ்ச்சி என்பதால் தான். 

சரி இனி விஷயத்திற்குள் செல்வோம். 

பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சிக்காக தெலுங்கு ஸ்டார் மா தொலைக்காட்சி சார்பில் நடிகையும் தொலைக்காட்சி வர்ணனனையாளருமான காயத்ரி குப்தா என்பவர் கடந்த மாதமே அணுகப்பட்டிருக்கிறார். அவரிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொள்வதற்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் குறித்தெல்லாம் தெளிவாகப் பேசி ஒப்பந்தமும் போட்டிருக்கிறார்கள். அப்போது, தனக்கிருக்கும் ஆரோக்யக் குறைபாட்டை குறிப்பிட்டு அதற்கான சிகிச்சை மற்றும் மருந்து வசதிகள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதையும் தனது விண்ணப்பங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டு அதற்கு ஸ்டார்மா தரப்பில் ஒப்புதலும் பெற்றிருக்கிறார் காயத்ரி. காயத்ரியை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு அவரைப் பற்றிய தகவல்களையும் அவரது ஒப்புதலையும் பெறுவதற்காக ஸ்டார் மா சேனலின் பிக்பாஸ் சீஸன் 3 ஒருங்கிணைப்பாளர்களான அபிஷேக், ரவிகாந்த், ரகு உள்ளிட்ட மூவர் குழுவினர் காயத்ரியின் வீட்டுக்கே சென்று அவரைச் சந்தித்திருக்கிறார்கள். அப்படித்தான் ஸ்டார்மா நடத்தும் பிக்பாஸ் சீஸன் 3 போட்டியாளரானார் காயத்ரி குப்தா. அதற்காக 100 நாட்களுக்கு அவருடைய தேதிகள் முடக்கப்பட்டதோடு வேறு எந்த ஒரு படத்திலோ அல்லது தொலைக்காட்சி ஷோக்களிலோ பங்கு பெறக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. எல்லாம் முடிந்து போட்டி தேதி அறிவிக்கப்படவிருக்கும் நேரத்தில் காயத்ரி குப்தா, தன்னை ஒப்பந்தம் செய்த ஸ்டார்மா ஒருங்கிணைப்பாளர்கள் மூவர் மீது பாலியல் வன்முறை குற்றத்தின் கீழ் பஞ்சாரா ஹில்ஸ் காவல்நிலையத்தில் ஜூலை 14 ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.

காயத்ரி அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்டார்மா பிக்பாஸ் ஒருங்கிணைப்பாளர்களான ரகு, ரவிகாந்த், அபிஷேக் மூவர் மீதும் ஐபிசி 354 ஏ (iv) (பாலியல் கருத்துக்களை வெளியிடுவது, பாலியல் துன்புறுத்தல் குற்றத்தின் கீழ் குற்றவாளிகளாக எஃப் ஐ ஆர் போடப்பட்டு வழக்குப் பதியப்பட்டுள்ளது.

காயத்ரியை காவல்நிலையம் வரை செல்ல வைத்தது அபிஷேக்கின் அத்துமீறலான கேள்வியே;

ஷோவில் பங்கேற்க காயத்ரிக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை, 100 நாட்கள் யாருடனும் தொடர்பில் இருக்கக் கூடாது எனும் நிபந்தனை, 100 நாட்களுக்கும் அலைபேசி உபயோகிக்கக் கூடாது எனும் நிபந்தனையைத் தொடர்ந்து காயத்ரியிடம் அபிஷேக் வேறொரு அதிகப்படி கேள்வியும் கேட்டிருக்கிறார்.

100 நாட்கள் அலைபேசி இல்லாமல் உன்னால் இருந்து விட முடியும் என்கிறாய், சரி நம்பலாம். அலைபேசி இல்லாமல் இருந்து விடுவாய் என்பதெல்லாம் சரி, ஆனால் செக்ஸ் இல்லாமல் உன்னால் இருக்க முடியுமா? என்று அபத்தமாகக் கேள்வி கேட்டிருக்கிறார். அதோடு நிறுத்தியிருந்தால் காயத்ரி என்ன செய்திருப்பாரோ, அதைத் தொடர்ந்து மேலும் ஒரு கேள்வி அபிஷேக்கிடம் இருந்து வந்திருக்கிறது;

பிக்பாஸில் போட்டியாளரான பின் பாஸை வசீகரிக்க நீ என்ன செய்வதாக இருக்கிறாய்? என்பது தான் அந்தக் கேள்வி.

