'அன்பு அனாதை இல்லை' - உலக மக்களின் மனங்களை வென்ற பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகேன்!

'அன்பு ஒன்றே அனாதை' என்று அன்புக்காக ஏங்கிய பிக் பாஸ் முகேனுக்கு இன்று உலக மக்களின் அமோக ஆதரவுடன் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் கிடைத்துள்ளது.
'அன்பு அனாதை இல்லை' - உலக மக்களின் மனங்களை வென்ற பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகேன்!

'அன்பு ஒன்றே அனாதை' என்று அன்புக்காக ஏங்கிய பிக் பாஸ் முகேனுக்கு இன்று உலக மக்களின் அமோக ஆதரவுடன் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் கிடைத்துள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி கடந்த ஜூன் 23ம் தேதி தொடங்கி, 105 நாட்களுடன் நேற்றுடன் முடிவடைந்தது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், 100 நாட்களைக் கடந்து பிக் பாஸ் வீட்டில் முகேன், லாஸ்லியா, சாண்டி, ஷெரின் ஆகிய 4 பேர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வாகினர்.  நடிகர் கமல் ஹாசன் மூன்றாவது முறையாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

நேற்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் டைட்டில் வின்னரை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதிப் போட்டியாளர்களாக இருந்த நால்வரில் ஒருவர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலையில், ஷெரின் வெளியேற்றப்பட்டார். 

பின்னர் மூன்றாம் இடத்துடன் லாஸ்லியா வெளியேற்றப்பட்டார். சிறப்பு விருந்தினராக நடிகை ஸ்ருதி ஹாசன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று லாஸ்லியாவை அழைத்து வந்தார். இறுதியாக  பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை முகேன் பெற்றுள்ளார்.  முகேனைத் தொடர்ந்து, ரன்னர் (இரண்டாம்) பட்டத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பெற்றார். 

மலேசியாவைச் சேர்ந்த முகேனுக்கு அங்கு மலேசிய மற்றும் தமிழ் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அவரே எழுதி பாடிய பல பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. மலேசிய இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவார். தனது வாய்ப்புக்காக காத்திருந்த அவருக்கு பிக் பாஸில் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 

முகேனைப் பொறுத்தவரை பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் இரண்டு வாரங்களில் அவர் சற்று பின்தங்கியே இருந்தார். தொடர்ந்து, அபிராமியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பிரபலமானார். ஆனால், கலைப்பொருட்கள் செய்வது மற்றும் பாடல்கள் பாடுவது என அசத்தி வந்தார். 

அபிராமியுடன் ஏற்பட்ட பிரச்னைக்கு பின்னர், கடைசி சில வாரங்களில் விஸ்வரூபம் எடுத்தார் என்று தான் கூற வேண்டும். மிகவும் நேர்மையாக விளையாடிய போட்டியாளர் என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல், முகேனை அடிக்கடி கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது. 

பிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகையின் போது, முகேன் நன்கு அறியப்பட்டார். அனைத்துப் போட்டியாளர்களின் குடும்பத்தினரிடம் தனி அன்பைப் பெற்றார். வரும் விருந்தினர்களுக்குக் கலைப் பொருட்களை செய்து பரிசளித்து மகிழ்வித்தார். 

தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த தர்ஷனுக்கு கடும் போட்டியாளராக மாறினார் முகேன். அனைத்து டாஸ்க்குகளிலும் சிறப்பாக பங்கேற்ற தர்ஷன்தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக இருப்பார் என்று தொடக்கம் முதல் பிக்பாஸ் போட்டியாளர்களாலேயே பேசப்பட்டு வந்தது. ஆனால், கடந்த வாரம் கடைசி எலிமினேஷனில் தர்ஷன் வெளியேற்றப்பட்டது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், தர்ஷன் - முகேனுக்கும் இடையேயான நட்பும் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. 

கடைசி வாரத்தில் 'கோல்டன் டிக்கெட் ஃபினாலே' டாஸ்க்கில் முகேன் வெற்றி பெற்று முதலாவது நபராக இறுதிப் போட்டிக்குத் தேர்வானார். கடந்த இரண்டு சீசன்களிலும் கோல்டன் டிக்கெட் பெற்றவர்கள், டைட்டில் வின்னர் பட்டத்தைப் பெற்றதில்லை. கடந்த முதல் இரண்டு சீசன்களிலும் முறையே சினேகன் மற்றும் ஜனனி ஆகியோர் கோல்டன் டிக்கெட் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால், முதல்முறையாக முகேன் கோல்டன் டிக்கெட்டுடன் பிக் பாஸ் வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த முகேன், சிறுவயதில் இருந்தே தனக்கு தேவையானவற்றை தானே பூர்த்தி செய்துகொள்வாராம். பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதை விற்று வரும் பணத்தை உபயோகிப்பாராம். செலவுக்கு பணம் இல்லாததால் கால் டாக்சியும் ஓட்டியுள்ளார்.

தொடர்ந்து, சிறு வயதில் இருந்தே இருந்த இசை ஆர்வத்தில், நண்பர்கள் ஊக்குவிக்க பாடல்கள் எழுதி பாடியுள்ளார். இவரது பாடல்கள் 'யூ ட்யூப்-இல் பல மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. பிக் பாஸ் வீட்டில் அவர் பாடிய 'நீ தான் நீ தான்..' பாடலும் பிரபலமானது. அவர் மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். 

இறுதிப் போட்டியில் மட்டும் முகேன் 7 கோடியே 64 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com