இதில் கொதித்துப் போன காயத்ரி உடனடியாகக் காவல்துறையை அணுகி சம்மந்தப்பட்ட மூவர் மீதும் பாலியல் வன்முறை புகார் அளிக்கவே உடனடியாக ஜூன் 25 ஆம் தேதி காயத்ரியைத் தொடர்பு கொண்ட ரவிகாந்த், காயத்ரியுடனான பிக்பாஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்றும், இனி அவர் பிக்பாஸ் சீஸன் 3 ல் இல்லை என்றும் அறிவித்திருக்கிறார். இதில் காயத்ரிக்கு எக்கச்சக்க ஷாக். குழி பறித்ததும் இல்லாமல் குதிரை குப்புறத்தள்ளிய கதையாக இருக்கிறதே என்று ரொம்பவும் கொந்தளித்துப் போயிருக்கிறார். 

காயத்ரியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்ன கேள்விக்கு... காயத்ரியின் உடல்நலக்குறைபாட்டைக் காரணம் காட்டியுள்ளது ஸ்டார்மா பிக்பாஸ் தரப்பு.

காயத்ரி குப்தா சாக்‌ஷி தொலைக்காட்சியில் வர்ணனையாளராகப் பணிபுரிந்து கொண்டே திரைப்படங்களிலும் நடித்து வந்தவர். சமீபத்தில் சாய்பல்லவி நடித்து தெலுங்கில் மெகா ஹிட் அடித்த ஃபிடா படத்தில் சாய் பல்லவியின் தோழியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காயத்ரி மட்டுமல்ல, அவரைப்போலவே ஸ்வேதா ரெட்டி எனும் பத்திரிகையாளர் ஒருவரும் இரு நாட்களுக்கு முன்பு ஸ்டார் மா தொலைக்காட்சியின் பிக்பாஸ் சீஸன் 3 ஒருங்கிணைப்பாளர்கள் அபிஷேக் மற்றும் ரவிகாந்த் மீது இதே ரீதியில் பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார். அவர்கள் காயத்ரி குப்தாவிடம் கேட்டிருந்த அதே அபத்தமான அசிங்கக் கேள்வியொன்றை ஸ்வேதா ரெட்டியிடமும் கேட்டிருந்தார்கள். ‘பாஸைத் திருப்திப்படுத்த நீ என்ன செய்வதாக இருக்கிறாய்?’ என்பது தான் அந்தக் கேள்வி. ஸ்வேதா, தனது கண்டனத்தை ஊடகத்தினரிடையே வெளிப்படுத்தி விட்டு, ‘இப்படியான ரியாலிட்டி ஷோவில் நிச்சயம் நான் கலந்து கொள்ளப் போவது இல்லை என்பதை விட இப்படியான ஷோக்கள் நிச்சயம் தடை செய்யப்பட வேண்டும்’ என்றும் கோரி பிக்பாஸ் ஒருங்கிணைப்பாளர்களின் இருட்டுப் பக்கங்களைத் தோலுரித்துக் காட்டியிருந்தார்.

இந்த விஷயத்தில் பிக்பாஸ் ஒருங்கிணைப்பாளர்கள் பாஸ் என்று குறிப்பிட்டது யாரை? என்பது குறித்த தெளிவான விவரங்கள் எதுவும் காயத்ரி & ஸ்வேதா என இருவருக்குமே தெரியவில்லை. 

இப்போது தலைப்புக்கு வரலாம்.

டோலிவுட் சின்னத்திரை, பெரிய திரை மைனர்களுக்கு ஒரு ஸ்ரீரெட்டி பத்தாது போல இருக்கே! என்பது இந்தக் கட்டுரைக்கு சரியான தலைப்பு தானே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com